உள்ளூர் செய்திகள்

பெண்கள் நமது கண்கள்!

மே 5 - மீனாட்சி பட்டாபிஷேகம்'பெண்களை பாதுகாக்காத நாடும், வீடும் நன்றாக இருக்காது...' என்கின்றனர் மகான்கள். இதனாலேயே, ஆன்மிகத்தில் சக்தி வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான்; அவளுக்கு வித்யாவதி என, பெயர் சூட்டினான். அம்பாள் மீது அதீத பக்தி கொண்ட வித்யாவதி, பூலோகத்தில், புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையை தரிசிக்க வேண்டுமென்ற தன் ஆசையை தந்தையிடம் தெரிவித்தாள்.மதுரையில், கடம்பவனம் எனும் இடத்தில் எழுந்தருளிய சியாமளையை வழிபடும்படி கூறினான், விசுவாவஸு.அதன்படி, கடம்பவனத்திற்கு வந்த வித்யாவதி, சியாமளாதேவியின் மீது மிகுந்த பக்தி கொண்டு, அங்கேயே தங்கி, சேவை செய்தாள். அவளுக்கு, மூன்று வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, 'என்ன வரம் வேண்டும் கேள்...' என்றாள்.அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி, அவளே, தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என, வேண்டினாள். அவளது விருப்பம், அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள், அம்பாள்.இதன்படி, அடுத்த பிறப்பில், சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சன மாலையாக பிறந்தாள், வித்யாவதி. அம்பாள் பக்தையாக திகழ்ந்த அவளை, மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவர்களுக்கு புத்திரப்பேறு இல்லை. முற்பிறவியில் தனக்கு அருள் செய்த சியாமளையிடம், குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டினாள், காஞ்சன மாலை.மன்னனும் புத்திரப்பேறுக்காக, புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினான்; அந்த யாகத்தில் மூன்று வயது குழந்தையாக தோன்றினாள் அம்பிகை. அப்போது, காஞ்சன மாலைக்கு, முற்பிறவியில், அம்பிகை தனக்கு வாக்களித்தது நினைவுக்கு வர, அதை மன்னனிடம் தெரிவித்தாள். மகிழ்ந்த மலையத்து வசனும், காஞ்சனா தேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆய கலைகளையும் கற்றுக்கொடுத்து, தனக்கு பின், மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான்.இந்நிகழ்ச்சி, சித்திரை திருவிழாவின் போது பட்டாபிஷேக விழாவாக கொண்டாடப்படுகிறது. இவள், மீன் போல எப்போதும் விழிப்புடன் மதுரையை ஆட்சி செய்ததால், 'மீனாட்சி' என்று பெயர் பெற்றாள். இதன்பின், சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயர் நிலைத்து விட்டது.இவ்வாறு, தன்னை நம்பிய பக்தைக்கு அருளியவளாக, இத்தலத்தில் அருளுகிறாள், அன்னை மீனாட்சி. இதனால் தான், பெண்களின் தெய்வமாக கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் - குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும், மீனாட்சியை வணங்குகின்றனர், பெண்கள்.ஒரு வீட்டில், பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால், அவ்வீடு, மதுரை என, பெயர் பெறும் அளவுக்கு, மீனாட்சியின் புகழ், கொடி கட்டிப் பறக்கிறது. மீனாட்சியின் பட்டாபிஷேக நாளில், பெண்களை, தங்கள் கண்களாகக் கருதும், மனப்பக்குவத்தை பெறுவோம்!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !