உள்ளூர் செய்திகள்

மனிதன் நல்லவனாக மாற என்ன செய்ய வேண்டும்?

பாண்டவர்கள் வனவாசத்தின் போது, ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான் பீமன். அநேக மிருகங்களை வேட்டையாடினான். அந்த சந்தோஷத்தில், ஆடிப் பாடி குதித்தான். அவனுடைய சப்தத்தையும், ஆரவாரத்தையும் கேட்ட பல சர்ப்பங்கள், ஓடி ஒளிந்து கொண்டன. அவன் வந்து கொண்டிருந்த போது, ஒரு குகையில் பிரமாண்டமான சர்ப்பம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதை கண்டான். உடனே அந்த பாம்பு, அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மகா பலசாலியான பீமன், எவ்வளவோ முயற்சி செய்தும், அதனிடமிருந்து விடுபட முடியவில்லை.அந்தப் பாம்பின் வலிமையை கண்ட பீமன், 'சிரேஷ்டரே... எதற்காக என்னை பிடித்தாய். நான் பாண்டவர்களில் ஒருவனான பீமசேனன். என்னை இப்படி கட்டக்கூடிய நீ, யார்? வர பலத்தினாலோ, தபோ பலத்தினாலோ இப்படி என்னை கட்டியிருக்கிறாயா? எதனால் என்று சொல்?' என்றான்.அவனது கைகளை விட்டு விட்டு, உடலை சுற்றி, 'நான், நகுஷன் என்ற ராஜரிஷியாக இருந்தவன். அகத்தியரின் சாபத்தால், இப்படி பாம்பாக மாறி, பல வருஷங்களாக இங்கே கிடக்கிறேன். ராஜரிஷியாக இருந்த நான், சாபத்தினால் சர்ப்பமாகி, இங்கு பசியோடு கிடக்கிறேன். மகா பலசாலியான உன்னை நான் இப்போது சாப்பிடப் போகிறேன். விதி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பார்த்தாயா?' என்றது அந்த பாம்பு.மேலும், 'நான் கேட்கும் கேள்விகளுக்கு, எவன் சரியான பதில் கூறுவானோ, அவனால் உனக்கு சாப நிவர்த்தி உண்டாகும்...' என்று அகத்திய மாமுனி கூறியதாக சொன்னது பாம்பு.சகோதரனான, பீமனை நெடுநேரமாக காணாததால் கவலைப்பட்டார் யுதிஷ்டிரர். அர்ஜுனனை கூப்பிட்டு, 'நீ மற்றவர்களுக்கு காவலாக இரு. நான் பீமனை தேடி வருகிறேன்...' என்று புறப் பட்டார். காட்டில் ஒரு குகை வாயிலில், ஒரு மலைப் பாம்பால் பீமன் கட்டப்பட்டு நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.நடந்த விஷயத்தைச் சொல்லி, 'இது நகுஷன் என்ற ராஜரிஷி. அகத்தியரின் சாபத்தால் இப்படி மலைப் பாம்பாக விழுந்து கிடக்கிறது...' என்றான் பீமன். சர்ப்பமும் தன் கதையைச் சொல்லி, 'நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீ பதில் சொன்னால், இவனை விட்டு விடுகிறேன்...' என்றது; யுதிஷ்டிரரும் சம்மதித்தார். நகுஷன் பல கேள்விகளை கேட்க, இவரும் பதில் கூறி வந்தார். அதேபோல் யுதிஷ்டிரரும், நகுஷனிடம் பல கேள்விகளைக் கேட்க, பதில் கூறினான் நகுஷன்.பிறகு, நகுஷனை பார்த்து, 'எந்த கர்மாவைச் செய்து, மனிதன் இப்போதுள்ளதை விட, உயர்ந்த கதியை அடைகிறான்?' என்றார் யுதிஷ்டிரர். அதற்கு நகுஷன், 'ஸத் பாத்திரத்தில் தானம் செய்வது, இனிமையாகப் பேசுவது, உண்மையே பேசுவது, அகிம்சையில் பற்றுதல், ஜீவ இம்சை செய்யாதிருத்தல் ஆகிய குணங்களால் மனிதன் சொர்க்கத்தை அடைகிறான்...' என்றது.இதே போல், நகுஷனை பார்த்து, 'சரீரத்தை விட்டவன் சொர்க்கம் அடைவதையும், கர்மங்களின் பலன் அழியா மலிருப்பதையும் எப்படி தெரிந்து கொள்வது?' என்றார் யுதிஷ்டிரர்.அதற்கு நகுஷன், 'அவனவன் செய்த புண்ணிய, பாவங்களால், மனி தனாகவோ மற்றும் பலவித ஜீவன் களாகவோ பிறக்கின்றனர். அகிம்சை யுடன் கூடிய தானம், யாகம் முதலியவை செய்தவனின் ஆத்மா, சொர்க்கத்தை அடைகிறது. காமக்ரோதங்களுடன் உள்ளவன், இம்சை செய்பவன், பேராசைக்காரன், மோசம் செய்பவன், துரோகம் செய்பவன் ஆகியோர் விலங்காகவும், மற்றுமுள்ள தாழ்ந்த பிறவிகளையும் அடைகின்றனர்.'விலங்குகள், அந்த பிறவியிலிருந்தே தேவனாக ஆகிவிட முடியும் என்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. யாகத்தில் பயன்படும் வெள்ளாடு போன்றவை சொர்க்கம் சென்று தேவனாகிறது என்கிறது வேதம். புண்ணிய, பாவமாகிய இரு வினைகள் உள்ளவன், பிறப்பு, இறப்புகளை அடைகிறான். 'இருவினைகள் கழிந்தவனின் ஜீவன், பிரம்மத்தை அடைந்து, ஆனந்தானுபவத்தை பெறுகிறது. இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமா?' என்றது நகுஷன். நிறைய கேள்விகளைக் கேட்டார் யுதிஷ்டிரர்; பதில் சொன்னான் நகுஷன்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அதிகாரம், ஆணவம் இவையெல்லாம் மனிதனுக்கு நல்லது செய்வதை விட, கெடுதல் தான் செய்கிறது. இதை உணர்ந்து, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.***

ஆன்மிக வினா-விடை!

ஐந்து முகக் கடவுள்கள் யார்?சிவன், பார்வதி, காயத்ரி தேவி, பிள்ளையார் மற்றும் அனுமன் ஆகியோரையே ஐந்து முகக் கடவுள்கள் என்பர்.***- வைரம் ராஜகோபால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !