நர்சரியில் கரும்பு நாற்று பயிர்; மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் - சாதிக்கிறார் ராமநாதபுரம் முன்னோடி விவசாயி
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தை சேர்ந்த பி. ராமநாதன். நர்சரி மூலம் ஆலைக் கரும்பு நாற்று உற்பத்தி செய்து, அதன் மூலம் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சத்தமில்லாமல் சம்பாதித்து வருகிறார். இதன் மூலம், மாவட்டத்தில் முன்னோடி விவசாயியாக திகழ்கிறார். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், பருவமழையை நம்பி உள்ளனர். பருவ மழை கைவிரிப்பால், விவசாயிகள் நஷ்டமடைவதும் உண்டு. இந்நிலையில், வறட்சியை தாங்கி விளையக்கூடிய புதிய பயிர் ரகங்களை சாகுபடி செய்வதற்காக, வேளாண் அபிவிருத்தி திட்டமான 'அட்மா' திட்டம், நயினார்கோவில், போகலூர் உள்ளிட்ட பல ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கரும்பு சாகுபடி: வெட்டிய கணுவுடன் கூடிய கரும்பை, நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, நர்சரி மூலம் கரும்பு நாற்று உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கரும்புடன் கணு (பரு) பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து நாற்று பயிராக வளர்க்கும் முறையை, சிவகங்கை தி சர்க்கரை ஆலை அதிகாரிகள், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கரும்பு நாற்று நர்சரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி பி. ராமநாதன் கூறியதாவது: கரும்பை கணுவாக வெட்டி நடுவதால், விவசாயிகளுக்கு அதிக செலவாகிறது. 'அட்மா' திட்டம் மூலம் கரும்பு சாகுபடியை அதிகரிக்க, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. கரும்பை நாற்றுகளாக வளர்ப்பதற்கு, தி சர்க்கரை ஆலை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், கரும்பில் உள்ள கணு பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு கருவி, வெயில் அதிகம் தாக்காமல் இருக்க நிழற் கூடாரம் ஆகியவற்றை வழங்கி உள்ளனர்.கரும்பில் வெட்டி எடுக்கப்படும் கணுக்களை, சிறிது சுண்ணாம்பு, யூரியா, பெவிஸ்டான் உள்ளிட்ட கரைசலில் ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதனை, ஈரப்பதமுள்ள கூடை அல்லது சாக்கில் கட்டி, கணுவில் முளை வெடிக்கும் வகையில் மூடி வைத்திருக்க வேண்டும். விசேஷ வடிவில் உள்ள குழித்தட்டில் தென்னை நாற்று தும்பு கலவையுடன், கணு நாற்றுகளை, இதற்காக அமைக்கப்பட்ட நிழற் கூடாரத்திற்குள் வைக்க வேண்டும். 30 நாட்களுக்குள் இவை செடி போல் வளர்ந்து விடும். 50 எண்ணிக்கை உள்ள குழித்தட்டு 63 ரூபாய்க்கு விற்கப்படும். நாற்றங்கால் பயிரை நடுவதற்கு, ஏக்கருக்கு 2 ஆயிரம் மட்டும் செலவாகும். விவசாயிகளிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு டன் கரும்பு 2,500 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. கணு வெட்டிய கரும்பை, அதே நிறுவனத்தின் மூலம், வாங்கிய விலைக்கு திரும்ப வாங்கிக்கொள்கின்றனர். இதன் மூலம் 2 ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்கிறது. ஒரு டன் கரும்பில் இருந்து 8 ஆயிரம் கணுக்கள் வெட்டி எடுக்கலாம். மாதத்திற்கு 40 ஆயிரம் கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்து வருகிறேன். கடந்த இரண்டு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளேன். ஒன்றரை லட்சம் கரும்பு நாற்றுகள் கேட்டு விவசாயிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கணுவை விரைவாக வெட்டும் வகையில் தானியங்கி கருவி வாங்கவும் தீர்மானித்துள்ளேன். இதன் மூலம் கரும்பு நாற்றுக்கு தேவையான கணுவை விரைந்து வெட்ட முடியும், என்றார்.தொடர்புக்கு 90959 74287.