நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர். (18)
என் சினிமா பிரவேசம், வயிற்றுப் பிழைப்புக்காக தான் என்றாலும், என் உலக அறிவிற்கு, பெரிய அஸ்திவாரத்தை போட்டவர், என்.எஸ்.கே.,சதி லீலாவதி படத்தில், எனக்கு இன்ஸ்பெக்டர் வேடம்; ஒரு காட்சியில், சில போலீசாருடன் சைக்கிளில் வரும் நான், சைக்கிளை அப்படியே விட்டு விட்டு, குற்றவாளியை துரத்த வேண்டும். ஆனால், எனக்கோ சைக்கிள் ஓட்டத் தெரியாது. என் தாய், சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள, என்னை அனுமதித்ததில்லை. கோலி கூட விளையாடத் தெரியாது.இயக்குனர் டங்கன் என்னை சைக்கிளை ஓட்டிப் போக சொன்னார்; எனக்கு தெரியாது என்று சொன்னேன்.அவரால் நம்ப முடியவில்லை. 'சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதவன் நடிகனா...' என்பது போல் பார்த்தார். வேறு வழியின்றி, என்னை சைக்கிளின் மீது உட்கார வைத்து, இருவர் பிடித்துக் கொள்ள, கேமரா ஓடத் துவங்கியதும், சைக்கிளோடு என்னை தள்ளி விட்டனர்.அது, ஒரு மரத்தடியை நோக்கி சென்றதும், 'பிரேக்'கை போட்டு, சாய்ந்து இறங்கி, சைக்கிளை நிறுத்தி விட்டு ஓட வேண்டும். நான் தான், முரட்டுத்தனமானவனாயிற்றே!தள்ளி விட்டவர்கள், பயந்ததற்கு நேர்மாறாக, சைக்கிளை, 'பிரேக்' போட்டு, அது, சாய்ந்த பக்கம் இறங்கி, அப்படியே அதை மரத்தின் மீது எறிந்து விட்டு ஓடினேன்.காட்சி முடிந்தது; ஒரு வகையில் எல்லாருக்கும் திருப்தி. ஆனால், அங்கு வந்த ஒல்லியான இளைஞர் ஒருவர், 'எவன், என் சைக்கிளை எடுத்தது... யாரைக் கேட்டு எடுத்தாங்க...' என்று, ஆத்திரத்தோடு கத்தினார்.டங்கனுக்கு தமிழ் தெரியாததால், அவர் யாரோ, எதற்கோ கத்துகிறார் என்பது போல், 'ஏன் சத்தம் போடுகிறார்?' என்று கேட்டார்.அருகிலிருந்த, கே.எஸ்.மணி விவரத்தை சொல்ல, விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கினார்.சின்னஞ் சிறு நகைச்சுவையையும் ரசித்து அனுபவிக்கும் அவர், சைக்கிளின் சொந்தக்காரர், கோணிப் போன நிலையிலுள்ள சைக்கிளை பார்த்து ஆத்திரப்படுவதை கண்டு எப்படி சிரிக்காதிருக்க முடியும்!அந்த சைக்கிளின் சொந்தக்காரர் தான், பிற்காலத்தில் பிரபல இயக்குனராக விளங்கிய கிருஷ்ணன். கிருஷ்ணன் - பஞ்சு என்றழைக்கப் பட்டவர்களில் முதலாமவர்!சதிலீலாவதி படத்துக்காக, உதவி இயக்குனராக பணியாற்றினார், கே.எஸ். மணி. தீவிர சுயமரியாதைக்காரர்; தன் கருத்தை, அப்பட்டமாக வெளிப்படுத்தும் துணிவு மிக்கவர்; பிற்காலத்தில், என்.எஸ்.கிருஷ்ணனின் வலது கரம் போல், அவருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் உதவியாயிருந்தவர்; என் பிற்கால வாழ்க்கையிலும், குறிப்பிடத்தக்க நேரங்களில், எனக்கு துணை புரிந்தவர். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று நினைவு; அக்கம்பெனியின் உரிமையாளர்களுக்கும் நெருங்கியவர்.சைக்கிள் ஓட்டத் தெரியாதது அவமானமாக இருந்தது; எப்படியாவது, சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தேன். தாயின் அனுமதி பெற வேண்டுமே... அண்ணனிடம் சொன்னேன்; அவர், எனக்காக, என் தாயிடம் பரிந்து பேசி, அனுமதி பெற்றார்.'படங்களுக்காக மட்டும் தான் ஓட்ட வேண்டும்; அதுவும், வேகமாக ஓட்டக் கூடாது; தெருவில் ஓட்டவே கூடாது...' என்ற நிபந்தனையோடு அனுமதி வழங்கப்பட்டது.நான், சைக்கிள் ஓட்டத் தெரியாமல் தவித்ததை அறிந்த, என்.எஸ்.கே., சைக்கிளை கொண்டு வரச் செய்து, எனக்கு கற்றுக் கொடுக்கத் துவங்கினார்.நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு பக்கத்தில், நிறைய இடமும், அருகில், பெரிய குளமும் இருந்தது. அங்கு, என்.எஸ்.கே., சைக்கள் ஓட்டக்கற்றுக் கொடுக்க, நானும், ஆர்வத்தோடு பயின்றேன்.சுமாராக ஓட்டத் தெரிந்ததும், குளத்தின் ஓரத்தில் ஓட்டிப் பார்க்க ஆசைப்பட்டேன். படித்துறை இல்லாமல், இயற்கையாய் அமைந்த கரை என்பதால், சாய்வாக இருந்தது. குளத்தில் கொஞ்சம் தண்ணீரே இருந்ததால் தைரியமாக, சர்க்கசில், கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் விடுவரே... அதுபோன்று, குளக்கரையின் சாய்ந்த பரப்பில், சைக்கிள் ஓட்ட, சிறிது நேரத்திற்கு பின், என் முழங்கால், முழங்கைகளில் தேங்காய் எண்ணெய் பூசிக் கொண்டிருந்தேன். உடனே, என் அண்ணன், 'காட்சிக்கு தேவைப்பட்டாலொழிய, இனி, நீ சைக்கிள் ஓட்டக் கூடாது...' என்று கட்டளை பிறப்பித்தார். இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டும், சைக்கிள் ஓட்டும் ஆசை, சிறிதும் குறையவில்லை.கம்பெனிக்கு யாராவது சைக்கிளில் வந்து விட்டால் போதும்... கொஞ்ச நேரத்திற்குள் அது, திருடு போய் விடும். வந்தவர்கள், எவ்வளவு அவசர வேலை இருந்தாலும், அரை மணி நேரமாவது காத்திருந்து தான், அவர்கள் சைக்கிளை பெற முடியும். நான், அந்த சைக்கிளில் ஏறி, பயிற்சி செய்து திரும்ப, எடுத்த இடத்தில் கொண்டு வந்து வைத்து விடுவேன்!இந்த உணர்ச்சியும், வேகமும் சைக்கிள் ஓட்டக் கற்று கொள்வதில் மட்டும் தான் என்று எண்ணி விட வேண்டாம்; என்னிடம் இல்லாத எந்த தனிச்சிறப்பை, மற்றவர்களிடம் கண்டாலும், அதை பெற வேண்டும் என்று கருதுவதுடன், அதைப் பெறுகிற முயற்சியில் ஆர்வத்தோடு ஈடுபடுவது வழக்கம்.அக்காலத்தில், நந்தாராம் பயில்வான் என்பவர், அனுமார் மற்றும் பீமன் போன்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.நல்ல உடற்கட்டு உடையவர்; பார்வைக்கு கம்பீரமாக தெரிவார்.அவரைப் போல் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, உடற்பயிற்சியில் தீவிர நாட்டம் கொண்டேன்.அந்நாட்களில், வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில், பட்டினத்தார் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இசைக் கடல் என்று சிறப்பிக்கப்படும்,எம்.எம். தண்டபாணி தேசிகர், அப்படத்தில், பட்டினத்தாராக நடித்தார். அப்போது, அவரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.பட்டினத்தார் கதையில், பேய் கரும்பு தித்திக்கிற காட்சி, படம் எடுக்கப்பட்ட நேரத்தில், ஒரு சுவையான நிகழ்ச்சி நடைபெற்றது.தண்டபாணி தேசிகர் பாடி நடிக்கும் அக்காட்சியை, நல்ல வெயிலில், மணற் பரப்பான இடத்தில் படம் எடுத்தனர்.அப்போதெல்லாம், பின் குரல் பதிவு முறை இல்லை; நேர்முகமாக, ஒவ்வொரு, 'ஷாட்'டிலும் பாட வேண்டும்; ஒரு, 'ஷாட்'டில், எத்தனை, 'டேக்' வந்தாலும், திரும்பத் திரும்ப பாடியே ஆக வேண்டும்.தொடர்ந்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது; மூன்றாவது நாளும் படப்பிடிப்பு ஆரம்பமாயிற்று.எனக்கும், என் அண்ணனுக்கும் சினிமாத் துறை புதிது என்பதால், 'எடுத்ததையே, ஏன் திரும்பத் திரும்ப எடுக்கின்றனர்...' என்று நினைத்து, அதைப் பற்றி விசாரித்த போது, 'முதலில் எடுத்தது சரியாக படமாகவில்லை; அதனால், மீண்டும் எடுக்கின்றனர்...' என்றனர்.'அது எப்படி?' என்று கேட்ட போது, 'கேமரா வைக்கப்படும் ஸ்டாண்டின் முன்னங்கால், கீழே உள்ள மணலில், அதிகமாக அழுந்தி விட்டதால், கேமரா தாழ்ந்து விடவே, நடித்தவரின் முகம் பதிவாகாமல், கழுத்துக்கு கீழ், உடல் பகுதி மட்டுமே பதிவாகி விட்டது; இது தெரியாமல், தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. பின், உண்மை தெரிந்ததும், முதலில் எடுத்த பகுதியை மீண்டும் எடுக்கின்றனர்...' என்றனர்.இதனால், மிகவும் நொந்து விட்டார், தண்டாணி தேசிகர். எப்போதும், நகைச்சுவையோடு பேசும் இயல்புடைய அவர், 'வெயில்ல நிக்க வெச்சு கொல்றாங்களே... நல்ல தண்டனைப்பா இது...' என்று சொல்லியவாறு, தன் சிரமத்தை தாங்கியபடி நடித்தார்.—- தொடரும்.நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.