தண்டனைக்கு காத்திருங்கள்!
மே24- கழற்சிங்கர் குருபூஜைஅரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பர். கோவில் சொத்துகளை கொள்ளையடிப்பவர் யாராக இருந்தாலும், தெய்வத்தின் தண்டனையில் இருந்து, அவர்கள் தப்பவே முடியாது. ஒரு காலத்தில், கோவில் சொத்துகள் எந்தளவுக்கு பராமரிக்கப்பட்டன என்பதற்கு, மன்னர் கழற்சிங்கரின் வரலாறு உதாரணம்.பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் கழற்சிங்கர். இவருக்கு, திருவாரூர் சென்று, புற்றிடங்கொண்ட சிவனை தரிசிக்க ஆசை ஏற்பட, தன் ராணியுடன் கோவிலுக்குச் சென்றார்.கோவில் மண்டபத்தில், சிவனுக்கு சாற்றுவதற்கான மாலையை பயபக்தியுடன் தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள். அம்மலர்களின் மணத்தால் ஈர்க்கப்பட்ட மகாராணி, அம்மலர்களில் ஒன்றை எடுத்து, முகர்ந்து பார்த்தாள். அடுத்த நொடி, அவளது மூக்கில் அரிவாள் வெட்டு விழ, துடிதுடித்து தரையில் புரண்டாள். அவள் அருகில், கையில் வாளுடன் நின்றிருந்த செருத்துணையார் என்ற சிவனடியார், 'மகேசனுக்கு சூடவிருக்கும் மலரை, மங்கையான நீ முகர்ந்து பார்ப்பதா... சிவ அபச்சாரம் செய்து விட்டாயே...' என்றார், கோபத்துடன்! இச்செய்தி, மூலவர் சன்னிதியில் நின்றிருந்த மன்னருக்கு எட்ட, பதறிப்போய், ராணி விழுந்து கிடக்கும் இடத்துக்கு வந்தார். அவளது தலையை, மடியில் வைத்து, நடந்தது பற்றி கேட்டார். சிவனடியார் ஒருவரால் ராணி வெட்டப்பட்டது தெரிந்ததும், சற்று யோசித்தார். அங்கே, சிவப்பழமாக சற்றும் கலங்காமல் நின்ற செருத்துணை யாரைப் பார்த்தார்.அவரது பார்வையின் பொருள் புரிந்து, 'மன்னா... தங்கள் ராணி, சிவனுக்குரிய மலரை முகர்ந்து பார்த்தார்; அது, அபச்சாரம் என்பதால், முகர்ந்த மூக்கை ஆத்திரத்தில் வெட்டினேன்...' என்றார், செருத்துணையார்.மன்னர் எழுந்து, செருத்துணையாரின் கையில் இருந்த வாளை வாங்கினார். எல்லாரும் செருத்துணையார் கொல்லப்படுவார் என்று எதிர்பார்த்த வேளையில், 'பக்தரே... நீங்கள் செய்தது தவறு; இவள் மூக்கிற்கு பதில், பூவை எடுத்த கையை அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், ராணியின் கையை வெட்டினார்.அப்போது, அங்கு சிவபார்வதி காட்சியளித்து, 'பக்தர்களே... உங்கள் சிவபக்தியின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவே, இப்படி ஒரு நாடகமாடினோம்; ராணி நலமுடன் எழுவாள்...' என்றார் சிவன்.ராணியும் எழுந்து மன்னிப்பு கேட்டாள்.கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தன்று நடைபெறும்.- தி.செல்லப்பா