விசேஷம் இது வித்தியாசம்: வில்லியும் இவளே; தெய்வமும் இவளே!
மார்ச் 13 - ஹோலிதமிழகத்தில், திருமணத்தலங்கள் பல உள்ளன. திருமணத்தின் பெயரால், திருமணஞ்சேரி என்ற ஊரே உள்ளது. இமயத்தில் நடந்த சிவபார்வதி திருமணத்தை, பொதிகை மலையில் இருந்தபடி நேரடியாகப் பார்த்தவர், அகத்தியர். இங்கே இப்படி இருக்க, வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு காரணமான ஹோலிகா என்பவளை வில்லியாகவும், திருமணத் தெய்வமாகவும் கொண்டாடுகின்றனர், மக்கள். பிரகலாதனின் தந்தையான இரண்யகசிபுவின் சகோதரி, ஹோலிகா, தீக்குள் நுழைந்தாலும் சுடாதபடியான போர்வை ஒன்றைப் பெற்றிருந்தாள். இரண்யனின் மகன் பிரகலாதன், தன் தந்தையை வணங்க மறுத்து, திருமாலை வணங்கி வந்தான்.கோபமடைந்த இரண்யகசிபு, தன் சகோதரியிடம், பிரகலாதனுடன் நெருப்புக்குள் புகச் சொன்னான். கலங்காத பிரகலாதன், நாராயண நாமத்தை உச்சரித்தான். அப்போது, போர்வை விலகி, பிரகலாதன் மேல் விழுந்தது. பிரகலாதன் தப்பினான்; ஹோலிகா சாம்பலானாள். ஹோலிகாவின் மரணத்தை கொண்டாடினர், மக்கள். அவளது பெயரால், இந்த விழா ஹோலி எனப்பட்டதாக ஒரு வரலாறு. இவ்வகையில், அவள் வில்லியாகப் பார்க்கப்படுகிறாள்.ஆனால், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வசிக்கும் ஹோலிஸ் என்ற பிரிவைச் சேர்ந்த மக்கள், ஹோலிகாவை திருமண தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். இவளை, 'ஹவுல் மாதா' என அழைக்கின்றனர்.பாக்கு மரம் அல்லது மாமர தண்டை வெட்டி, அதில் ஹோலிகாவின் உருவத்தை வடித்து, 'நவ்வாரி' என்னும் புடவை உடுத்தி, நகைகள் அணிவித்து அலங்கரிக்கின்றனர். மலர்களை பிறை வடிவில், மாலையாகக் கட்டி, சூட்டுகின்றனர். மணமகளைப் போல், ஹோலிகாவை அலங்கரிக்கின்றனர்.அன்று வீடுகளில் இனிப்பு, பழங்கள், தேன் சேர்க்கப்பட்ட உணவு மற்றும் போளியும் தயாரிக்கப்படும். பூண்டும், வெங்காயமும் தவிர்த்து விடுவர். அந்த உணவை, ஹோலிகாவுக்கு நைவேத்யம் செய்கின்றனர். ஹோலியன்று நள்ளிரவில், அனைவரும் மகிழ்வுடன் நடனமாடுவர். விநாயகர் சதுர்த்திக்கு செய்யும் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது போல, ஹோலிகா சிலைக்கு தீ வைக்கும் சடங்கு நடக்கும்.மண்பானைகளில் புனிதநீர் சுமந்து வந்து, ஹோலிகா சிலை மீது தெளிப்பர், பெண்கள். ஏழு முறை சுற்றி வந்த பின், பசுஞ்சாண வரட்டி மற்றும் மரக்கட்டைகளை சிலையைச் சுற்றிலும் வைத்து நெருப்பு வைப்பார், தலைமை பூசாரி. இதில் எழும் புகை, சுற்று வட்டாரத்திலுள்ள தீய சக்திகளையும், முன்னர் செய்த பாவங்களையும் விரட்டும் என்பது நம்பிக்கை.சிலை எரிந்ததும், சாம்பலை எடுத்து வந்து வீடுகளிலும், மீன்பிடி படகுகளிலும் துாவுவர். இதனால், தொழில் செழிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.ஹோலியில் இவ்வளவு புதுமைகள் இருப்பது, ஆச்சரியமாகத்தானே உள்ளது! தி. செல்லப்பா