உலக மகா பரங்கிக்காய் - கே.மணிமுகிலன்
குட்டி கார் ஒன்றின் எடையை விட, காய்கறி ஒன்றின் எடை அதிகமாக இருக்குமா? இருக்கும் என நிரூபித்துள்ளார் விவசாயி ஒருவர். 750 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பறங்கிக்காய் ஒன்றை இவர்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.பிரிட்டனைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இயான் மற்றும் ஸ்டூவர்ட் பாடன். இவர்கள் ஹாம்ஷயர் என்ற இடத்தில் லிமிங்டன் என்ற ஊரில் விவசாய பண்ணை வைத்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக, மிகப்பெரிய பறங்கிக்காய்களை உற்பத்தி செய்வதுதான் இவர்கள் பொழுதுபோக்கு. சமீபத்தில், இவர்கள் மிகப்பெரிய பறங்கிக்காயை காட்சிக்கு வைத்தனர். 17 அடி சுற்றளவும், 750 கிலோ எடையும் கொண்ட இந்த பறங்கிக்காய், இதற்கு முந்திய சாதனைகளை முறியடித்து விட்டது. இந்த சாதனை குறித்து சகோதரர்கள் இருவரும் கூறியதாவது:காய்கறி விளைச்சலில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதே போல் ஆறு பெரிய பறங்கிக்காய்களை உற்பத்தி செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பண்ணையில் வளரும் பறங்கிக்காய் சைஸ் பெரிதாகிக் கொண்டே போகிறது. கலப்பின விவசாய திட்டத்தின் மூலம் இது முடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பளபளவென மஞ்சள் நிறத்தில் மின்னும் இந்த உலகமகா பறங்கிக்காயை, அதிக எடைகளை தூக்கும் லிப்ட் லாரி மூலம் போட்டி நடக்கும் இடத்திற்கு கொண்டு வந்தனர். 2008ல் இதே சகோதரர்கள் 660 கிலோ எடை கொண்ட பறங்கிக்காயை காட்சிக்கு வைத்தனர். இப்போது அந்த சாதனையை முறியடித்து பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.பிரிட்டனில், 'பியட்500' என்ற குட்டி கார் விற்பனையாகி வருகிறது. அந்த காரை விட, இவர்கள் தயாரித்த பறங்கிக்காயின் எடை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ***