உள்ளூர் செய்திகள்

உண்மையாளர் யார்?

ஒரு ஊருக்கு சென்ற முனிவர், 'இந்த ஊரில், உண்மையாளர் யார்...' என்று வினவினார்.'அதோ தெரிகிற, மாடி வீட்டில் வாழும், பெரியவர் தான் உண்மையாளர். அவரிடம், செல்வமும், நான்கு புதல்வர்களும் உள்ளனர்...' என, கூறினர்.அந்த வீட்டிற்கு முனிவர் சென்றதும், அங்கிருந்த பெரியவர், ஓடி வந்து, அழைத்து, ஆசனத்தில் அமர செய்தார். 'பெருமானே... உணவு அருந்த எழுந்தருள வேண்டும்...' என்றார்.அவரின் அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களை கண்டு முகமலர்ந்து, உண்மையாளர் தானா என்று சோதித்த பின்னரே, உணவு அருந்த எண்ணினார், முனிவர்.'ஐயா... உமக்கு, செல்வம் எவ்வளவு...' என்றார்.'சுவாமி... 22 ஆயிரம் ரூபாய்...''குழந்தைகள் எத்தனை பேர்?''ஒரே புதல்வன் தான்...''உம் வயது என்ன?''சுவாமி... எனக்கு வயது, மூன்று வருஷம், ஐந்து மாதம், ஏழு நாள், பதினாறரை மணி...''நீர், சுத்த புளுகன், உம் வீட்டு அன்னம், என் தவத்தை அழிக்கும். நான், பொய்யர் வீட்டில் சாப்பிட மாட்டேன்...' என, சீறி எழுந்தார், முனிவர்.உடனே, அவர் காலில் விழுந்து, 'அருள் நிறைந்த அண்ணலே... ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன். இது, சத்தியம்...' எனக் கூறியவர், தன் வரவு - செலவு புத்தகத்தை காட்டி, 'இருப்புத் தொகை, ஒரு லட்சம் ரூபாய். தர்ம கணக்கில், இதுகாறும், 22 ஆயிரம் ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தர்மம் புரிந்த பணம் தானே என்னுடையது. இப்போது, நான் மாண்டால், பெட்டியில் உள்ள பணம் என்னுடன் வராதே; உடன் வருவது தர்மம் ஒன்று தானே...' என்றார்.'ஆமாம்... உனக்கு, நான்கு புதல்வர்கள் என்று கேள்விப் பட்டேனே...' என்றார், முனிவர்.'சுவாமி... எனக்கு பிறந்த பிள்ளைகள் நால்வர். ஆனால், என் பிள்ளை ஒருவன் தான்...' என்றார்.'அப்பா... நீ சொல்வதன் கருத்து, எனக்கு விளங்கவில்லையே?' என்றார், முனிவர்.மூத்த மூன்று மகன்களை அழைத்தார், பெரியவர். மகன்கள் ஒருவர் கூட அவரை மதிக்காமல், எடுத்தெறிந்து பேசினர்.'மகனே, கந்தசாமி...' என்று, நான்காவது மகனை அழைத்தார்.ஓடி வந்து, பெரியவரையும், முனிவரையும் வணங்கி, 'சுவாமி... பால் அல்லது பழம் எடுத்து வரட்டுமா...' எனக் கேட்டு, உபசரித்து, விசிறியால் வீசியபடி பணிவுடன் நின்றான், கந்தசாமி.'சுவாமி... அந்த மூவரும், என் கருத்துக்கு முரண் ஆனவர்கள். போன பிறப்பில் கடன்காரர்கள். இவன் ஒருவன் தான், என் பிள்ளை...' என்றார், பெரியவர்.'அப்பா... உன் கருத்து, உவகையை தருகிறது. வயது விஷயத்தில் நீ கூறியதன் உட்பொருள் என்ன?' என்றார்.'சுவாமி... நாள் ஒன்றுக்கு, ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கிறேன். மீதி நேரம், வயிற்றுக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைக்கிறேன். இறைவனை பூஜிக்கும் நேரம் தான், எனக்கு சொந்தம். ஐந்து வயதிலிருந்தே பூஜிக்கிறேன். 'ஆகவே, அடியேன் பிறந்து, 60 ஆண்டுகள் ஆனாலும், பூஜை செய்த நேரத்தையே என் வயதாக கருதுகிறேன்...' என்றார்.இதை கேட்ட முனிவர், பெரிதும் மகிழ்ந்து, அவர் வீட்டில் உணவு அருந்தி, அவரை வாழ்த்திச் சென்றார்.எனவே, அந்த பெரியவர் போல், நாமும், நம் வாழ்க்கை கணக்கில் புண்ணியங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஏ. எஸ். ஜி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !