உள்ளூர் செய்திகள்

தண்ணீர் மறு சுழற்சி

'தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் மறுசுழற்சி முறையை கட்டாயமாக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், நகரமைப்பு வல்லுனர்கள்.நகரங்களில், தனி வீடுகள் பிரதானமாக இருந்த போது, ஒவ்வொரு வீட்டிலும் குளியல் அறை, சமையல் மற்றும் கழிப்பறை என, தனித்தனியாக அறைகள் இருந்தன. அவற்றில் இருந்து வெளியேறும் நீரும், தனித்தனியாக பிரிக்கப்பட்டன. கழிப்பறை நீர் மட்டும், 'செப்டிக் டேங்க்' வாயிலாக அகற்றப்பட்டது. மற்ற வகை நீர், நிலத்தில் விடப்பட்டு, செடிகளுக்கு பயன்பட்டது. இதனால், தண்ணீர் வீணடிக்கப்படுவது கட்டுக்குள் இருந்தது.ஆனால், அண்மைக்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்ட நிலையில், தனி வீடுகளில் உள்ளது போல், குளியல், சமையல் மற்றும் கழிப்பறை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் நீரை, தனித்தனியாக பிரிப்பதற்கான வழிமுறைகளும் மறைந்து விட்டன.மேலும், இட நெருக்கடியால், குளியல் மற்றும் கழிப்பறை சேர்த்து கட்டப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் நீரும், சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட நீரும், ஒன்றாக சேர்ந்த கழிவு நீர், வடிகாலில் விடப்படுகிறது. இதனால், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், மறு பயன்பாட்டுக்கு வராமல், அப்படியே கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பப்படுகிறது.உதாரணமாக, 100 வீடுகள் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு வீட்டுக்கு, ஒரு நாளைக்கு, 1,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டால், மொத்தம், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர், பயன்பாடு என்ற பெயரில் அப்படியே கழிவு நீர் வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டு, வீணடிக்கப்படுகிறது.மாறாக, குளியல் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் தண்ணீரை, கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பாமல், தனியாக பிரித்து, குறைந்தபட்ச தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து, மீண்டும் பயன் படுத்தலாம்.இதுகுறித்து, தண்ணீர் சுத்திகரிப்பு வல்லுனர்கள் கூறியதாவது:வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை தனியாக பிரித்து, தனி தொட்டிகளில் சேகரித்து, அதை, பல்வேறு நிலைகளில் வடிகட்டி, நீரில் கலந்து வரும் உணவுப்பொருள் கழிவுகள், தேவையற்ற பொருட்கள் மற்றும் துகள்கள் அகற்றப்படும். 'கார்பன்' அடிப்படையிலான வடிகட்டிகள், இதற்கு பரிந்துரைக்கப் படுகிறது.இவ்வடிக்கட்டிகள் மூலம் நீரில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சுத்தமாக்கப்படும். அதன் பின், துர்நாற்றத்தை அகற்றுவது, நிறத்தை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதியில், சுத்தமான நீர் கிடைக்கும். இவ்வாறு, மறு சுழற்சியில், எதிர்மறை சவ்வூடு பரவல் முறையை பயன்படுத்தினால், அந்த நீரை, மீண்டும் குடிநீராக பயன்படுத்தலாம்.ஆனால், இக்குடிநீரை பயன் பாட்டிற்கு ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால், இவ்வாறு சுத்திகரிக் கப்பட்ட நீரை, கழிப்பறை பிளஷ் டேங்க்குகளுக்கும், தோட்டம் மற்றும் பூங்கா பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். இந்த சுத்திகரிப்பு முறையில் சில நிலைகளை அதிகரித்தால், கழிவு நீரை, புதிய நீர் அளவுக்கு சுத்திகரிக்கலாம். இதன் மூலம், புதிதாக பெறப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையும்; அதற்கு ஆகும் செலவும் குறையும், என்று கூறுகின்றனர். இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத் தலைவர், கே.எம். சதானந்த் கூறியதாவது:அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி அளிக்கும் போதே, அதில், தினசரி நீர் தேவை, அதை பெறவதற்கான வழிமுறை மற்றும் மறு சுழற்சி அல்லது வெளியேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த விபரங்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், இந்த விவரங்கள் பெறுவதும், சரி பார்ப்பதும் பெயரளவில் மட்டுமே உள்ளன.இதில், அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நிர்வாகங்களும், முறையான கவனம் செலுத்துவதில்லை. இதில், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் மொத்த பரப்பளவுள்ள கட்டடங்களில், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம்.இதற்கு, அந்த கட்டடத்தில், தினசரி பெறப்படும் நீரில், 80 சதவீதத்தை மறு சுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை நிறுவுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டடங்களிலும், மழை நீர் சேகரிப்பு போன்று, நீர் மறு சுழற்சி முறையையும் கட்டாயமாக்கினால், அதிகபடியான நீர் வீணாவது தவிர்க்கப்படும், என்கிறார்.வி. கிருஷ்ணமூர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !