உள்ளூர் செய்திகள்

திருப்பதி லட்டு!

திருப்பதி என்றதும், அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஒன்று, ஏழுமலையான்; மற்றொன்று, அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான்.உலகம் முழுவதும் லட்டு செய்யப்பட்டாலும் சுவை, மணம் ஆகியவற்றில் திருப்பதி லட்டின் சுவையே தனி தான். இந்த தனித்துவமான திருப்பதி லட்டின் வரலாறு பற்றிய சுவாரஸ்யங்களை பார்ப்போம். திருப்பதியில், கி.பி., 1445ம் ஆண்டு வரை, திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகு, எளிதில் கெட்டு போகாமல் இருக்கும், சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின், 1455ல் இருந்து, அப்பம் கொடுக்க துவங்கினர். 1460ல் அது, வடையாக மாற்றப்பட்டது.பிறகு, 1468ல், வடைக்கு பதில் அதிரசமும், 1547ம் ஆண்டு முதல், மனோஹரம் எனப்படும் இனிப்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதற்கு பிறகு, 1803ம் ஆண்டு, மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத வினியோக முறையின் படி, பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. கடந்த, 1940 முதல், பூந்தி விற்பனை நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக, லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதன் தனிச்சுவை அனைவரையும் கவர்ந்து, உலகப் புகழ் பெற்றதாக மாறியது. கள்ள சந்தையில், போலி திருப்பதி லட்டுகள் விற்பனையை தடுக்க, 2008ல், திருப்பதி லட்டுக்கு, புவிசார் குறியீடு பெற்றது, திருமலை திருப்பதி தேவஸ்தானம். 1999ம் ஆண்டே, பதிவு செய்யப் பட்டதால், திருப்பதி லட்டு என்ற, பெயரில் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. திருமலையில் உள்ள மடப்பள்ளியில் மட்டுமே திருப்பதி லட்டு தயாரிக்கப் படுகிறது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும், 3.5 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. மொத்தம், 620 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ப்ரோக்தம் லட்டு, அஸ்தனம் லட்டு, கல்யாணோற்சவம் லட்டு என, மூன்று வகையான லட்டுகள் திருமலையில் தயார் செய்யப்படுகிறது. இதில், ப்ரோக்தம் லட்டு, சிறிய அளவில் இருக்கும். இது, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இதன் எடை, 175 கிராம். அஸ்தனம் லட்டு, சிறப்பு திருவிழா காலங்களில் மட்டும் தயார் செய்யப்படும். இதன் எடை, 750 கிராம். கல்யாணோற்சவத்திற்கு செய்யப்படும் லட்டு, கல்யாண உற்சவம் மற்றும் சில ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும், பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதன் எடை, 1,750 கிராம் இருக்கும். இந்த லட்டு வாங்குவதற்கு தான், அதிக போட்டி இருக்கும். மிக குறைந்த அளவிலேயே இவை தயார் செய்யப்படுகின்றன. திருப்பதி லட்டு, 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் வகையில் தயார் செய்யப்படுவதே, இதன் தனித்துவம். ஒரு நாளைக்கு லட்டு தயாரிக்க, 10 டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி பருப்பு, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ வெல்லம், 540 கிலோ உலர் திராட்சை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. டெண்டர் அடிப்படையில் இந்த பொருட்களை தேவஸ்தான நிர்வாகம் தரத்தை பரிசோதித்து வாங்கி வருகிறது. ஜெ. மாணிக்கவாசகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !