உள்ளூர் செய்திகள்

சவால்களை சமாளிப்போம்!

எதற்கெடுத்தாலும் பயம்; எதைக் கண்டாலும் பயம். பயப்படுவதால், ஒரு லாபமும் இல்லை. 19ம் நுாற்றாண்டில் நடந்த வரலாறு இது:பண்டிதர் ஒருவர், பல மொழிகள் தெரிந்தவர். இயற்கையிலேயே அன்புள்ளம் கொண்டவர், ஏழை, எளியவருக்கு மிகுந்த அன்போடு உதவி செய்வார்; தன்னை மறந்த நிலையிலும், 'ஓம்' என்று சொல்வதை விட மாட்டார். அப்படிப்பட்டவர், இந்திய சாசன இலாகா பிரிவில், துரை ஒருவரிடம் வேலை பார்த்து வந்தார்.ஊர் ஊராக போய் கோவில்களிலும், குகைகளிலும் பழங்கால கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து வந்த பண்டிதர், மும்பைக்கு துரையுடன் சென்றிருந்தார். அங்கே ஓர் அடர்ந்த காட்டில் கூடாரம் அமைத்து தங்கினர்.இரவு நேரமானது, உதவியாளர்கள் எல்லாம் கைகளில் இருந்த ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.கூடாரத்தின் வாசலை நோக்கி, ஒரு சிறு பலகை போட்டு எழுதிக் கொண்டிருந்தார், பண்டிதர். பலகையின் இரு ஓரங்களிலும் சற்றே நீளமான இரு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார், துரை.நள்ளிரவு தாண்டியது, அந்நேரத்தில் கூடாரத்தின் வாசலில் ஏதோ ஓசை கேட்டது. பண்டிதரும், துரையும் நிமிர்ந்து பார்த்தனர். வேங்கைப் புலி ஒன்று நின்று கொண்டிருந்தது.திகைத்துப் போய், செய்வதறியாமல் இருந்தார், துரை.விநாடிக்கும் குறைவான நேரத்தில், தைரியத்தோடு, எரிந்து கொண்டிருந்த இரு மெழுகுவர்த்திகளையும் கைகளில் எடுத்து, தன் வழக்கப்படி, 'ஓம் ஓம்' என, பெருங்குரலில் முழங்கியவாறே வாசலை நோக்கி ஓடினார், பண்டிதர்.பெருங்குரலுடன், கைகளில் எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஓடிவந்த பண்டிதரைக் கண்டு, பயந்து ஓடி விட்டது, புலி.அதன்பின், துாங்கிக் கொண்டிருந்த உதவியாளர்கள் எல்லாம், இந்நிகழ்ச்சியை அறிந்து, பண்டிதரை மனதாரப் பாராட்டினர்; துரையும் பாராட்டினார்.அந்தத் துரையின் பெயர், ராபர்ட் சிவல். அந்த பண்டிதர், நடேச சாஸ்திரியார்.பயம் கூடாது. எதிர்பாராமல் வரும் சவால்களைத் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு எதிர்கொண்டால், வெற்றி பெற முடியும் என்பதை விளக்கும் வரலாற்று நிகழ்வு இது. பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

உடல்நலம் பாதிக்கப்பட்டோர், சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் நோய் குணமாகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !