ஞானம்!
ஒரு ஊரில் ராஜா - ராணி இருந்தனர். அவர்களின் அரண்மனைக்கு பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் வருவது வழக்கம். அவர்களுடைய உபதேசங்களையெல்லாம் அந்த ராணி தொடர்ந்து கேட்டு வந்தார். அதன் விளைவாக, ராணியும் ஒரு ஞானி ஆனாள். ஞானி மட்டுமல்ல, தன்னுடைய உருவத்தை மாற்றி, ஆகாயத்தில் பறக்கும் சக்தியும் அவளுக்கு கிடைத்தது. 'இதோ பாரு, நானும் உன்னை மாதிரியே ஞானி ஆகணும். எனக்கு, ஏதாவது உபதேசம் செய்யேன்...' என்று கேட்டார், ராஜா. 'நீங்க ஞானி ஆகணும்ன்னா, எல்லாத்தையும் துறக்கறதுக்கு தயாரா இருக்கணும். எல்லாத்தையும் விட்டுடற அளவுக்கு வைராக்கியம் இன்னும் உங்களுக்கு வரல...' என்றாள். கொஞ்ச காலம் ஆனது. காட்டுக்குப் போய் தவம் செய்ய ஆசைப்பட்டார், ராஜா. ஆனால், ராணிக்கு அதில் இஷ்டம் இல்லாததால் சம்மதிக்கவில்லை.ஒருநாள் இரவு காட்டுக்கு புறப்பட்டு போய் விட்டார், ராஜா. ராணிக்கு, ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருப்பதால், இளம் முனிவராக, தன் உருவத்தை மாற்றி, காட்டுக்கு பறந்து போனாள்.ராஜா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவர் முன், சென்று இறங்கினாள்.தன் எதிரில் இருந்த, இளம் முனிவரை பார்த்ததும், வணங்கினார், ராஜா. 'நான் ரொம்ப காலமாக தவம் பண்றேன். ஆனா, மன நிம்மதி இன்னும் கிடைக்கல. தாங்கள் தான் அருள் புரியணும்...' என்றார், ராஜா. 'எல்லாத்தையும் துறக்கணும்ன்னு, உங்க மனைவி, உபதேசம் பண்ணினாளே. அதன்படி எல்லாத்தையும் விட்டுட்டீங்களா?' என்று கேட்டார், அந்த இளம் முனிவர். 'எல்லாத்தையும் விட்டுட்டேன். இன்னும், இந்த ஆசிரமத்தைத்தான் துறக்கல...' என்று சொல்லியபடி, ஆசிரமத்தில் இருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து அக்கினியில் போட்டார். 'இப்ப போடுறீங்களே, இந்தப் பொருள்கள் எல்லாம் உங்களுக்கு சொந்தம் இல்லையே. இவையெல்லாம் பிரகிருதிக்கு அல்லவா சொந்தம்...' என்றார், இளம் முனிவர். 'சரி, அப்படின்னா என்னோட உடம்பை நான் துறக்கறேன்...' என, நெருப்பில் குதிக்க போனார், ராஜா.அவரை தடுத்து நிறுத்தி, 'உடம்பும் உங்களுக்கு சொந்தம் இல்லையே? அதெல்லாம், பஞ்ச பூதங்களுக்கு அல்லவா சொந்தம்...' என்றார். 'அப்படின்னா எனக்கு என்ன தான் சொந்தம்?' என்று கேட்டார், ராஜா. 'உங்க, அகங்காரம் தான், உங்களுக்கு சொந்தம். நீங்க துறக்க வேண்டியது அதைத்தான். அதை விடுங்க முதல்ல. அது உங்களிடம் இருப்பதால் தான், இந்த உலகமே உங்களிடம் இருப்பதாக நினைக்கிறீர்கள்.'அகங்காரம் இருப்பதால் தான், இந்த உலகப் பொருட்கள் உங்களுக்கு சொந்தமாக தோன்றுகிறது...' என்று, இளம் முனிவர் உருவத்தில் இருந்த ராணி சொன்னாள்; உண்மை உணர்ந்த அந்த ராஜாவும், ஞானி ஆனார்.பி. என். பி.,