விடா முயற்சியும், தெய்வ அருளும்!
துவாரகைக்கு சிறிது தொலைவில், உள்ள டாங்கோர் எனும் ஊரைச் சேர்ந்தவர், ராமதாசர். பகவான் கிருஷ்ணன் மீது தீவிர பக்தி செலுத்தி வந்த இவர், பிட்ஷை ஏற்று, அதில் கிடைத்ததை வைத்து, திருப்தியுடன் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு ஏகாதசியன்றும், முறைப்படி விரதம் இருந்து, பகவானுக்கு பூஜைகள் செய்வார். ஆடி மாதத்தில் வரும் முதல் ஏகாதசியன்று, பாத யாத்திரையாக துவாரகைக்கு போய், துளசியால் கண்ணனை அர்ச்சித்து, வழிபட்டு திரும்புவார்.இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம், முதல் ஏகாதசி அன்று, துவாரகை சென்று வழிபட்டுத் திரும்புவதை, 45 ஆண்டுகள் தவறாமல் செய்து வந்தார்.அந்த ஆண்டு, ஆடி மாத ஏகாதசி நெருங்கிய நேரம்... ராமதாசருக்கு கடுமையான காய்ச்சல்; அதனால், அவரால் துவாரகை செல்ல முடியவில்லை. 'கண்ணா... இத்திருநாளில், துளசியால் உன்னை அர்ச்சிக்கும் பாக்கியத்தை இழந்து விட்டேனே...' என்று புலம்பினார், ராமதாசர்.கண்ணன் அருளால் விரைவில் காய்ச்சல் நீங்கியது; மனைவியுடன் துவாரகைக்குப் புறப்பட்ட, ராமதாசர், கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, 'கண்ணா... முதுமை நெருங்கி விட்டது; இந்த ஆண்டு ஆடியன்று உன்னைத் தரிசிக்க இயலவில்லை. இனி, உன்னை மீண்டும் தரிசிப்பேனோ அல்லது இதுவேதான் கடைசியாக இருக்குமா...' என்று புலம்பினார்.பக்தன் மனம் வெதும்ப, பகவான் பொறுப்பாரா... கருவறை விக்கிரகத்திலிருந்து, 'ராமதாசா... கவலைப்படாதே... என் விக்கிரகத்தை எடுத்துச் சென்று வழிபடு...' என்று அசரீரி ஒலித்தது.'கண்ணா... உன்னை எடுத்துச் செல்ல அர்ச்சகரும், காவலரும் சம்மதிப்பரா?' எனக் கேட்டார்.'கவலைப்படாதே... இன்று நள்ளிரவு வா, நாம் தேரில் ஏறி சென்று விடலாம்...' எனக் கூறினார், பகவான்.அதன்படி, நள்ளிரவில், ராமதாசரும், அவர் மனைவியும் ஆலயத்தை நெருங்க, பகவானின் விக்கிரகம், ஒரு தேரில் தயாராக இருந்தது. ராமதாசர், மனைவியுடன் தேரில் ஏறி அமர்ந்தார். காற்றினும் கடுகி, வீடு சேர்ந்தது, தேர்.மறுநாள் விடிந்ததும், ஆலயத்தில் விக்கிரகத்தைக் காணாமல் திகைத்தார் அர்ச்சகர். அப்போது, கோவில் காவலாளி, 'ராமதாசர் தான் நேற்று நெடுநேரம் இங்கிருந்தார்...' என்று சொல்ல, ராமதாசரின் வீடு நோக்கி ஓடினார், அர்ச்சகர். அங்கே, கிருஷ்ண விக்கிரகத்தைக் கண்டதும், அதை எடுத்துக்கொண்ட அர்ச்சகர், ராமதாசரை திட்டினார். அதனால், மனம் வருந்திய ராமதாசர், 'கண்ணா... நீயாக என் குடிசைக்கு வந்தாய்; அவர்கள் மூலம் நீயாகவே பிரிகிறாய். என்ன மாயம் இது...' என்று வருந்தினார்.அப்போது, அசரீரியாக, 'கவலையை விடு; என் விக்கிரகத்தின் எடைக்கு எடை தங்கம் தருவதாகச் சொல். பொருளாசை காரணமாக அவர்கள் ஒப்புக்கொண்டு, என்னை, உன்னிடமே விட்டுச் செல்வர்...' என்றார், பகவான். 'கண்ணா... உன் எடைக்கு எடை தங்கம் தர, நான் எங்கு போவேன்...' என ராமதாசர் வருந்த, 'ஒரு சிறு தங்கக் கம்பியை வை... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார், பகவான். அதன்படியே ராமதாசர் சொல்ல, பொருளாசையால் அர்ச்சகரும் ஒப்புக் கொண்டார். தராசு கொணரப்பட்டு, ஒரு தட்டில் கிருஷ்ண விக்கிரகத்தை வைக்க, மறுதட்டில் தன் மனைவியிடம் இருந்து ஒரு சிறிய தங்கக் கம்பியை வாங்கி வைத்தார், ராமதாசர். அதற்குள் விவரமறிந்து கூடியிருந்த கும்பலும் ஆவலாகப் பார்க்க, கண்ணனருளால் தராசுத் தட்டுகள் சமமாக நின்றன; அனைவரும் வியந்தனர்.கிருஷ்ண விக்கிரகத்தை ஒப்படைத்த அர்ச்சகர், ராமதாசரிடம் உபதேசம் பெற்றுத் திரும்பினார். கடவுள் மீது அன்புடன் கூடிய பக்தி இருந்தால், அந்த கடவுளின் அன்புக்கு பாத்திரமாவோம் என்பதை விளக்கும் வரலாறு இது. பி.என்.பரசுராமன்