உள்ளூர் செய்திகள்

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.... (3)

பொதுவாக நாம், எந்த ஊருக்குப் போய் இறங்குகிறோமோ அங்கு, எமிகிரேஷனில் லக்கேஜ் பரிசோதனை நடக்கும். சோதனை மெஷினில், பெட்டிகள் ஆடி ஆடி, ஊர்ந்து அந்தப் பக்கம், 'பொத்' தென்று விழும்போது, கேமராவில், சந்தேகப்படும்படியான பொருள் இருக்கும் பட்சத்தில், ஜவான்கள் ஓடி வந்து, கையும் களவுமாய் பிடித்து களேபரம் செய்வர்.பெட்டியை திறக்கச் சொல்லி, உருட்டிப் புரட்டிக் குடைந்து, முழுசாய் கலைத்து, களைப்பு ஏற்பட்டதும் தான் விடுவர்.சட்டத்திற்கு புறம்பாக, நாம் எதுவும் கொண்டு போகவில்லை என்றாலும் கூட, வயிறு புரட்டும். ஆகாத, ஒவ்வாத, பொருள் எதுவும் இருக்குமோ என்கிற குழப்பம் நமக்குள்ளும் எழும்.'பாரு நல்லா பாரு... இன்னும் பாரு... பார்த்துட்டியா ஒண்ணுமில்லையா? இதுக்கா இத்தனை, 'சீன்' போட்டாய்? சரி ஆளை விடு என்று பவ்யமாய் காத்திருந்து, அவர்கள், ஆரா#ந்தபின் தரும் பெட்டியை அள்ளி விலகுவோம்.இந்த பவ்யமும், அனுசரணையும் வெளிநாட்டில் மட்டும்தான். உள்ளூர் விமான நிலையத்தில் என்றால், கதையே வேறு. நம் திமிர் எகிறும்.பெட்டியுடன், 'கீரின் சேனல்' வழியே வெளியே வரும்போது, அண்ணாச்சிகள் வண்டியை மறித்து, 'என்ன இது?' என்பர்.'சும்மா... துணிமணி, உணவுப் பொருட்கள்...''டூட்டி ஐட்டம் எதுவுமில்லையே?''இல்லை!''இல்லையா...' என்று குனிந்து, பெட்டியோரம் போடப்பட்டிருக்கும் பெருக்கல் குறியைக் காட்டி... 'ஏதாவது இருக்கணுமே... ஸ்கேனிங்கில் குறிச்சிருக்கானே, இப்படி ஓரமாய் வாங்க...' என்று ஒதுக்குவர்.அந்த ஒதுக்குதலுக்கு அஞ்சினால் போச்சு, துணிந்தால் துக்கமில்லை. பேரம் பேச வருவர். கிடைத்தவரை லாபம் என முயற்சிப்பவர் உண்டு.'பெட்டியைப் பிரியுங்கள்...''ஏன்?''சோதிக்கணும். டூட்டி ஐட்டங்கள் இருக்கான்னு பார்க்கணும்...''அதான் இல்லேன்றேன்! சரி பிரிச்சுக்கோங்க. ஆனா, ஒரு கண்டிஷன்! நீங்க எவ்ளோ நேரம் வேண்டுமானாலும் சோதனை செய்துக்கலாம். டூட்டி ஐட்டம் இருந்தா, நிச்சயம் கஸ்டம்ஸ் கட்டறேன். இல்லேன்னா...'அதிகாரி கொஞ்சம் அதிர்ந்து, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழுத்தில் கைகுட்டையால் வியர்வையை ஒற்றிக் கொள்வார்.'இல்லேன்னா... என்ன?''பெரிசா ஒண்ணுமில்லை... சாமானையெல்லாம் மறுபடியும் திரும்ப அள்ளிப்போட்டு பெட்டியைப் பழையபடி, 'பேக்' பண்ணித் தரணும்...'உடனே அவர், சமாதான தூதுவராகி, 'என்ன சார்... இது... எங்க கடமை, கேட்கணும்... அதுக்குபோய் ஏன், 'பீல்' பண்றீங்க, கிளம்புங்க சார்..' என்று தட்டிக் கொடுத்து அனுப்புவார்.ஹூம்... இதெல்லாம் அங்கே காட்ட முடியுமா?வாஸ்தவத்தில் நியூயார்க்கில் தான், லக்கேஜ்களை வெளியே எடுக்கப் போகிறோம்.அங்கு வைத்து, அங்குள்ள அக்காக்களோ... அண்ணன்களோ... கேள்வி கேட்டால் பரவாயில்லை.இன்னும், 8.00 மணி நேரம் கடந்த பின்தானே, நியூயார்க் வரப் போகிறது... விமானம் ஏறுவதற்காக பெல்ஜியம் நாட்டின் புரொல்சில் விமான நிலையத்தில்தான் இருக்கிறோம். பிற நாடுகளுக்குச் செல்லும்போது, பெட்டிகளைப் பூட்டுப் போட்டுத்தான் லக்கேஜில் போடணும் என்பர். பாதுகாப்பிற்காக, நைலானால் கட்டுவதுண்டு. ஆனால், அமெரிக்காவுக்கு எல்லாம் எதிர்ப்பதம்.பெட்டிக்கு கயிறு கூடாது; பூட்டு கூடாது; சந்தேகமிருந்தால், அவர்கள் எப்போதும் பரிசோதிக்கணுமாம். அப்படி பூட்டாததால், லக்கேஜ் பரிமாற்றத்தின் இடையில், யார் வேண்டுமானாலும் பெட்டியைத் திறக்கலாம்.எதை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்! வாய்ப்புண்டு. அப்படி ஏதும் யாராவது வைத்திருப்பார்களோ என்று மனதிற்குள் குதறல்.அந்த கருப்பக்கா... 'நீங்கதான் பெட்டிகளை, 'பேக்' செய்தீர்களா?' என்று திரும்பக் கேட்டாள்.'ஆமாம்...!''உள்ளே... 'வெப்பன்ஸ்' எதுவும் இருக்கிறதா?''வெப்பனா... நோ... நோ!'போதைப் பொருட்கள்?''நோ மேடம்...'ஏன் உருட்டி உருட்டிக் கேட்கிறாள்? இதெல்லாம் நம் பெட்டியிலிருந்து கண்டெடுத்திருப் பார்களோ? வேண்டாதவர்கள், எதுவும் வைத்திருப்பார்களோ?வேண்டாதவர்கள், அதுவும் இங்கே நமக்கு யார்?நம்மூரில் என்றால் பழிவாங்க வேண்டி, கஞ்சா வைத்து, கைது செய்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.'பெட்டியிலுள்ளதெல்லாம் உங்கள் பொருட்கள்தானா?''ஆமாம்!''எங்கே தங்கப் போகிறீர்கள்?''உறவினர் வீட்டில்...''அவர்களுக்காக, 'கிப்ட்' எதுவும் வாங்கி வைத்திருக்கிறீர்களா?''யெஸ்...!''அவைகளை, 'பேக்' செய்ளதது யார்?''நாங்கதான்...''வேறு யாரும் உங்களுக்காக, 'பேக்' செய்து தந்தார்களா? அவர்கள், 'பேக்' செய்யும்போது, நீங்கள் அருகில் இருந்தீர்களா? உங்கள் கண் முன் தானே பெட்டி கட்டப்பட்டது?'ஐயோ கடவுளே... 'நாங்கதான், 'பேக்' பண்ணினோம். வேறு யாரையும் கிட்டே சேக்கலை!''ஓ.கே., அமெரிக்காவில் வேறு யாருக்காகவது கொடுக்க வேண்டி, யாரும் பரிசுப் பொருட்கள், உங்கள் மூலம் கொடுத்து விட்டார்களா?''இல்லை மேடம். எல்லாம் எங்கள் பொருட்கள் தான். யாருடைய பரிசுப் பொருட்களையும் நாங்கள் எடுத்துச் செல்லவில்லை...'ஒரு வழியாய் தைரியத்தை வரவழைத்து சொன்னதும், அவளது முகத்திலிருந்து இறுக்கம் மாறியிருந்ததை உணர முடிந்தது.'ஹு இஸ் திஸ்? யுவர் ஒய்ப் ஆர் கேர்ள் ப்ரண்ட்?''ஒய்ப். பட் லைக், கேர்ள் ப்ரண்ட்!''ஓ நைஸ்!' என்று விசாலமாய் புன்னகைத்தவள், ரிடர்ன் ஏர் டிக்கட்டை புரட்டி, என்னையும், மனைவியையும் மாறி மாறிப் பார்த்தாள்.'இரண்டு மாதம் கழிச்சு திரும்பறாங்க. ஆனா, நீங்க மூணு வாரம்தானா, ஏன்?' என்றாள் மிக்க நட்போடு; திடீரென வந்த பாசம்!'என்ன பண்றது, எனக்கு லீவ் அவ்ளோதான்...''ஓ.கே., ஐ அன்டர்ஸ்டாண்ட்! என்ஜாய் த டிரிப்...' என்று அதுவரை ஒளித்து வைத்திருந்த புன்னகையை வெளியே எடுத்து வீசி, 'நெக்ஸ்ட்' என்று அடுத்த பயணியை அழைத்து, 'லக்கேஜில் என்ன இருக்கு... யார்,'பேக்' பண்ணினது?''அட... இது ரெக்கார்டட் ரோபோ கேள்விகள் போலிருக்கிறது. இது தெரியாமல் விழி பிதுங்கி... கலவரப்பட்டு விட்டோமே சே...' என்று நாணம் தோன்றிற்று.ஒன்றுமே இல்லாததற்குப் போய், எதற்கு பூச்சாண்டி காட்ட வேண்டும்?அதையெல்லாம் மறந்து விமானம் ஏறும் போதும், ஏறி அமர்ந்த போதும், பிறகு பாத்ரூம் பக்கம் விசிட் அடித்தபோதும், அந்த ஜில் ஜில், 'முத்த'த் தம்பதியைக் கண் தேடிற்று. ஆசுவாசத்திற்கு யாராவது வேண்டுமே!அவர்களைக் காணோம்!அவ்ளோதான் போலிருக்கிறது என்று லேசாய் விசனம்.அப்புறம் நியூயார்க்கில் இறங்கி, அங்குதான் உள்ளபடியான இமிகிரேஷன்! நடந்து, கன்வேயரில் ஊர்ந்து, ஏறி, இறங்கி, கிறங்கி, கவுன்டருக்குப் போனால், அங்கு மாமாங்க கூட்டம். இங்கே எப்போ முடிந்து வெளியேறப் போகிறோம்?எக்கச்சக்க கவுன்டர்கள்! அவர்களும் வேகமாய்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனாலும் கூட, இரண்டு மணிநேரம் காத்திருப்பு.நாங்கள் இங்கிருந்து வெளியே போய், வேறு விமானம் பிடித்து, பிட்ஸ்பர்க் போக வேண்டும். உள்ளூர் விமானம். டிக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது பகீரென்றிருந்தது.அந்த விமானம் இந்நேரம் கிளம்பி இருக்க வேண்டும். 'டிவி'யில் பார்த்தபோது தெரிந்தது. அது கிளம்பி இருந்தது. இனி, என்ன செய்வது?— தொடரும்.என்.சி.மோகன்தாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !