உள்ளூர் செய்திகள்

நீங்களும் ஓவியராகலாம், கற்றுக்கொடுக்கிறார் அரஸ்...

நாற்பது ஆண்டுகளாக, பத்திரிகை உலகில், ஓவியராக வலம் வரும் ஓவியர் அரஸ், தான் கற்ற வித்தை அனைத்தையும், கற்றுத்தரும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர், திருநாவுக்கரசு என்ற அரஸ். பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது, ஒரு மாலை பத்திரிகையில் வந்த, 'ஓவியர் தேவை' விளம்பரத்தை பார்த்து, வேலை கேட்டுச் சென்றார்.இவரைப் போல நிறைய பேர் வேலை கேட்டு, அப்பத்திரிகை அலுவலகம் வந்திருந்தனர். இவர் தான் இளையவர், அனைவருக்கும் மூன்று கதைகள் கொடுத்து, அதற்கான ஓவியம் வரையக் கூறினர்.மற்றவர்கள், கதையை உள்வாங்கி ஓவியம் வரைய தங்களை தயார் செய்வதற்குள், இவர், மூன்று ஓவியங்கள் வரைந்து கொடுத்து விட்டார். ஓவியம் வரைந்த வேகமும், அதிலிருந்த விவேகமும், அந்த வேலையை பெற்றுக் கொடுத்தது.இவரது தனித்தன்மை வாய்ந்த ஓவியங்கள் காரணமாக, பின், பல பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுத்தார். இவரது இயற்பெயரான திருநாவுக்கரசு, சுருக்கமாக, 'அரஸ்' என்று பிரபலமானது. இவர் வரையும் கார்ட்டூன் மற்றும் ஜோக்குகளுக்கான ஓவியங்களை ரசிக்கும் வாசகர் கூட்டமும் பெருகியது.ஒரு, 'ப்ரீலான்சராக' எல்லா பத்திரிகைக்கும் ஓவியம் வரைந்து கொடுத்தவர், தன்னை மேலும் செதுக்கி கொள்ள, 'கேரிகேச்சர்' மற்றும் 'போர்ட்ரைட்' ஓவியங்கள் வரைவதிலும் புகழ் பெற்றார்.இப்படி ஓவியத்தின் பல பரிமாணங்களையும் தொட்ட நிலையில், தான் சிரமப்பட்டு கற்றுக்கொண்ட இந்த ஓவியக் கலையை, விருப்பம் உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.'எத்தனை வயதாக இருந்தாலும் பரவாயில்லை... என்ன படித்திருந்தாலும் கவலையில்லை... ஓவியம் வரையும் ஆர்வம் இருந்தால் போதும், நான், உங்களை ஓவியராக்கி விடுவேன்...' என்கிறார்.இதற்காக, சென்னையில் ஒருநாள் பயிற்சி முகாமை சமீபத்தில் நடத்தினார். பயிற்சி முகாம், ஒரு துாண்டுதல் தான். அதன்பின், எப்படி பெரிய ஓவியராக மலர்வது என்பதற்கான வழிகளை சொல்லித் தருகிறார். ஆன்லைனிலும் வகுப்புகள் எடுக்கிறார்.இருபத்தைந்தில் இருந்து 50 பேர் வரை வகுப்பிற்கு வருவர் என்றால், 'எந்த ஊருக்கும் போய் ஓவிய பயிற்சி முகாம் நடத்த தயார்...' என்று சொல்லும் ஓவியர் அரஸ்சிடம் பேசுவதற்கு, மொபைல் எண்கள்: 86674 64925, 99628 95291. -எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !