பட்ட மரம் துளிர் விடுமா?
சண்முகத்திற்கு உடல்பலம் மற்றும் பண பலம் இருந்ததால், அக்காலனியில் யாரையும் மதிக்காமல் அடாவடியாக பேசுவான். அதனால், எல்லாரும் அவனைக் கண்டு ஒதுங்கிப் போவர். ஆனால், அவனோ, தன்னைக் கண்டு அனைவரும் பயப்படுவதாக நினைத்து, பெருமைபட்டுக் கொள்வான்.அவனுடைய வசதி வாய்ப்பை பார்த்து, அவனுக்கு, பாக்கியத்தை திருமணம் செய்து வைத்தனர்.மனைவிக்குரிய எந்த மரியாதையையும் பாக்கியத்திற்கு தர மாட்டான் சண்முகம். இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு பன்னீர் செல்வம் என்று பெயர் வைத்து, அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்து வந்தான் சண்முகம்.'குழந்தைக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க... கெட்டுப் போயிடுவான்...' என்று சொல்லிப் பார்த்தாள் பாக்கியம்.'குழந்தைய எப்படி வளக்கணும்ன்னு எனக்கு தெரியும். உன் வேலையப் பாரு...' என்று சத்தம் போட்டு, பாக்கியத்தின் வாயை அடக்கி விடுவான்.ஒருமுறை, நாலு வயது சிறுவனான பன்னீர் செல்வத்தின் முன், சிகரெட் பிடித்து, சுருள் சுருளாக புகையை விட்டு வேடிக்கை காட்டியபடி இருந்தான் சண்முகம்.'ஏனுங்க... குழந்தைக்கு வேற விளையாட்டு காட்டக் கூடாதா?' என்று ஆதங்கத்துடன் கேட்டாள் பாக்கியம்.'ஏண்டி... நாலு எழுத்து படிச்சிருக்கற திமிரை எங்கிட்டயே காட்டுறீயா...' என்று, அவளை எட்டி உதைத்தான் சண்முகம்.பன்னீர்செல்வம் வளர வளர அவன் ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தது.ஒரு நாள் காலையில், பக்கத்து வீட்டு பெண்மணி சண்முகத்தை தேடி வந்து, 'சண்முகம்... உங்க வீட்டு,'செப்டி டேங்க்' நிறைஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சுத்தம் செய்யுங்கப்பா... ஒரே நாத்தமா இருக்கு...' என்றாள்.'செப்டி டேங்க்' நாத்தம் வந்தா, நீயா எப்படி எங்க வீட்டு,'செப்டி டேங்க்' தான்னு முடிவு செய்யலாம்... அக்கம் பக்கம் எத்தனை வீடு இருக்கு; அங்கயெல்லாம் போய் சொல்ல வேண்டியது தானே...' என்று கூச்சல் போட்டான்.அந்தக் காலை நேரத்திலும், அவனிடமிருந்து சாராய நாற்றம் அடித்தது.அந்தப் பெண்மணி அகன்றதும், 'ஏங்க... நம்ம வீட்டு, 'செப்டி டேங்க்' தாங்க நிரம்பி வழியுது. கழிப்பறையில தண்ணீ ஊத்தினா போக மாட்டேங்குது...' என்றாள் பாக்கியம்.'வாயை மூடிட்டு உள்ளே போடி... எனக்கு எல்லாம் தெரியும்... அக்கம், பக்கதில இருக்கிறவங்க கிட்ட இப்படி பேசினா தான், அவங்களுக்கு நம்ம கிட்ட பேச பயம் இருக்கும்...' என்றவன், அருகில் நின்றிருந்த மகனிடம், 'டேய்... எல்லாருக்கும் நம்மளப் பாத்தா ஒரு பயம் இருக்கணும். அப்படியிருந்தா தான் நம்ம பேர்ல தப்பு இருந்தாலும், ஒருத்தனுக்கும் நம்ம கிட்ட கேள்வி கேட்க தைரியம் வராது...' என்று தன் அனுபவங்களை, தம் மகனுக்கும் சொல்லிக் கொடுத்தான். அப்பாவைப் பார்த்து அவனும், தன் நண்பர்கள் தன்னிடம் அச்சத்துடன் பழகும்படி பார்த்துக் கொண்டான்.பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் மிக குறைவான மதிப்பெண்களே வாங்கியிருந்தான் பன்னீர்செல்வம்.அவன் வகுப்பாசிரியர், 'நாளைக்கு வரும் போது உங்கப்பாவ கூட்டிட்டு வா...' என்றார்.மறுநாள், தன் தந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். 'நீங்க தான் அப்பாவா?' என்று கேட்டார் ஆசிரியர்.'ஆமாம்...எதுக்காக வரச் சொன்னீங்க?' 'உங்கப் பையன் எல்லாப் பாடங்களிலும் பெயில்; பள்ளி கூடத்துக்கும் ஒழுங்கா வர்றதில்ல. அப்படியே வந்தாலும், ஸ்கூல, 'கட்' அடிச்சிட்டு மத்த பையன்களையும் கூட்டிட்டு சினிமாவுக்கு போயிடறான்...' என்றார்.'இவன் கூப்பிட்டா அவங்களுக்கு எங்க போச்சு புத்தி... நீங்க, வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்தா, அவனும் நல்லா படிப்பான்...''நீங்க பேசறது சரியில்லே... இப்படி பொறுப்பில்லாம பேசினா, உங்க பையன் மேல கடுமையா நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்...' என்றார் ஆசிரியர்.'ஓய் வாத்தி... யாரிடம் என்ன பேசறதுன்னு யோசித்து பேசு. நான் யாருன்னு தெரியுமா? நீ முத்து நகர்ல தானே குடியிருக்கிறே... உனக்கு வயசுக்கு வந்த மூணு பொண்ணுங்க இருக்கிறாங்கள்ல, ஜாக்கிரதை...' என்றான்.பொண்ணு, அது, இதுன்னு சொன்னவுடன் ஆசிரியருக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.ஆசிரியரையே மிரட்டியதால், அப்பா, அவனுக்கு ஹீரோவாக தெரிந்தார்.அதன்பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடத்திலும் தோல்வியடைந்தான். உடனே அப்பாவிடம் சொல்லி, நகரத்தில் இருக்கும் டுட்டோரியல் காலேஜில் சேர்ந்தான். அங்கு அவனுக்கு ஜாலியாக பொழுது போனது. அவனைப்போன்ற குணம் படைத்த நண்பர்களுடன் சேர்ந்து, அங்கு படிக்க வரும் பெண்களையும், அவ்வழியே கல்லூரிக்கு போகும் பெண்களையும், வம்பு செய்வதும், பின் வீட்டிற்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து கம்ப்யூட்டரில், பலான படங்களையும் பார்ப்பான்.பாக்கியம் ஏழையாக இருந்தாலும், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள். குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்று அவளுக்கு தெரியும்.ஆனாலும், அகந்தையும், அதிகாரமும் உள்ள கணவன், செல்லம் கொடுத்து, பணமும் கொடுத்து மகனை கெடுப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.வளர வளர அவ்வீட்டில் தன் அம்மாவால் எதையும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டவன், தந்தையிடமே பாசத்தை காட்டி, தன் காரியங்களை சாதித்துக் கொண்டான். 16 வயதிலேயே தேவையில்லாத எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். தன் வயது நண்பர்களை சேர்த்துக் கொண்டு படிப்பை, பொழுதுபோக்கும் ஒரு கருவியாக நினைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேச ஆரம்பித்த போது தான் சண்முகத்திற்கு பயம் ஏற்பட்டது. ஒருமுறை வீண் செலவை கண்டித்த போது, 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது; பேசாம போங்கப்பா...' என்று அலட்சியமாக பேசினான்.சண்முகம் வெறும், சவடால் பேர்வழி. மற்றவர்களிடம் எப்பிரச்னை வந்தாலும் சத்தமாகவும், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசுவான். அதிலேயே பாதிப் பேர் பயந்து நடுங்கி விடுவர். எதிரி ஓங்கிய கையை பிடித்து முறுக்கி, ஒரு அறை விட்டால், 'ஐயோ... அண்ணா என்ன இப்படி செய்துட்டீங்க...' என்று, சம்பந்தபட்டவர் காலை பிடித்து உட்கார்ந்து விடுவான். அவன் அதிர்ஷ்டம் அதுவரை யாரும் போவதில்லை. சத்தமாக பேசிக் கொண்டிருக்கும் போது, ஏதோ வேலையாக ஒரு போலீஸ்காரர் அவ்வழியாக போனால், பாத்ரூம் போவது போல் உள்ளே போய் விடுவான். இந்த ரகசியம் தெரியாமல் இருப்பதால் தான் அவனைக் கண்டு பலர் பயப்பட்டனர்.காலை, 11:00 மணி —தன் நண்பர்களோடு அறையில் உட்கார்ந்து சத்தமாக பேசிக்கொண்டிருந்தான் பன்னீர் செல்வம்.''அவளுக்கு அவ்வளவு திமிரா... நானும், 10 நாட்களா அவ பின்னாடியே போறேன்... திரும்பி கூட பாக்க மாட்டேன்கிறா,'' என்றான்.''ஆமாண்டா... நான் கூட அவ பக்கத்துல போய் லேசா கண்ணடிச்சேன்... அதுக்கே மொறைக்குறா,'' என்றான் மற்றொருவன்.''அவளுக்கு கொழுப்பு ரொம்ப ஏறிப் போச்சு; நாம நாலு பேரும் அவளை தூக்கிட்டு போய், 'ரேப்' செய்தா தான் அவளுக்கெல்லாம் புத்தி வரும்,'' என்றான் பன்னீர் செல்வம்.ஹாலில் உட்கார்ந்திருந்த சண்முகத்தின் காதில் இந்தப் பேச்சு விழுந்ததும், அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் பற்றி தினசரி பத்திரிகைகளில் படித்திருந்தான்.தன் மகன் படித்து உயர் பதவிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை; கை விலங்கிட்டு காவல்துறை, இழுத்துப் போகாமல் இருந்தால் போதும் என்றிருந்தது.அங்கே வந்த பாக்கியத்திடம், ''ஏண்டி... உன் மகன் பேசறத கேட்டியா...'' என்றான்.''இவ்வளவு நாளா செல்லம் கொடுத்து, அவனை தத்தாரியாக்கிட்டு இப்ப மட்டும் அவன் என் மகனா...'' என்றாள் பாக்கியம்.''சரி... இப்ப அதைப் பேசி என்ன செய்றது... நல்லா படிப்பான்னு தான் அவன் கேட்டத எல்லாம் வாங்கிக் கொடுத்தேன்,'' என்றான்.''படிச்சுப் படிச்சு சொன்னேன் கேட்டீங்களா... என்னை ஒரு மனுஷியா கூட நீங்க மதிக்கல... வளர விட்டுட்டு இப்ப வந்து என்ன செய்றதுன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்? கேட்கிறத எல்லாம் வாங்கிக் கொடுத்தா மட்டும் படிப்பு வந்துடாதுங்க. படிப்பு அவசியம்ங்கிற எண்ணத்த ஆரம்பத்தில இருந்து குழந்தைங்க மனசிலே பதிய வைக்கணும்.''அதோட அது, ஒழுக்கத்தோட கூடிய படிப்பா இருக்கணும்... இல்லாட்டா கல்வியால கிடைச்ச புத்திய தப்பான வழிக்கு தான் பயன்படுத்துவாங்க. நம்ம நாடு வேகமாக முன்னேறாததற்கு காரணம், படிக்காதவங்க இல்ல, ஒழுக்கத்த கற்றுக் கொடுக்காத கல்விய படிச்சவங்க தான் காரணம்,'' என்றாள்.''நீ என்னடி சொல்றே... ஒண்ணுமே புரியல. நான் அவனுக்காக எவ்வளவு செய்திருக்கேன் தெரியுமா?''என்றான்.''என்ன செய்திருக்கீங்க... அவன் கேட்டத எல்லாம் வாங்கிக் கொடுத்து, அவனோட உடம்பத் தான் வளத்திருக்கீங்க. ஒழுக்கம் சார்ந்த அறிவு வளர ஐந்து பைசா செலவு செய்திருப்பீங்களா... பெத்தவங்க, குழந்தைகளோட உடம்பு வளர்ச்சியை மட்டும் பாத்தா போதாதுங்க; வயசுக்கு தகுந்த அறிவு வளர்வதையும் கவனிக்கணும்.''அவங்களுக்காக நேரம் ஒதுக்கி, அவங்களோட செலவழிக்கணும்; பெற்றோரிடம் மனம் விட்டு பேசி வளர்ற எந்தக் குழந்தையும் கெட்டுப் போகாது. குழந்தைகளோட மிக முக்கிய குணமே, 'மாடலிங் பிஹேவியர்' தாங்க. அவங்க தங்களுக்கு பிடிச்சவங்கள பெரிய ஹீரோவா நினைச்சு, அவங்க மாதிரியே நடந்துக்க முயற்சி செய்வாங்க.''குழந்தைங்க முதன் முதல்ல பார்த்து பழகுவது அவங்க பெத்தவங்களோட பழக்க வழக்கங்களைத் தான். நீங்க அவன் முன்னாடி எப்படி நடந்துக்கிட்டீங்க... பெரிய தாதா மாதிரியும், கெட்ட வார்த்தை பேசி சண்டை போட்டா ஊரே பயப்படுங்கிறத மாதிரி நடந்துக்கிட்டீங்க. அதையே தான் இப்ப உங்க பையனும் கடைபிடிக்கிறான்,'' என்றாள்.''என்னடி... திரும்ப திரும்ப பழைய கதையையே பேசறே... நான் தான் தப்பு செய்துட்டேன்; இப்ப நம்ம பையனை ஏதாவது பெரிய வம்பில சிக்காம காப்பாத்தணுமே... அதற்கு என்ன செய்யலாம்ன்னு சொல்லு,'' என்றான்.''வியாதி கொஞ்சம் முத்திப் போச்சு... இது, மருந்து, மாத்திரைக்கு குணமாகாது; ஆப்ரேஷன் தான் செய்யணும். அவனோட நண்பர்கள இனி நம்ம வீட்டு பக்கம் வர விடாம தடுக்கணும். அதோட அவனுக்கு நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்களே... பைக் அத முதல்ல வித்து தொலைங்க. ''அவன் படிச்சதெல்லாம் போதும்; டுடோரியல் காலேஜுக்கு இனி போக வேண்டாம். 24 மணிநேரமும் அவன் உங்க கண் பார்வையிலே இருக்கட்டும். அவனுக்கு 16வயது தானே ஆகுது; முழுசா கெட்டிருக்க மாட்டான். வயசு கோளாறு, உங்களோட தவறான வழிகாட்டுதலாலும், கூடாச் சேர்க்கையாலும் கெட்டுப் போயிருக்கான்; சூழ்நிலை மாறினா திருந்திடுவான்.''தவறான வழியில் போனா வாழ்க்கையே நாசமா போயிடுங்கிறத கொஞ்ச கொஞ்சமா அவனுக்கு புரிய வைக்கணும். நிஜமாவே படிக்க ஆசை வந்தா படிக்க வைக்கலாம். இதெல்லாம் அவன்கிட்ட நீங்க நடக்கிறதைப் பொறுத்து இருக்கு,'' என்றாள்.''அது சரி... நான் திருந்திடுறேன்; என் மகன் திருந்திடுவானா?''என்று ஏக்கமாக கேட்டான் சண்முகம்.''மரம் பட்டுத்தான் போச்சு; ஆனா, வேர் இன்னும் கெட்டிருக்காது. மருந்தடிச்சு, நல்ல உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சுவோம்... நிச்சயம் கோடை மழையில் துளிர் விடும்ன்னு நம்புவோம்,'' என்றாள்.பட்ட மரம் துளிர் விடுமா... பன்னீர் திருந்தி நல்வழிக்கு வந்து, பாக்கியம் ஆசை நிறைவேறுமா என, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். துடுப்பதி ரகுநாதன்