திண்ணை!
நம் கோபத்தையும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் எதிரிலிருப்பவன் தீர்மானிக்கக் கூடாது. அது, நம் கையில் தான் உள்ளது என்பதற்கு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறந்த உதாரணமாக விளங்கியவர். அப்துல் கலாம் ஜனாதிபதி பதவி ஏற்ற போது, 'உங்களுடைய சொந்த ஊர் எது?' எனக் கேட்டார், பத்திரிகை நிருபர் ஒருவர். 'நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன்...' என்றார், அப்துல் கலாம். 'உங்கள் ஊர் மட்டும் தான் சொர்க்கமா?' எனக் கேட்டார், நிருபர். 'பாரத மாதாவை ஒரு தாயாக பாவித்தால், அவரது பாதத்தில், ராமேஸ்வரம் உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தின் படி, தாயின் பாதம் தான், சொர்க்கமாக கருதப்படுகிறது. என் பாரத தாயின் பாதமாகிய ராமேஸ்வரத்தில் இருந்து வருவதால் தான், சொர்க்கத்தில் இருந்து வருவதாக சொன்னேன்...' என்றார், அப்துல் கலாம். *******பள்ளியில், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, அப்துல் கலாமின் மனதில் ஒரு நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை, தன் பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கு அழைக்க விரும்பி, கலாமும், நண்பர்கள் சிலரும், பள்ளி தலைமையாசிரியருக்கு தெரியாமல், சென்னைக்கு ரயில் ஏறினர். சென்னையில், அண்ணாதுரை வீட்டிற்கு சென்று, அவரை பள்ளி ஆண்டு விழாவுக்கு வரும்படி அழைத்தனர், கலாமும், அவரது நண்பர்களும். 'நேரம் கிடைத்தால் நிச்சயம் வருகிறேன்...' எனக் கூறி, அவர்களை அனுப்பி வைத்தார், அண்ணாதுரை. சில நாட்கள் கழித்து பள்ளிக்கு, அண்ணாதுரை வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. பின், கலாமும், நண்பர்களும் தலைமையாசிரியரிடம் நடந்ததை விவரித்தனர். கோபத்துடன், 'இனி இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம்...' என, அறிவுரை கூறியவர், பின் சமாதானமாகி, 'ஆனது ஆகட்டும், அண்ணாதுரையை சிறப்பான முறையில் வரவேற்போம்...' என்றார், தலைமையாசிரியர். ஆண்டு விழாவும் வந்தது. பள்ளி மட்டுமல்லாமல், ராமநாதபுரம் மாவட்டமே கோலாகலமான கொண்டாட்டத்துடன், அண்ணாதுரையை வரவேற்க தயாரானது. மேடை ஏறிய, அண்ணாதுரை, மாணவர்களை பார்த்து, 'என்ன தலைப்பில் பேசலாம்?' என கேட்க, 'நதிகள்' எனும் தலைப்பை இறுதி செய்தனர், மாணவர்கள். அண்ணாதுரையின் பேச்சு, கொடுக்கப்பட்ட தலைப்பை போல, நதி வெள்ளம் மடை திறந்து ஓடியது. சுமார், ஒன்றரை மணி நேர பேச்சில், இந்தியா முதல் ரஷியா, சீனா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் சிந்து நாகரிகம் என, ஒட்டுமொத்த உலகையும், நதிநீரின் அவசியத்தையும் கண்முன் கொண்டு வந்தார். அக்கணம் தான், கலாமின் நெஞ்சில், நதி நீரின் முக்கியத்துவமும், அதன் இணைப்பும் பசுமரத்தாணி போல, பதிய துவங்கியது. பின்னாளில், நதி நீர் இணைப்பு குறித்து, கலாம் பேச, அண்ணாதுரையின் அந்த பேச்சு உந்துதலாக இருந்தது. ******முன்னாள் பிரதமர் வாஜ்பாயை முதன்முதலில் அப்துல் கலாம் சந்தித்த தருணம், மிக சுவாரஸ்யமானது. ஆக., 1980ல், எஸ்.எல்.வி., - 3 ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட்டது. அதையடுத்து, நடந்த கூட்டத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா, பேராசிரியர் சதீஷ் தவான், நாடாளுமன்ற முக்கிய உறுப்பினர்கள் மற்றும் கலாம் என, அனைவரும் குழுமியிருந்தனர். அப்துல் கலாமை, வாஜ்பாய் சந்திப்பது அதுவே முதல்முறை. இந்த கூட்டத்திற்கான அழைப்பு வந்தவுடன், சதீஷ் தவானிடம், 'என்னிடம் நல்ல சூட் உடைகளோ, நல்ல காலணிகளோ இல்லை. சாதாரண செருப்பு மட்டுமே உள்ளது...' என்றார், கலாம். 'கலாம், நீ ஏற்கனவே வெற்றி எனும் ஆடையை அணிந்து கொண்டிருக்கிறாய். நீ, நிச்சயம் அங்கு வரவேண்டும்...' என, புன்னகையுடன் கூறினார், சதீஷ் தவான். அந்த கூட்டத்தில், இந்திரா, அப்துல் கலாமை அறிமுகப்படுத்திய போது, கலாமை ஆரத்தழுவி வரவேற்றார், வாஜ்பாய். இதை பார்த்து, குறும்பு சிரிப்புடன், 'அடல்ஜி, நீங்கள் ஆரத்தழுவிய கலாம், ஒரு இஸ்லாமியர்...' என்றார், இந்திரா. 'இருக்கட்டுமே. அதற்கு முன், அவர் ஒரு இந்தியர்; மேலும், ஒரு விஞ்ஞானி...' என்றார், வாஜ்பாய். - நடுத்தெரு நாராயணன்