கோடைக் காலமே வருக வருக!
'ஐயோ... கோடைக்காலம் வந்து விட்டதே... வெயில் கொளுத்துமே... என்ன செய்யப் போறோம்...' என்று புலம்புகிறீர்களா?கொஞ்சம் இதை படித்து தான் பாருங்களேன்...* மழை மற்றும் குளிர் காலத்தில் பரவி இருக்கும் விஷக் கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் கொளுத்தும் வெயிலில், தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்து விடும்.*வெயில் காலத்தில், நம் உடலில் உள்ள வியர்வை நாளங்கள் சரியாக வேலை செய்து, கெட்ட நீரை வியர்வையாக வெளியேற்றி, தோல் வியாதிகள் வராமல் நம்மை காப்பாற்றும்.*'காக்கை குருவி எங்கள் ஜாதி...' என்று பாடினார், பாரதியார். கோடைக் காலத்தில், மொட்டை மாடியில் நடைபயிற்சி செய்வீர்கள் தானே... அப்போது, சிறிது தானியங்கள் மற்றும் சிறு பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து பாருங்கள். எத்தனை விதமான பறவைகள் உங்களை தேடி வருகின்றன என்று! அதேபோல், நாய் மற்றும் மாடுகளுக்கு தண்ணீர் வையுங்கள். காலையில் நீங்கள் வெளியே செல்லும் போது, அவை உங்களுடன் நட்பு பாராட்டுவதை பார்க்கலாம். மற்ற பருவ காலங்களில் இந்த வாய்ப்பு கிடைக்குமா?* உங்கள் வீட்டு குட்டீஸ்களுடன் மனம் விட்டு பேசி, சந்தோஷமாக இருக்க, கோடை விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.*கோடை விடுமுறையில், உங்கள் குழந்தைகள், பள்ளி பாடம் தவிர, கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஷ், நீச்சல் பயிற்சி போன்ற சிறப்பு கோச்சிங் கிளாஸ்களிலும் சேர்ந்து படிக்க முடியும்.*கோடை விடுமுறையில், மாணவ, மாணவியர், 'பார்ட் - டைம்' வேலைக்கு சென்று சம்பாதிக்கலாம். ஏதாவது, கைத்தொழில் அல்லது தொழிற்பயிற்சி பெறலாம். இது, பிற்காலத்துக்கு கை கொடுக்கும்.* இல்லத்தரசிகளோ, வேலைக்கு செல்லும் பெண்மணிகளோ, 'ரிலாக்சாக' இருக்கும் காலம், குழந்தைகளின் பள்ளி விடுமுறை நாட்கள் தான். அப்போது, மாடி தோட்டம் அமைக்க, நேரம் கிடைப்பதோடு, உங்க வீடும், 'குளுகுளு'வென்று இருக்கும்.* வீட்டை சுத்தப்படுத்த, அழகுப்படுத்துவதற்கான பொருத்தமான காலம், கோடை காலம் தான். வீட்டிலுள்ள சின்ன சின்ன பழுதுகளை சரி பார்ப்பது, பெயின்ட் அடிப்பது போன்ற வேலைகளை இக்காலத்தில் செய்யலாம்.* தொட்டியில் மீன் வளர்ப்பவர்கள், தொட்டிகளை சுத்தப்படுத்தி, 'மெயின்டெய்ன்' செய்ய, வெயில் காலமே உகந்தது.* வீட்டிலுள்ள சோபா குஷன், மெத்தை, தலையணை போன்றவற்றை வெயிலில் காய வைத்தால், பூஞ்சை காளான் மற்ற கிருமிகள், மூட்டைப்பூச்சி ஆகியவை அழியும்.* கிச்சன் அலமாரிகளை சுத்தப்படுத்தி, மளிகை சாமான்களை வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். கரப்பான் பூச்சி தொல்லை ஒழியும்.* புத்தக அலமாரிகளை சுத்தப்படுத்தி அடுக்கி வைக்கலாம்.* இந்த சீசனில், எலுமிச்சை மற்றும் மாங்காய்களை வாங்கி, ஊறுகாய் போட்டு வைக்கலாம்.*ஒரு ஆண்டுக்கு தேவையான வடாம், வற்றல் போட்டு வைக்கலாம்.* ஒரு ஆண்டுக்கு தேவையான புளி, பருப்பு வகைகள், மிளகாய் மற்றும் தனியா போன்றவற்றை மொத்தமாக வாங்கி, வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து வைக்கலாம்.* படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை, சோபா கவர் போன்றவற்றை துவைத்து, வெயிலில் நன்கு உலர வைத்து பயன்படுத்தலாம்.* மதிய நேரத்தில், குழாயில் வரும் சூடான தண்ணீரில், கால் மிதியடிகளை ஊற வைத்து தோய்த்தால், அழுக்குகள் நீங்கி, 'பளிச்' சென்றாகி விடும்.*கோடைக்காலத்தில் தான், தமிழகத்தில் பல்வேறு கோவில்களில், திருவிழாக்கள் நடைபெறும். முடிந்த அளவுக்கு, அந்த விழாக்களில் கலந்து, நம் கலாசாரத்தை, நம் குழந்தைகள் அறிந்து கொள்ள செய்யுங்கள்.*சுற்றுலா செல்ல கோடைக்காலம் தவிர, வேறு பொருத்தமான காலம் இருக்கிறதா என்ன... குடும்பத்துடன் வெளியூர் சென்று வாருங்கள். வெளியூரில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்று, உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.பொளந்து கட்டும் வெயிலை குறை கூறாமல், எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அவ்வளவையும் இக்கோடைகாலத்தில் செய்து கொள்ளலாம். மற்ற பருவ காலங்கள் போல், வெயிலும் நமக்கு பயன்தரக்கூடியது தான்!