உள்ளூர் செய்திகள்

முக்தி கிடைக்க வேண்டுமா?

புராணங்களிலும், சாஸ்திரங்களிலும் பக்தி, முக்தி என்ற பதம், பல இடங்களில் காணப்படுகிறது. பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும். இந்த பக்தி என்பது, பகவானிடம் வைக்க வேண்டியது. இந்த பகவத் பக்தி எப்போது ஏற்பட வேண்டும், எந்த வயதில் ஏற்பட வேண்டும் என்று கால அளவு எதுவும் கிடையாது. வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டாலும் கூட, கடைசி காலத்திலாவது கடவுள் பக்தி ஏற்பட்டு விட்டால் போதும்... நற்கதி, அதாவது, முக்தி கிடைக்கும்.இது, ரொம்ப சுலபமாக இருக்கிறதே... அதனால், கடைசி காலத்தில், அதாவது, வயதாகி ஓய்ந்து போன காலத்தில், இந்த பக்தி சமாச்சாரத்தை வைத்துக் கொள்ளலாமென்றால் அதுவும் சரியல்ல; ஏனென்றால், கடைசி காலம் எது என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும். இன்றோ, நாளையோ என்றுள்ளது மனிதனின் ஆயுள். ஆயினும், போன நாள் போகட்டும்; எஞ்சிய நாளுக்காவது பக்தி மார்க்கத்தில் ஈடுபடலாமென்ற எண்ணம் வந்தால் போதும். எஞ்சிய நாட்கள் குறைவாக இருந்தாலும் கூட, தீவிரமான பக்தி இருந்து விட்டால் போதும்... முக்தியடையலாம் என்று ஒரு சுலபமான வழியையும் சொல்லி இருக்கின்றனர்.பகவானிடம் பக்தி ஏற்பட வேண்டுமானால், பற்றுதல்களை விட வேண்டும்; வைராக்கியம் இருக்க வேண்டும். மனிதனை ஆசா பாசங்கள் சுற்றி கொண்டிருக்கும் வரை அவனுக்கு விடுதலை கிடையாது; அதாவது பிறப்பு, இறப்பு என்பதிலிருந்து விடுதலை கிடையாது.ஒரு பருந்தானது, ஒரு பெரிய மீனை தன் அலகில் வைத்திருந்தது. அந்த மீனுக்கு ஆசைப்பட்ட பல காகங்கள், அந்த பருந்தை சுற்றி, சுற்றி வந்து அதை அடித்தன. உபத்திரவம் தாங்காமல் மீனை கீழே போட்டு விட்டது பருந்து. காகங்கள், பருந்தை விட்டு விட்டு, மீனை எடுக்க ஓடி விட்டன. பருந்துக்கு இப்போது துன்பமுமில்லை; விடுதலையும் கிடைத்தது. மீன் மீது பற்றுதல் இருந்த போது துன்பப்பட்டது. அதுபோல், மனிதனுக்கு பற்றுதல் இருக்கும் வரை விடுதலை இருக்காது. பற்றுதலை விட்டு, சிறிது காலமாவது ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டால், முக்தி கிடைத்து விடும். பற்றுகளை விட்டு தீவிர பக்தியில் ஈடுபட்டு, ஐந்தாவது மாதத்தில் பகவத் தரிசனம் பெற்று, பல வரங்களை பெற்றான் துருவன். பரீட்சத்து மகாராஜன், ராஜ்ஜியத்தையும், சுக போகங்களையும் துறந்து, பாகவத சரித்திரம் சிரவணம் செய்து, ஏழாவது நாளில் முக்தி பெற்றான். பிங்களை என்ற தாசி, தன் வாழ்நாளை தாசித் தொழிலில் கழித்தவள். கடைசியில் ஞானம் ஏற்பட்டது. இனி, இந்த பிழைப்பே வேண்டாம் என்று உதறி தள்ளி, ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டாள். மூன்றே முக்கால் நாழிகையில் மோட்சம் கிடைத்தது. கட்வாங்கன் என்ற அரசன், தேவலோகம் சென்று தேவர்களுக்கு உதவியாக, அசுரர்களுடன் யுத்தம் செய்து, ஜெயத்துடன் திரும்பி வரும் போது, தனக்கு ஆயுள் இன்னும் எவ்வளவு காலம் உள்ளது என்று கேட்டு, இன்னும், இரண்டு நாழிகைகளே உள்ளன என்பதை தெரிந்து கொண்டான்.ராஜ்ஜியத்தையும், பந்து மித்திரர்களையும் விட்டு, விட்டு நேராக கங்காதீரம் வந்து பகவானை வழிபட்டு மோட்சம் பெற்றான். இப்படி, பல சரித்திரங்கள் உள்ளன. அதனால், பக்தி செய்வதற்கும், முக்தி பெறுவதற்கும் கால நிர்ணயம் எதுவும் கிடையாது. மனம் எப்போது அதில் ஈடுபடுகிறதோ, அது முதல் ஆரம்பித்துவிட வேண்டியது தான். ஜீவனுக்கு விடுதலை வேண்டுமானால், முக்தி வேண்டுமானால் பக்தி ஒன்று தான் சிறந்த, நம்பத் தகுந்த மார்க்கம். ***ஆன்மீக வினா-விடைவீட்டின் முன்புறம் அல்லது பக்கவாட்டில் துளசி மாடம் கட்டுவது நல்லதா?துளசி மாடம், வீட்டின் முன்புறம் அல்லது முன் முற்றத்தில் அமைக்க லாம்.***வைரம் ராஜகோபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !