என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (20)
பதற்றம்... விஷயத்தின் வீரியத்தையும், விபரீதத்தையும் அறிந்து கொண்டும் வரலாம். என்ன, ஏது என்று அறியாமலும், புரியாமலும் கூட வருவதுண்டு. அன்று அவன் எதற்காகத் துரத்துகிறான், அவனுக்கு என்ன வேண்டும் என்பது புரியாமல், உடல் வியர்த்தது. அவனிடமிருந்து அகன்றுவிட வேண்டும் என்று, எட்டி நடை போட, அவனோ ரொம்ப தாவுகிறான்.தனியாய் வந்திருக்கக் கூடாதோ? நண்பனையோ, உறவினரையோ போனில் அழைப்போமா? எதற்கும் இருக்கட்டும் என்று, பர்சிலிருந்து, ஐந்து டாலரை வெளியே எடுத்து வைத்து, இதற்கு, எதற்கு பயம். அஞ்சோ, பத்தோ கொடுத்தால், ஓடிவிடப் போகிறான்.ஒருவழியாய் அவனுக்குப் பிடிகொடுத்தபோது, 'சாரி டு டிஸ்டர்ப் யூ... யு பர்கெட் டு கிளீன் த வேஸ்ட்!''வேஸ்ட்?' பற்றிக்கொண்டு வந்தது. சாப்பிட்ட பேப்பர், பிளாஸ்டிக் தட்டுகளை, குப்பையில் போடாமல் வந்து விட்டேனாம். 'அடப்பாவி... இதுக்கா இத்தனை துரத்துகிறான். இதுக்கா வேலை மெனக்கெட்டு வந்தான்?'அவன் கோபப்படவில்லை. நிதானமாய், மரியாதையுடன் தெரிவித்தான். ஆனாலும், <உள்ளுக்குள் கடுகடுப்பு. வெட்கம்; அவமானம். வந்த இடத்தின் கலாசாரம் பேண வேண்டும்.நம்மூர் கலாசாரம், பண்பாடு, அது, இது என்கிறோம். குப்பையை அலட்சியப்படுத்துவதா? இதுவே நம்மூர் என்றால், 'இலைய எடுத்து தொட்டில போடு சார்...' என்று விரட்டுவரா?வெளியே நம் நாட்டு மானம் போகிறது! 'இந்தியர்கள் என்றாலே இப்படித்தான்...' என்று பேசுவதற்கு, இடம் கொடுக்கலாகாது. பதிலுக்கு மரியாதையாய், 'சாரி...' சொல்லி, டேபிளைச் சுத்தம் செய்தது பசுமையான நினைவு.நியூயார்க், 'குற்ற நகரம்' என்று வர்ணிக்கப்படலாம். ஆனால், கண்காட்சிச் சுரங்கம், இந்திரலோகம், சொர்க்கலோகம். எங்கெங்கு நோக்கினும் சக்தியடா; மின் சக்தியடா!ஜிலுஜிலுவென நடக்கின்றனர்; பறக்கின்றனர். கழுத்து சுளுக்கும் உயரக் கட்டடங்கள். நியூயார்க் நகருக்குள், காரில் பிரவேசிப்பது உசிதமல்ல. பத்து மைல் தள்ளி, இதற்காக உள்ள பார்க்கிங்கில் போட்டுவிட்டு, ரயில் பிடிக்க வேண்டும். அங்கு சுற்றிக் காண்பிக்க, கப்பல் போல பஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவற்றிற்கு ஆள் பிடிக்க, நம் ஆம்னி பஸ்களுக்கு ஆள் பிடிப்பது போல புரோக்கர்கள், ஏலம் போடுகின்றனர்.வானுயர உயர்ந்திருக்கும், எம்பயர் ஸ்டேட் பில்டிங், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பிரபல கட்டடம். இரண்டு தளங்களாகப் பிரிக்கப்பட்டு, வரிசையில் நின்று, லிப்டில் தொற்றினால், பொசுக்கென மேலே கொண்டுபோய் விட்டுவிடுகின்றனர்.அங்கிருந்து நியூயார்க்கின் வனப்பை ரசிக்கலாம். செம வசூல். அத்தனை உசத்திக்கு அருகே, ஆட்டோ ரிக்ஷாக்கள்; அக்கம் பக்கத்தில் சைக்கிள் ரிக்ஷாக்கள். டைம் ஸ்கொயர் பகுதி, இன்னொரு சொர்க்கபுரி. நண்பன், 'இருட்டின பின் தான் அங்கு போக வேண்டும்...' என்றான்.'ஏன்... சீக்கிரம் பார்த்துட்டு, பொழுது சாய்வதற்குள் வீடு திரும்பிடலாமே!''இல்லை... பொழுது சாய்ந்தால்தான், அங்கே விசேஷம்!'அப்படி என்ன விசேஷம் என்று அவனிடம் கேட்கவில்லை.'இன்னும் ஒரு மணி நேரம் சுத்தலாம். செக்ஸ் ஷாப் போகலாமா?' என்றான்.'வாணாம்... ஆளை விடு சாமி. ஏய், அது யாரு... அவன் கையில என்ன போர்டு.'அங்கே தெருவில், யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது. அந்த அமெரிக்கனுக்கு, இந்தியர்கள் மேல் என்ன கடுப்போ தெரியவில்லை.இந்தியர்கள் பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்து, ஊழல் செய்கின்றனர். அவர்களை விரட்ட வேண்டும் என்பதை எழுதி வைத்திருக்கிறான். இப்படி தெருவில் போர்டு பிடித்தால், இந்தியர்கள் விரட்டப்பட்டு விடுவர் என்று, அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தனரோ தெரியவில்லை!இருள் சாயச் சாய, நண்பன் குறிப்பிட்டதுபோல, டைம் ஸ்கொயர் பகுதி முழுக்க தகதகப்பு. கட்டடங்கள், கடைகள், கிளப்புகள் எல்லாவற்றிலும் ஜொலிப்பு.ஒரு பக்கம் பிரமாண்டம், இன்னொரு பக்கம் பிளாட்பாரத்தில் வசதியாய் அமர்ந்து, பிச்சையெடுக்கின்றனர் சிலர். படம் எடுக்கப் போனால், 'டிப்ஸ், ப்ளீஸ்' என்று முகத்தை மறைத்துக் கொள்கின்றனர்.ஒரு டாலர் நீட்டினதும், உடனே ஓ.கே., அந்தப் பகுதி முழுக்க, எப்போதும் ஜனத்திரள். நடக்கின்றனர், மிதக்கின்றனர், பறக்கின்றனர், எதற்கு என்னத்தைச் சாதிக்கவென்று தெரியவில்லை. அவசர அவசரம்.அப்படியே வேடிக்கைப் பார்த்தபடி நடந்தபோது, ஓரிடத்தில் ஏகக்கூட்டம். என்ன விஷயம் என்று எட்டிப் பார்த்தால், எதுவுமில்லை. அப்புறம் எதற்கு கும்பல்?எல்லாரும் எதிர் பில்டிங்கின் முகப்பில் இருந்து, எலக்ட்ரானிக் திரையைப் பார்த்துப் பார்த்து, என்னவோ பேசுகின்றனர்; சைகை காட்டுகின்றனர். துணைக்கு வந்த நபரைக் கட்டிப்பிடித்து, மு...ம், சில பெண்கள் பனியனுக்கும் ஜீன்ஸுக்குமிடையே காற்றாடவிட்டு ஆடுகின்றனர். தோழிகளுடன் சேர்ந்து கெக்கலிப்பு.நமக்கு எதுவும் விளங்கவில்லை. இதுங்களுக்கென்ன பைத்தியமா? நண்பன், 'ரெண்டு நிமிஷம் கழிச்சு, அந்தத் திரையைப் பார், காரணம் புரியும்...' என்றான்.புரிந்தது. தெருவில் குறிப்பிட்ட இடத்தில் நின்று, நாம் செய்யும் சேட்டைகளை படம்பிடித்து, உள்வாங்கி, இரண்டாம் நிமிடம் அந்தத் திரை அப்படியே ஒளிபரப்புகிறது. நம் கூத்துகளை உடனே பார்ப்பதில், ஒரு சந்தோஷம், த்ரில். அந்தச் சுகத்தை அனுபவிக்க வேண்டித்தான், அங்கே ஈ மொய்க்கிறது.நியூயார்க்கில், சுற்றுலா பஸ் அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில், வால்ஸ்ட்ரீட், இரட்டை கோபுரம், சுதந்திராதேவி சிலையும் அடக்கம்.சுதந்திரா தேவி சிலையின் கடல் பகுதிக்கு, படகில் தான் செல்ல வேண்டும். அரை மணிக்கு ஒன்று வீதம், படகு கிளம்புகிறது. அதற்கும் நீண்ட வரிசை. ஆனால், இலவசம்.சுதந்திராதேவி சிலை பராமரிப்பில் இருப்பதால், அந்தப் பக்கம் படகில் மிதந்து, அக்கரைக்குப் போய், திரும்ப மிதந்து திரும்ப வேண்டும். சும்மா சொல்லக்கூடாது... அந்தப்பகுதியும், தள்ளியிருந்து பார்க்கும், நகரத்தின் அமைப்பும் ரம்மியம்.சுதந்திராதேவி சிலை, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையை நினைவுப்படுத்துகிறது. கன்னியாகுமரியில் அலைகள் அதிகம்; சிறிய படகு. இங்கே அமைதியான கடல்; கப்பல் போல ராட்சச படகு!உலகப் பொருளாதாரத்தை, உரசிப் பார்க்கும் பங்கு சந்தை உள்ள வால்ஸ்ட்ரீட், ரொம்பப் பிரபலம். தெரு, கட்டடங்கள் எல்லாம் அளந்து வைத்த மாதிரி அமைப்பு. பங்குச்சந்தை சின்னமான, வெண்கலக் காளைக்கு ஏகமவுசு. வால்ஸ்ட்ரீட்டில் டென்ட் அடித்து, பேனர் வைத்து, எப்போதும் யாராவது போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்து இரட்டை கோபுரம்.இரட்டையில் ஒன்று தரை மட்டம். 2001ல் தாக்கப்பட்ட அதன் இன்னொரு கட்டடத்தை, இன்னமும் கட்டிக்கொண்டே இருக்கின்றனர். பதினொரு வருடங்களாகியும் கூட தீரவில்லை.— தொடரும்.என்.சி. மோகன்தாஸ்