புழு, பூச்சி, மனிதர்கள்.......
புழுதி பறக்க, நான்கைந்து புல்டோசர்கள் வயல் வரப்புகளை இடித்து தள்ளி, சமப்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது தான், மெரூன் கலர் சுமோவில், அரசியல்வாதிக்கே உரிய தோரணையுடன் வந்து இறங்கினார் ராஜரத்தினம். கூடவே அவரது பி.ஏ.,வும், ஐந்தாறு நடுத்தர வயது இளைஞர்களும் இறங்கினர்.தாராஸ்ரீ மில்சின் முதலாளி ராஜரத்தினம். அரசியல் கட்சிகளில் எந்தப் பொறுப்பும் வகிக்காமல், அரசியல் நடத்துபவர். மாவட்டத்தில் இவரைக் கேட்காமல், ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. எல்லாவற்றுக்கும், இவரிடமுள்ள, 'கோடி'கள் தான் காரணம். தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, புழுதிக்கு முகத்தை மறைத்தபடி, வயலில் ஆட்கள் வேலை செய்வதை பார்த்தார் ராஜரத்தினம்.“ஐயா, இதுவரைக்கும் நூற்றி இருபது ஏக்கர் நிலம் சேர்ந்துருச்சுயா. கடைசி வரைக்கும் நிலம் தர மாட்டேன்னு கறாரா பேசி, தகராறு செய்துட்டிருந்த, காசி பாளையம் மாரப்ப நாயக்கர்கிட்ட இருந்தும் இருபது ஏக்கர் நிலத்தை வாங்கிப்புட்டோம்யா. என்ன... கூடுதலா பத்து லட்சம் செலவாயிடுச்சுங்கயா... கம்மாக்கரை ஓரமா இருக்கிற முப்பது ஏக்கர் புறம் போக்கு நிலத்தை, தாசில்தார் கிட்ட சொல்லி, குத்தகைக்கு எடுத்தாச்சுங்கயா. நாம கட்டப்போற காலேஜுக்கு இப்போதைக்கு இது போதுங்கயா...“நெல் ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமா இருக்கிற இருநூறு ஏக்கர் நிலம், நம்ம காலேஜை ஒட்டி வருதுங்கயா. யாராச்சும் ஒரு அமைச்சரை பிடிச்சு, அதை வாங்கிட்டீங்கன்னா... நம்ம காலேஜை யுனிவர்சிட்டி வரைக்கும் கொண்டு வந்துடலாம்யா.”ஒரு அடி பின்னால் நடந்து கொண்டே, பவ்யமா சொல்லிக் கொண்டு வந்தான் பி.ஏ., முருகன்.“உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்குதான்னு பாப்போம்யா. ஆனா, இங்க நெலத்தையே மட்டம் பண்ணாம இருக்கியேயா. நிலத்தை சரி செய்து, மட்டம் பண்ண இன்னும் எத்தனை நாள் வேணும்யா உனக்கு... அடுத்த கல்வியாண்டுல, 'அட்மிஷன்' போடணும். டில்லி வரைக்கும் போய், அந்த கோர்சுக்கு அனுமதி வாங்கியாச்சு. ஏ.ஐ.சி.டி.இ., லெட்டர் இன்னிக்கு தான் பேக்ஸ்ல வந்துச்சு.“இன்னும் ஆறுமாசம் தான்யா இருக்கு. ஜூன்ல, 'அட்மிஷன்' ஆரம்பிச்சுடும். மே மாசமே மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கு ஆள் பிடிக்கணும். அதுக்குள்ள, பில்டிங் போட்டு மத்த வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கணும்.“இங்க என்னடான்னா... நம்ம பில்டிங் வர்ற இடத்துல இன்னும் அறுவடையே ஆகாம இருக்கு. எப்ப அறுவடை முடிஞ்சு. நிலத்தை சரி பண்றது. பில்டிங் எப்ப கட்றது. ஆகற மாதிரி தெரியலையே முருகா.”“நிலத்தை நம்மகிட்ட வித்தவங்க கிட்ட எல்லாம், அறுவடையை முடிச்சு, நெல்லை அள்ளிக்கிட்டு போயிடணும்ன்னு ஏற்கனவே சொல்லியாச்சுயா. பாருங்கய்யா... ஆறு புல்டோசர் வேலை செய்யுது. இன்னும் ரெண்டு புல்டோசர் சொல்லியிருக்கோம்யா. நாலு நாள் கழிச்சு வந்து பாருங்கயா. நூற்றி இருபது ஏக்கர் பூமியும் பளபளன்னு மின்னும்யா மின்னும்.“அஞ்சு மாசத்துல அறுபது க்ளாஸ்ரூம் கல்லை வச்சி அடுக்கிடுவோம்யா. நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம். 'அட்மிஷனு'க்கு ஆகுற வேலையை பாருங்கய்யா. கட்டடம் கட்றது, கம்மாய் தூக்கறதுன்னு எல்லாம் நான் பார்த்துக்குறேன்...” என, முருகன் மூச்சு வாங்க சொல்லி முடித்த போது தான், கொஞ்சமா புன்னகைத்தார் முதலாளி.“நம்ம ஆட்சி நடக்குதுயா... அபீஷியலா உனக்கு எந்தப் பிரச்னையும் வராது. நீ குளத்தையே மூடினாலும், எந்தக் கொம்பனும் உன்னைக் கேள்வி கேட்க மாட்டான். நான் பார்த்துக்குறேன்.”“காம்பவுண்டுக்கு வெளியில என்னய்யா கூட்டம். யாரோ கொடி பிடிச்சிட்டு வந்துருக்காங்க... ஏதாவது டொனேஷன் கேட்டு வந்திருக்காங்களா?”நிழலுக்காக போடப்பட்டிருந்த கொட்டகையில் உட்கார்ந்து கொண்டார் ராஜரத்தினம்.“டொனேஷன்லாம் ஒண்ணும் இல்லைய்யா... யாரோ ஒரு இயற்கை ஆர்வலராம். பேரு சண்முகநேசனாம். உங்களைப் பார்த்தே தீருவேன்னு ஒத்தக்கால்லே நிக்கிறார். ஏதோ பூச்சிகளைப் பத்தி உங்ககிட்ட பேசணுமாம்.”“என்னய்யா இது. பூச்சி, காட்டுபூச்சின்னு காலங்காத்தால... வரச்சொல்லுயா அந்த ஆள. அஞ்சு நிமிஷம் தான் பேசணும்ன்னு சொல்லி கூட்டிட்டு வாயா, மணிக்கணக்குல ஒக்காந்து மண்டையக்காய வெச்சுடாம...”“சார் வணக்கம். என் பேரு சண்முகநேசன். இயற்கை ஆர்வலர். இயற்கை பாதுகாப்பு இயக்கம்ன்னு, ஒர் அமைப்பு நடத்திகிட்டு வர்றோம். ஆயிரக்கணக்கான பேர் உறுப்பினரா இருக்காங்க.”“விஷயத்தை சொல்லுங்க சண்முகநேசன்.”“நீங்க இப்ப, இன்ஜினியரிங் கல்லூரி கட்றதுக்காக வாங்கி, ஆக்கிரமிச்சிருக்கற இடம், முழுக்க முழுக்க நெல்லு விளையுற பூமி. பக்கத்துலேயே, வேட்டமங்கலம் புதர்க்காடுகள் இருக்கறதால, இங்க கருங்குருளைப் புழு, பச்சைதாரா வண்டு, செவ்வண்டு, புள்ளி வண்டுன்னு அரிய வகை புழு, பூச்சியினங்கள் அதிகமாக இருக்கு. இந்த அரிய வகை பூச்சியினங்கள் தான், மண் வளத்துக்கு ஆதாரம். அதிலும், கருங்குருளைப் புழு, பூமி மண்ணை புரட்டிப் போடுறதால, மண் வளம் அதிகரிச்சு, நெல் விளைச்சல் அதிகமா இருக்கு. இந்த செவ்வண்டு இருக்கு பாருங்க... அது, நெற்பயிரை அழிக்க கூடிய வெட்டுப் பூச்சிகளை உணவா சாப்பிடுது. அதனால் தான், இந்த ஊர்ல இருக்குற ஆயிரம் ஏக்கர் நிலத்துல, நெற்பயிர் இயற்கையாகவே பாதுகாக்கப்படுகிறது.”அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ராஜரத்தினம்.“இப்ப, நீங்க பொன் விளையுற பூமியை அழிச்சி, கற்குவியல் மாதிரி கட்டடம் கட்டுனீங்கன்னா, முதல்ல, செவ்வண்டுகளோட இனப் பெருக்கம் குறைஞ்சி போய், முழுசா அழிஞ்சிடும். நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும். சுத்தி இருக்கிற ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள்ல, மகசூல் பாதிக்கும். அதே மாதிரி, கான்கிரீட் தரை போடறதால, கருங்குருளைப் புழு, பூமிக்குள்ளேயே புதைஞ்சி அழிஞ்சிடும். அதனால, மண் வளம் பாதிக்கும். ரெண்டு உதாரணங்கள் தான் சொல்லிருக்கேன். இந்த காலேஜ் கட்றதால, இன்னும் ஏகப்பட்ட அரிய வகைப் பூச்சிகள், பறவையினங்கள் அழிந்து போகும்.“இப்படி, உயிரினங்கள் அழியுறதால உயிர் சமநிலை பாதிக்கப்படும். உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா... பூச்சிகள் அழிந்தால், பூச்சிகளை உண்டு வாழுகிற பாம்புகள் அழியும்; பாம்புகள் அழிஞ்சிடுச்சின்னா, எலிகள் எண்ணிக்கை அதிகமாயிடும். அது, வெளையுற கொஞ்ச நஞ்ச நெற்பயிரையும் அழிச்சிடும்.“பையோ டைவர்சிட்டின்னு சொல்ற உயிரி பல்வகைமை பாதிக்கப்படக் கூடாது. அப்போ தான் இயற்கை சமநிலை பாதிக்கப்படாம இருக்கும். இல்லேன்னா, இயற்கை வளம் கெட்டு, வறட்சி, பஞ்சம், உணவுப் பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம் எல்லாம் ஏற்படும்.”“இது மூலமா என்ன சொல்ல வர்றீங்க சண்முகநேசன்?” நக்கலாக கேட்டார் ராஜரத்தினம்.“இயற்கையை அழிச்சி, காலேஜ் கட்றதை விட்டுட்டு, டவுனுக்கு போய் இடம் வாங்கி, அங்க காலேஜ் கட்டுங்க. ப்ளீஸ்... உங்களுக்கு புண்ணியமாப் போகும்.”“இயற்கையை அழிக்க கூடாதுன்னா, மனுஷன் இன்னும் காட்டு மிராண்டியா தான், காட்ல வேட்டையாடி, சாப்பிட்டுகிட்டு இருக்கணும்.”“உங்களை காலேஜ் கட்ட வேணாம்ன்னு சொல்லலை. டவுனுக்கு போய் இடம் வாங்கி, கட்டிக்கோங்க. ஏன், இப்படி இயற்கையையும், அரிதான உயிர்களையும் கொன்னு, கொள்ளையடிக்கணும்ன்னு நினைக்கறீங்க?”“யோவ் சமூக சேவகரே... இங்க மனுஷனுக்கே இடமில்லையாம். நீங்க, புழுப் பூச்சிகளை பத்தி கவலைப்படறீங்க. அப்படி பூச்சி மேல அதிக அக்கறை இருந்தா, நாலு ஏக்கரா பூமி வாங்கி, கண்ணாடி பெட்டி செஞ்சி, அதுக்குள்ள பூச்சிகளைப் போட்டு வளர்த்துக்கங்க. இப்ப நீங்க போகலாம்.”“இதோட பாதிப்பு இப்ப தெரியாதுயா... இது, எதிர்காலத் தலைமுறையையே பாதிக்கும்.”“நீங்க ஒண்ணும் எனக்கு பாடம் நடத்த வேண்டாம். எல்லாம் சட்டப்படி தான் நடந்துகிட்டு இருக்கு. ஆறு மாசத்துல, அறுபதாயிரம் சதுர அடி பில்டிங் எழுப்பியாகணும். எனக்கு ஆயிரம் வேலை இருக்கு நீங்க புறப்படுங்க.”கொஞ்சம் கோபமாக கத்தினார் ராஜரத்தினம்.“இயற்கையை அழிக்கிறது பாவம். அந்தப் பூச்சிகளுக்கு மட்டும் வாயிருந்தா, உங்க காலைப் புடிச்சி கதறியிருக்கும். வலிமையிருந்தா உங்க கழுத்தை புடிச்சி நெரிச்சிருக்கும். எந்த இயற்கையை நீங்க அழிக்கறீங்களோ, அதே இயற்கை உங்களை தண்டிக்கும்.”கண்ணீர் ததும்ப பேசினார் சண்முகநேசன்.“பெரிய மகாபாரதத்துல வர்ற மாமுனிவர் சாபமிடுறார். இந்தக் காலத்துலயும் இந்த மாதிரி இயற்கை ஆர்வலர், இயற்கை சேவகர்ன்னு கிறுக்குத்தனமா அலையறாங்க பாரு.”தன் பி.ஏ., முருகனிடம் சொல்லி, சிரித்துக் கொண்டார் ராஜரத்தினம்.சண்முகநேசன் அதோடு நிறுத்திவிடவில்லை. கல்லூரி கட்டுவதற்கு எதிராக கூட்டம் கூட்டி போராட்டம் நடத்தினார். எத்தனையோ வழக்குகள் போட்டார். எதுவும் ஜெயிக்கவில்லை.வழக்குகள் நடந்து கொண்டிருந்த போதே, அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், வசதியாக கல்லூரியை கட்டி முடித்திருந்தார் ராஜரத்தினம். சண்முகநேசனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இயற்கை வனப்பாதுகாப்புத் துறை அமைச்சரை அழைத்து, கல்லூரிக்கு திறப்பு விழா நடத்தினார்.தன்னுடைய கேபினில் உட்கார்ந்தபடியே, தன் கல்லூரி முதல்வரையும், பி.ஏ.,வையும் இன்டர்காமில் அழைத்தார் ராஜரத்தினம்.“என்ன பிரின்சிபல் சார்... இன்ஜினியரிங் காலேஜ் கவுன்சிலிங் எல்லாம் முழுசா முடிஞ்சு போச்சு. ஏன் நம்ம காலேஜுக்கு மட்டும், ஒரு, 'அட்மிஷன்' கூட இல்ல?” என்று சோகமாக கேட்டார் ராஜரத்தினம்.“நம்ம கல்லூரில மட்டுமில்ல சார். தமிழ்நாட்டுல இருக்குற, ஐந்நூற்றி ஐம்பது கல்லூரிகள்ல, இருநூறு காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல. கிட்டத்தட்ட அறுபதாயிரம் அதிக ஒதுக்கீட்டுக்கான இடங்களே காலியா தான் இருக்கு.“ஒரு வருஷம் கட்டக்கூடிய, ஒட்டு மொத்த கட்டணமும் இலவசம். ஒரு பைசாக் கூட வேண்டாம்ன்னு சொல்லிப் பார்த்தோம் சார். அப்படியும் கூட, நம்ம கல்லூரிப் பக்கம் யாரும் எட்டிப் பார்க்கல சார்.“இன்ஜினியரிங் காலேஜ் மோகம் முடிஞ்சிடுச்சு. பசங்க எல்லாம் ஆர்ட்ஸ் காலேஜ் பக்கம் படையெடுக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது சார்.”“வேலைக்கு எடுத்த எல்லா புரொபசர்களையும் வேணாம்ன்னு சொல்லி அனுப்பிடுங்க. சும்மா எப்படி சம்பளம் கொடுக்க முடியும்? அப்புறம்... பசங்க சேரலன்னா பரவாயில்லை. இவ்ளோ பெரிய கட்டடத்தை எப்படி சும்மா விட முடியும். கட்டடத்துக்குள் புழக்கம் இல்லாம இருந்தா, சமூக விரோதிகளோட கூடாரமா போயிடும். இது சம்பந்தமா ஏதாவது யோசிச்சுப் பார்த்தியா முருகா?”கவலை அப்பிக் கொண்ட முகத்துடன் தன் பி.ஏ.,விடம் கேட்டார் ராஜரத்தினம்.“மன்னிச்சிடுங்கய்யா... அதையும் நான் விசாரிச்சிட்டேன். அரசாங்கத்தோட உணவுப் பொருள் சேமிப்பு கழகத்திற்கு, நெல் மூட்டைகளை சேமித்து வைக்க, குடோன் வேணும்ன்னு கேட்ருக்காங்கய்யா. வாடகை அடிமட்டமா தான் கொடுப்பாங்கய்யா. இருந்தாலும், சும்மா கெடக்குறதுக்கு வர்ற வாடகை போதுங்கய்யா. நீங்க சரின்னு சொன்னா... சொசைட்டிக்காரங்க கிட்ட சொல்லிடலாம்யா.”“இதுல யோசிக்க என்ன இருக்குயா... கொண்டு வந்து அடுக்க சொல்லு.”தன் கற்பனை கோட்டையை குடோனாக்கி, அதில் நெல் மூட்டைகள் அடுக்கப்படுவதை சோகம் படர்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் ராஜரத்தினம். அப்போது தான், 'இயற்கையே உங்களுக்கு தண்டனை கொடுக்கும்...' என்று, அன்றைக்கு அந்த சமூக சேவகர் சொல்லி விட்டுச் சென்றது ஞாபகம் வந்தது.'ஒரு வேளை அந்த வாயில்லாப் பூச்சிகளின் சாபம் தான் பலித்திருக்குமோ...' என்று நினைத்தபடியே காரில் ஏறிய போது, வழி தப்பிய பூச்சி ஒன்று, அவர் காருக்குள் வந்து ஊர்ந்து கொண்டிருந்தது. ஆதலையூர் சூரியகுமார்