டயானா எங்கே?
அந்த சொகுசு காரை ஓட்டிச்செல்லும், பிரபல தொழில் அதிபர், குணசேகரனின் அருகில், கல்லுாரி முதல்வர் ஆனந்தன், பின் இருக்கையில், தாசில்தார் சவுந்தர் மற்றும் நகரின் பிரபல டாக்டர் முருகனும், மவுனமாக பயணம் செய்தனர். காரை ஓட்டிக்கொண்டிருந்த, குணா, மவுனம் கலைத்து, ''டயானா எங்கே?'' என்றார்.ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் ஒரு இனம் புரியாத, வெளியே சொல்ல முடியாத உணர்வுகள். ''நாம் எல்லாரும் பெரிய அந்தஸ்த்தில் இருக்கோம் என்றால், அதற்கு முழுக் காரணம், டயானா தான்,'' என்றார், ஆனந்தன்.''ஆமாம். என் வாழ்வில் மறக்க முடியாத பெண்,'' என்றார், டாக்டர் முருகன். ''நாம், 58 வயதை நெருங்கி விட்டோம். ஆனால், 50வது வயதில், நமக்குள் ஏற்பட்ட அந்த சபலம், வெட்கபடக் கூடியது என்றாலும், டயானா மறக்க கூடியவள் அல்ல,'' என்றார், சவுந்தர். 'அன்றைய நாள் எங்களுக்குள் பசுமரத்தாணியாக பதிந்து விட்டதே...' என்று, பழைய நினைவுகளில் மூழ்கினார், குணா...ஐம்பது வயதை தொட்டும் தொடாத காலகட்டத்தில் ஒரு சபலம். வெளியூர் சென்று, தொழில் முறை பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது என்று, முடிவு செய்தனர். பிரச்னை ஏதும் இல்லாத வீடும், 25 வயது பெண்ணையும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார், புரோக்கர்.உள்ளத்தில் குற்ற உணர்வு இருந்தாலும், தவறு செய்ய காரணகாரணிகள், சமாதானங்களை நாங்களே எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம். முதலில் நான் தான், சே... நினைக்கவே வெட்கமாக இருக்கு. இருந்தாலும் அடிக்கடி நினைத்துப் பார்த்து, இந்த எட்டு ஆண்டில் என் குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, சந்தோஷம், பெரிய தொழில் அதிபர் என்ற அந்தஸ்துக்கு காரணமான அந்த சம்பவத்தை நினைத்துப் பார்ப்பது, ஒரு ஆறுதல் தான். உள்ளே நுழைந்தவுடன், 'ஹலோ சார்... உள்ளே வாங்க...' என்றாள். எனக்கு, கை, கால் உதறியது. 'என் மனைவியைத் தவிர, வேறு எந்த பெண்ணுடனும் இதுவரை நான்...''இட்ஸ், ஓ.கே., சார்... முதல்ல நடுங்காதீங்க... ரிலாக்ஸ் யுவர் மைன்ட், பி கூல்... வீ ஆர் பிரண்ட்ஸ் லைக்...' என்றாள்.'நீ படிச்சிருக்கியா...' என்றேன்.'யெஸ், டிகிரி முடித்துள்ளேன்...' என்றாள்.மனைவி, குடும்பம் என, எல்லாவற்றையும் ஒரு நண்பனிடம் சொல்வது போல் உளறி விட்டேன். 'குணா சார்... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்கள் மனைவி ஊனம்ன்னு சொல்றீங்க; இரண்டு பொண்ணுங்க. ஆக, பணத்துக்காக தான் அவங்களை கல்யாணம் பண்ணியிருக்கீங்க...' என்றாள்.ஒன்றும் சொல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த்தேன். 'உங்களை பார்த்தால், ஏதோ பேருக்கு, பற்றற்று தொழில் செய்பவராகத் தெரிகிறது. உடல் ஊனத்துடன், 25 ஆண்டுகளாக, ஒரு நல்ல மனைவியா உங்களுக்காக வாழ்ந்து இருக்காங்க. ஆனால், உங்களைப் பொறுத்தவரை, அவங்களை இரவில் சுகம் கொடுக்கும் ஒரு தாசியா நினைத்து தான், நீங்க நடத்தியிருக்கணும்...'எவ்வளவு கனவுகளோடு வந்திருப்பாங்க... ஆனால், நீங்களோ... சார், மனதில் உங்களுக்குள்ள அனைத்து கெட்ட எண்ணத்தையும் நீக்கி, மனைவியையும், தொழிலையும் நேசிங்க. உங்களை அறியாமலே, தொழில் பல்கிப் பெருகி, எல்லாரும் வியக்கும் தொழில் அதிபர் ஆக முடியும் பாருங்க...' என்று, அவள் சொல்லச் சொல்ல, நான், சட்டையை மாட்டியபடியே, 1,000 ரூபாய் தாள், இரண்டைக் கொடுத்து, வெளியேற எத்தனித்தேன். 'நில்லுங்க... செய்யாத வேலைக்கு நான் கூலி வாங்கறது இல்ல. நான், உங்கள் மனைவி அல்ல. எனக்காக ஒரு காரியம் செய்வீங்களா?''சொல்லு, டயானா...''இந்த ரூபாயில், உங்க மனைவிக்கு, ஒரு புடவை வாங்கி கொடுங்கள். இதுதான் உங்கள் முதல் புடவையா இருக்கும்ன்னு நினைக்கிறேன். சரியா...' என்றாள்.சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. அவள் பேச்சில், மனைவியை நேசிக்கணும், தொழிலை பெருக்கணும் என்ற எண்ணம் வந்தது. 'குணா சார்... நீங்க, எதிர் காலத்தில், 100 பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு தொழிலதிபராக வருவீங்கன்னு வாழ்த்துகிறேன்.'எங்கள் தொழிலுக்கு மட்டும் தான், கொஞ்ச காலத்திலேயே ஓய்வு. நீங்க, 'ஏசி' அறையில், கால்மேல் கால் போட்டு, எத்தனயோ பேருக்கு வேலை கொடுக்கப் போறீங்க. அப்ப, கூலி வேலை கேட்டு, உங்களிடம் வருவேன்...' என்றாள்.அறையை விட்டு வெளியேறினேன். ஆனந்தன் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்து கண்ணடித்தார். சலனமின்றி, அவரைப் பார்த்தபடியே நகர்ந்தேன்.கார் ஓட்டிக்கொண்டிருந்த குணசேகரன், ஆனந்தனின் மொபைல்போன் சத்தம் கேட்டு, நடப்புக்கு வந்தார். போனில், 'மந்திரி, 10 பேருக்கு, 'அட்மிஷன்' கேட்டு, உங்களிடம் பேசணும்ன்னு சொன்னார், பிரின்சிபால் சார்...' என்றனர்.'இந்த மரியாதைக்கு, அந்த டயானா தான் காரணம். மறக்க முடியுமா...' என்று, பழைய நினைவுகளை அசை போட்டார், ஆனந்தன்... அன்று, நான் உள்ளே நுழைந்த உடன், அவள், விருட்டென்று எழுந்து, நமஸ்காரம் பண்ணினாள். 'இதென்ன நடிப்பு, சும்மா இரும்மா. இந்த மாதிரி, 'வளவள'வென்று எனக்கு பேசப் பிடிக்காது. புரோக்கர், உனக்கு 2,000 ரூபாய் கொடுக்க சொன்னார்...' என்று, நான்கு, 500 ரூபாய் தாளை கொடுத்தேன். 'நான் வேலையை முடிக்காமல் கூலி வாங்குறது இல்லை, ஆனந்தன் சார்...' என்றாள். ஆச்சரியமாகப் போய் விட்டது எனக்கு. 'என் பெயர் உனக்கு எப்படி தெரியும்?''சார், என்னை தெரியலையா... நான், உங்கள் மாணவி. இரண்டாம் ஆண்டு எனக்கு வகுப்பு எடுத்தீங்க...''உன் பெயர் என்ன?' 'டயானா!''ரொம்ப பேர் என்னிடம் படித்து வெளியேறிட்டாங்க. சட்டென்று உன் முகம் ஞாபகத்திற்கு வரலை...' என்றேன்.'ஆனால், இப்ப ஞாபகம் வரும் சார்... என்னுடன் படித்தான், உங்கள் மகன், ராஜேஷ். நாங்கள் நட்புடன் பழகுவதைப் பார்த்த நீங்கள், காதல் என்று தப்பாக புரிந்து கொண்டீர்கள்...'என்னை தனியாக அழைத்து, 'இதோ பாரும்மா... எனக்கு பெண் குழந்தை இல்லை, உன்னைப் பார்த்தால், எனக்கு மகள் உணர்வு வருகிறது. உனக்கு சகோதரர்கள் இருக்கின்றனரா...' என்றீர். 'இல்லை...' என்றேன். 'இனி, ராஜேஷ் தான் உனக்கு அண்ணன், நான், உனக்கு அப்பா மாதிரி என்றீர். இப்ப ஞாபகம் வருதா சார்...' என்றாள்.என் கண்களில் கண்ணீர். 'நீயா அது? நன்றாக படித்தாயே, என்னாயிற்று உனக்கு, ஏன் இப்படி... இந்த தொழிலுக்கு...''சார்.. என், 'பிளாஷ்பேக்' உங்களுக்கு வேண்டாம். உங்களுடைய கம்பீரம் பார்த்து, மாணவர்களான, நாங்க எல்லாரும், 'நம்ப சார், கல்லுாரி முதல்வரா வரணும்'னு பேசிக்குவோம். இப்ப, கல்லுாரி முதல்வரா இல்ல, வெறும் பேராசிரியர் மட்டும் தானா...' 'இல்ல, டயானா... நான் தொழிலில் பிடிப்பு இல்லாமல் இருந்து விட்டேன்!''முடியும் சார்... முயற்சி பண்ணுங்க, உயர் பதவிக்கு வருவீங்க... நான், 'விஷ்' பண்றேன். அப்படி வரும்போது, நானே, கல்லுாரிக்கு வந்து, உங்களைப் பார்ப்பேன்...' என, எனக்கு கை கொடுத்தாள். 'என்னைக் கொல்லாதே, டயானா. நான் கிளம்புறேன். உன் செலவுக்கு இந்த ரூபாயை வைத்துக் கொள்...''வேண்டாம் சார், உங்களை, கல்லுாரி முதல்வரா பார்க்கும்போது, நானே கேட்டு வாங்கிக்கிறேன்...' கல்லுாரி முதல்வராகி இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த உயர்ந்த நிலைக்கு வர காரணமான, அந்த டயானாவை, ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த புரோக்கரை தொடர்பு கொண்டதற்கு, 'சார்... அந்த பொண்ணு, எங்களுக்கு தொடர்பில் இல்லை...' என்றான். மவுனமாக, பழைய நினைவுகளோடு காரில் பயணித்தனர். அப்போது, தாசில்தார் சவுந்தருக்கு, மகனிடம் இருந்து போன். 'அப்பா... எனக்கு, அமெரிக்கா விசா வந்து விட்டது. நான் வெளிநாடு போகப் போறேன்...' என, மகிழ்ச்சியுடன் பேசினான்.அவனுக்கு அது கனவு. என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை. அன்று மட்டும், நான், டயானாவை சந்திக்காமல் இருந்திருந்தால்... சவுந்தரின், 'பிளாஷ்பேக்' இது...அன்று, நான், தவறு செய்யப் போகிறேன் என்றாலும், எந்தவித குற்றவுணர்வு இல்லாமலே அறைக்குள் நுழைந்தேன். பார்க்க, தேவதை மாதிரி இருந்தாள். 'இவள் எப்படி இந்த தொழிலுக்கு வந்தாள்... பணத்தைக் காட்டி இவளை மயக்க வேண்டும்...' என, எண்ணினேன்.'இந்தா, நான் அரசு ஊழியன். பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல, 2,000 ரூபாய் என்ன... 5,000 ரூபாய் கூட வாங்கிக்கோ...' என, அலட்சியமாக பணத்தை நீட்டினேன். 'வேண்டாம் சார்... பேசின பணத்தை மட்டும் குடுங்க போதும்...' என, தடுத்தாள்.அப்போது, என் மொபைல்போன் ஒலிக்க, என் முகம் கலவரப் படுவதைப் பார்த்து, 'என்னாச்சு சார்...' என, கேட்டாள். 'கல்லுாரியில் படிக்கும் என் மகனுக்கு, வலிப்பு நோய் எப்ப வரும்ன்னு தெரியாது. பார்க்காத வைத்தியம் கிடையாது. இன்னும் நோய் தீர்ந்தபாடில்லை. இப்ப அவசரம். கிளம்புகிறேன்...' என்று, சட்டையை போட ஆரம்பித்தேன். 'ஒரு நிமிடம் நில்லுங்க சார்...' என்றாள். 'தப்பா நினைக்காதீங்க சார்... என்னைப் போல ஒருத்தி சொல்றதை கேட்பீங்களான்னு தெரியல. நான் எப்பவும் தொழிலுக்கு வெளியூர் கிளம்பும்போது, குலதெய்வம் கோவிலுக்கு சென்று வணங்கிட்டுதான் செல்வேன். இந்தாங்க, எங்கள் கோவில் விபூதி. இந்த எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து, கோவில் விபூதியுடன் கலந்து, உங்கள் மகனுக்கு கொடுங்கள். நம்புவீங்களா சார்...' என்றாள்.'நம்புறேன்மா, என் மகனுக்காக எதுவும் செய்யத் தயார்...' என்றேன்.'நல்லது சார், இன்னும் ஒன்று சொல்வேன் கேட்பீங்களா...''ம்...' என்று தலையை ஆட்டினேன். 'உள்ளே வரும்போது சொன்னீங்களே, பணம் ஒரு பொருட்டல்லன்னு... எனக்கு தெரியும் சார், அது நேர்மையான பணம் இல்லன்னு. இனிமேல், தப்பான வழியில் பணம் சம்பாதிக்காதீங்க. என்னடா இப்படி தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறவள் உபதேசம் பண்றாளேன்னு பார்க்கிறீங்களா...''இல்லம்மா...' என, அவள் கையை பிடித்து கும்பிட்டேன். 'உங்கள் மகன், நிச்சயம் குணமாவான். நேர்மையா வாழ்ந்து பாருங்க. நீங்கள் வாழ்வில் நினைத்துக் கூட பார்க்காத உயர் பதவிக்கு வருவீங்க... அப்போது, நான் உங்களை பார்க்க வருவேன்...' என்றாள். அன்றிலிருந்து என் மகனுக்கு அந்த நோய் வரவே இல்லை. முற்றிலும் குணமாகி விட்டான். மருந்து, மாத்திரையை விட, நல்ல மனசுக்காரங்களின் பிரார்த்தனைகள் வலிமையானது என, புரிந்து கொண்டேன். இன்று, அவள் கனவு நிறைவேறியது. நானும், என் வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்கிறேன். சாதாரண கிளார்க்கில் இருந்து இன்று, தாசில்தார் பதவி வரை உயர்ந்து விட்டேன். அந்த டயானாவுக்காக காத்திருக்கிறேன். அடுத்து டாக்டர், பழைய நினைவில் மூழ்கினார்...அன்று நடந்ததை நினைத்தால், கூச்சமா இருக்கு. உடம்பெல்லாம், 'சென்ட்' அடித்து அந்த அறைக்குள் நுழைந்தேன். என் மனதுக்குள் கிளர்ச்சி. 50 ரூபாய் தாள், 40ஐ நீட்டினேன்.'என்ன சார், உங்கள் நண்பர்கள் எல்லாரும், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளாக நீட்டினர். உங்களுக்கு பணப் பிரச்னையா பரவாயில்லை, விட்டுவிடுங்கள் சார்...' என்றாள்.எனக்கு அவமானமாகி விட்டது. 'நான், கைராசியான டாக்டர் இல்லை...''அதனால் என்ன சார், நானே ஒரு காலத்துல உங்ககிட்ட வந்து தான் ஆகணும்!''இல்லை, டயானா... எனக்கு பெரியளவு, 'ப்ராக்டீஸ்' இல்ல. ஏதோ ஒரு வாடகை இடத்தில் கிளினிக் நடத்துகிறேன். ராசி இல்லாத டாக்டர்ன்னு முத்திரை குத்திட்டாங்க. எனக்கு ஒரு ஆசை. சொந்தமாக கட்டடம் வாங்கி, பல சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து, பல்நோக்கு மருத்துவமனையாக்கி, நான் வைத்தியம் பார்க்கணும்ன்னு. ஆனால், முடியவில்லை!' 'ஏன் டாக்டர் முடியல?''வங்கி கடன் மற்றும் தனியாரிடம் கடன் கேட்டேன். யாரும் என்னை நம்பலை. கந்து வட்டிக்கு வாங்க மனம் இல்லை. என் கனவு எல்லாம் நிராசையாகி விட்டது!''கவலைப்படாதீங்க டாக்டர். உங்கள் படிப்பு, திறமை, உண்மையான உழைப்பு மூலம் சம்பாதித்தது, இந்த பணம்; அதன் அருமை எனக்கும் தெரியும். அது சரி, பணம் கிடைத்தால் உங்கள் கனவு நனவாகிவிடும் அல்லவா...' என்றாள்.'ஆம்...' என்றேன் சுரத்தே இல்லாமல். 'சரி... நான் சொல்லும் இவர், தேசிய வங்கியின் உயர் அதிகாரி... இவரிடம் போய், 'டயானா பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி' என்று அடையாளம் சொல்லுங்கள். நிச்சயம் கடன் கிடைக்கும்...' என்றாள்.நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, அட்டையை பெற்றுக் கொண்டேன். 'நாளை காலை, 10:00 மணிக்கு, 'அப்பாய்ட்மென்ட்' வாங்கித்தரேன்; தவறாது சென்று விடுங்கள்...' என்றாள்.'என் கனவு நனவாகுமா?' என்றேன்.'என்ன சார் யோசிக்கிறீங்க. நிச்சயம் நடக்கும். உங்கள் மருத்துவமனை திறப்பு விழாவில், நான் தான் முதல், 'பேஷன்ட்' ஆக வருவேன்...' என்று சொல்லி, சிரித்தாள். அவள் சொன்ன மாதிரி, அடுத்த நாள் சென்றேன் ஏதோ கும்பிட போன தெய்வம் நேரில் வந்தது போல இருந்தது. இன்று, 40 அறைகள் கொண்ட, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை என்னுடையது. ஆனால், இன்று வரை, அந்த டயானா வரவில்லை.உனக்காக காத்திருக்கிறேன். டயானா, நீ எங்கே, என்னைப் பார்க்க ஒரு நாள் வருவாயென, நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன். என் ஒரு ரூபாய் சம்பாத்தியத்திலும் உன் முகம் பார்க்கிறேன்.ரயில்வே கேட்டில் நின்று கொண்டிருந்தது, கார். 'கடகட'வென்று பலத்த சத்தத்துடன், ரயில் சென்றவுடன் தான், அனைவரும் சுயநினைவுக்கு வந்தனர். ''டயானாவை நம் வாழ்நாள் முடிவதற்குள் பார்க்க முடியுமான்னு தெரியல,'' என, விரக்தியுடன் சொன்னார், டாக்டர் முருகன்.''நமக்குள் ஒரு ஒப்பந்தம். ஒருவேளை நம்மில் யாராவது ஒருவர் டயானாவை பார்த்து, மற்றவர்கள் இறந்து போய் இருந்தால், நாம் அவளைத் தேடியதும், அவள் சந்திப்புக்குப் பிறகு எவ்வளவு உயர்ந்த நிலைக்கு நாம் வந்தோம் என்பதையும் அவளிடம் சொல்ல வேண்டும்,'' எனக் கேட்டுக்கொண்டார், ஆனந்தன்; அவர் கண்கள் கலங்கி இருந்தது.''ஏன் இப்படி பேசுற ஆனந்தன். நிச்சயம் நம்மைத் தேடி ஒருநாள், டயானா வருவாள்,'' என்றார், சவுந்தர். ''எனக்கு சந்தேகம் தான். ஏனென்றால், ஆஸ்பத்திரிக்கு, 'லோன் அப்ரூவல்' பண்ணின அந்த அதிகாரியிடம் பல முறை கேட்டேன். 'அவளை மீண்டும் பார்க்கவில்லை; மேலும், அவள் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை...' என்று கூறினார். ''பின்னர் ஒரு நாள் ரகசியமாக என்னிடம், 'நான் சந்தித்த பெண்களிலே மிகவும் வித்தியாசமானவள்; யாரிடமும் ஒப்பிட்டு பார்க்கவே முடியாத அற்புதப் பெண். ஒருவேளை அவளை நீங்கள் சந்தித்தால், அவள் விருப்பப்படி, உங்களுக்கு உதவி செய்ததாக சொல்லி விடுங்கள்; அவள் மிகவும் மகிழ்ச்சி அடைவாள்...' என்று சொன்னார். சொல்லுங்க குணா... நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்றார், டாக்டர் முருகன்.''டயானா... அவள் உயிரோடு இருக்கும் வரை, நம்மைப் போன்ற பலரையும் திருத்தி, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய தீக்குச்சியா அழிந்தோ அல்லது மெழுகுவர்த்தியாய் கரைந்து கொண்டோ தான் இருப்பாள். ஆனால், அவள் காற்றைப் போன்றவள்; உணரத்தான் முடியும், பார்க்க முடியாது,'' என்றார், குணசேகரன். ரா. கதிரேசன்