உள்ளூர் செய்திகள்

திண்ணை!

மு.அப்பாஸ் மந்திரி எழுதிய, 'பக்கம் ஒரு படிப்பினை' என்ற நுாலிலிருந்து: இ ந்தியாவின் பிரதமராக, லால் பகதுார் சாஸ்திரி, இருந்தபோது ஒருநாள் அவரை பேட்டி எடுக்கவும், புகைப்படம் எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கவும் விரும்பினர், பத்திரிகை நிருபர்கள். ஆனால், அதற்கான அனுமதி தரவில்லை, சாஸ்திரி. 'ஏன்?' என்று கேட்டார், சாஸ்திரியின் உதவியாளர். அதற்கு, 'தாஜ்மஹால் உருவாவதற்கு, இரண்டு வகை கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று கட்டடத்திற்கு அடித்தளமாக பயன்பட்ட, பாறாங்கற்கள். மற்றொன்று அழகிற்காக பயன்பட்ட, சலவைக் கற்கள். அவற்றில் பாறாங்கற்கள் தான், அந்தக் கட்டடத்தை தாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை வெளியில் தெரிவதில்லை. ஒரு மனிதன் எவ்வளவு தான் புகழ் பெற்றிருந்தாலும், வெளியில் தெரியாத பாறாங்கற்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று, என் ஆசிரியர் சொல்வார். அதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன். ஆகவே, எனக்கு எந்த விளம்பரமும் வேண்டாம்...' என்று கூறினார், லால் பகதுார். ********* தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், புரட்சிக்கவி பாரதியின் மேல் மிகுந்த பற்று கொண்டவர். ஒருசமயம், அவர் திருவாவடுதுறை ஆதினம் ஒருவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடம், பாரதியின் கவித்திறனை பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசினார். அதைக்கேட்ட, ஆதினத்திற்கு உடனே, பாரதியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. பாரதியை மடத்துக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். விஷயத்தை அறிந்த பாரதி, 'அன்பரே, இலக்கண இலக்கியங்களை நிறையக் கற்றறிந்தவர்கள் தான் அந்த சன்னிதானத்துக்கு போகத் தகுதியுடையவர்கள். எனக்கு அந்த தகுதியில்லை...' என்று சொல்லி, அந்த ஆளைத்திருப்பி அனுப்பி விட்டார். 'மகாகவி' என்று பெயர் பெற்றிருந்தும், அவரது தன்னடக்கத்தை எண்ணிப் பெரிதும் வியந்தார், திருவாவடுதுறை ஆதினம். ****** ஒரு சமயம், தமிழறிஞர், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஒரு கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அப்போது, அங்கு கூடியிருந்த பெண்கள் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர். பெண்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள். ஆனாலும், பெண்களின் பேச்சு அடங்கவில்லை. அப்போது, பண்டிதமணி எழுந்து, 'பெண்-மணிகள் அல்லவா. மணிகள் ஒலிக்காமல் இருக்குமா? அவை ஒலித்துக் கொண்டு தானே இருக்கும்...' என்றார். அதைக்கேட்டதும், பெண்கள் அனைவரும் சிரித்து, பின் அமைதியாயினர். அதன்பின்னரே கூட்டம் நடந்தது. ******** ராமநாதபுரத்தில், முருகன் கோவில் ஒன்றின் திருப்பணி பல ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடந்து கொண்டிருந்தது. தவத்திரு சுந்தர சுவாமிகள், ஒருசமயம் சாண்டோ சின்னப்ப தேவரை சந்தித்து, 'எங்கள் ஊரில் முருகன் கோவில் திருப்பணி நடைபெறுகிறது; அங்குள்ள அனைவரும் ஏழைகள். தாங்கள், 5 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக தந்தால் நல்லது...' என, தயங்கி தயங்கி கேட்டார். சிரித்துக்கொண்டே, 'அந்த திருப்பணிக்கு மொத்தம் எவ்வளவு ரூபாய் ஆகும் என்று சொல்லுங்கள்...' எனக் கேட்டார், தேவர். உடனே, 'மண்டபத்திற்கு, 5 ஆயிரம் ரூபாய், கொடி மரத்திற்கு, 2000 ரூபாய், கோபுரத்திற்கு 6 ஆயிரம் ரூபாய், கோவிலுக்குள் இருக்கும், ராமர் கோவிலுக்கு 7 ஆயிரம் ரூபாய் என, கூறினார். உடனே அமைதியானார், தேவர். பிறகு தலை நிமிர்ந்து, 'முருகன் கோவிலைத் தவிர, வேறு கோவில்களுக்கு பணம் தருவதில்லை என்று விரதம். நீங்களோ என் குருநாதர். இப்ப பெரிய தர்மசங்கடம்...' என்றார். உடனே, 'ராமர் கோவிலுக்கு பணம் தந்து, விரத பங்கம் வேண்டாம். மீதி தொகையை மட்டும் தந்தால் போதும்...' என்றார், சுந்தர சுவாமிகள். அதற்கு, 'விரதபங்கம் ஆனாலும் குற்றமில்லை. குருநாதர் சொல்லுக்கு மறுவார்த்தை கூறக்கூடாது. இதோ தந்தேன்...' என, 25 ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டார், தேவர். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !