உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம் - இரட்டை வால் ஆஞ்சநேயர்!

வானர இனத்தைச் சேர்ந்தவர், ஆஞ்சநேயர். வானரங்கள் செய்யும் சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதனால், சேஷ்டை செய்யும் குழந்தையை, 'இது சரியான வாலு...' என்பர். ஆனால், சேஷ்டை செய்த அந்த வால் தான், சீதைக்கு பெரும் நன்மையைச் செய்தது. ஆஞ்சநேயரின் வாலில், அரக்கர்கள் தீ வைத்ததும், அவர், இலங்கையையே சுட்டுப் பொசுக்கி விட்டார். ஒரு வாலுக்கே இவ்வளவு சக்தி என்றால், இரட்டை வால் இருந்தால் நிலைமை என்னாகி இருக்கும்? ராவணனின் கதை அப்போதே முடிந்திருக்கும். ஆனால், தன் மீதே, அவர் பெரும் கோபமடைந்த ஒரு சமயத்தில், அவர் இரட்டை வாலை உருவாக்கி பயன்படுத்தியுள்ளார்.அந்த வித்தியாசமான வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்...ராவண வதம் முடிந்து, ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார், ராமபிரான். என்ன இருந்தாலும், ராவணன் உள்ளிட்ட பலரை வதைத்த கொலை பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டுமல்லவா! இதற்காக, சிவலிங்க பூஜை செய்ய ஏற்பாடு செய்தார். ஆஞ்சநேயரிடம், 'நீ காசி சென்று, சிவலிங்கம் ஒன்றை எடுத்து வா...' என்றார்.காற்றை விட வேகமாய் பறந்த ஆஞ்சநேயர், லிங்கத்துடன் வந்து கொண்டிருந்தார். ஆனால், பூஜை நேரம் கடந்து கொண்டிருந்தது. உடனே சீதாதேவி, கடற்கரை மணலிலேயே லிங்கம் வடித்து தர, ராமனும், பூஜையை ஆரம்பித்து விட்டார்.ஆஞ்சநேயர், லிங்கத்துடன் வந்து இறங்கியதும், அவருக்கு கோபம் அதிகமாகி விட்டது.'அந்த லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டாம். இதோ, நீங்கள் கேட்ட லிங்கம் இங்கிருக்கிறது...' என்றார், ஆஞ்சநேயர்.அதோடு விடாமல், மணல் லிங்கத்தை அகற்ற முயன்றார்; முடியவில்லை. வாலால் கட்டி இழுத்தார்; அசையவில்லை. அவருக்கு கோபம் அதிகமாகி விட்டது. இரட்டை வாலை உருவாக்கி, இழுத்தார். லிங்கம் வர மறுத்து விட்டது.பின், ராமனின் அறிவுரைப்படி சீதா வடித்த லிங்கத்துக்கு, ராமலிங்கம் என்றும், ஆஞ்சநேயரின் லிங்கத்துக்கு, அனும லிங்கம் என்றும் பெயரிடப்பட்டு, அனும லிங்கத்தை வணங்கிய பிறகே, பக்தர்கள், ராமலிங்கத்தை வணங்க வேண்டும் என்ற நடைமுறை உருவாக்கப்பட்டது.இந்த நிகழ்வின் அடிப்படையில், முன்னும், பின்னும் வால் கொண்ட ஆஞ்சநேயர் சிலை ஒன்றை வடித்தார், சிற்பி ஒருவர். இந்த சிலை, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, ஊர்க்காடு கிராமத்திலுள்ள நவநீத கிருஷ்ணன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இங்குள்ள நவநீத கிருஷ்ணன், குருவாயூரப்பனை ஒத்துள்ளார். கையில் வெண்ணெய் மற்றும் லட்டுடன் பாலகனாய் காட்சி தருகிறார். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பது, இந்தக் கோவிலுக்கு பொருந்தும். ஏனெனில், இரட்டை வால் ஆஞ்சநேயர் இங்கு இருக்கிறாரே! இவரை வணங்கினால், பக்தர்களின் துன்பத்தை தன் இரட்டை வாலால் துடைத்தெறிந்து விடுவார்.திருநெல்வேலி - பாபநாசம் சாலையில், 40 கி.மீ., துாரத்தில் உள்ளது, அம்பாசமுத்திரம். பேருந்து நிலையத்தில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் ஊர்க்காடு வடக்கு ரத வீதியில் கோவில் அமைந்துள்ளது.- தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !