விவசாயிகளுக்கு சமயத்தில் உதவும் ஆடுதுறை நெல் ரகங்கள்
மதுரையில் நெல் சாகுபடி குறிப்பிட்ட பருவத்தில் பெரியார்-வைகை கால்வாய் பாசனத்தில் செய்யப்படுகின்றது. இந்த சாகுபடி மிகப்பெரியதாக இருக்கும். இதில் முதல்போக சாகுபடி, இரண்டாவது போக சாகுபடி உள்ளது. அணைக்கட்டு பாசனத்தைத் தவிர கண்மாய் பாசனமும் உண்டு. சில சூழ் நிலையில் உதாரணமாக கோடை மழை பெய்யும் சூழ்நிலையில் புதிதாக நாற்றுவிட்டு நட்டு ஒரு பயிரை சாகுபடி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதை சித்திரை அல்லது வைகாசி அல்லது ஆனி பட்டம் என்று சொல்லலாம். மதுரை விவசாயிகள் தற்போது குறுகிய கால நெல் ரகம் சாகுபடி செய்யலாம். இந்த பட்டத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகம் தனது ஆடுதுறை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 36, ஆடுதுறை 37 போன்ற ரகங்களை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. கிடைத்த வாய்ப்பினை தவறவிடாமல் கீழ்க்கண்ட ரகங்களை தங்கள் சவுகர்யத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். இதற்கு முன் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை இப்படி இருக்க வேண்டும். சாகுபடி கிணற்று நீராக இருக்கலாம். சாகுபடி கண்மாயாக இருக்கலாம். சாகுபடி கால்வாய் பாசனமாக இருக்கலாம். மேலும் இந்த மூன்று சூழ்நிலைகளுக்கு கோடை மழை பூமியில் உள்ள ஈரப்பதத்தை கணிசமாக இருக்க உதவ வேண்டும். இந்த சூழ்நிலையில் குறுகிய கால ரகங்களை சாகுபடி செய்யும்போது நல்லதே ஏற்படும்.கல்சர் நெல் ஆடுதுறை 36: இதை காலத்தை வென்ற ரகம் என்று சொல்வார்கள். இந்த நெல் ரகம் அதிக மகசூலினைக் கொடுப்பதோடு நெல்லுக்கு நல்ல விலையையும் பெற்றுத் தருகின்றது. சாகுபடி சமயம் அதிக வயதினைக் கொண்ட நாற்றினை நட்டாலும் மகசூல் பாதிக்கப்படுவதில்லை.ஆடுதுறை 37: சோதனை சூழ்நிலையில் சாகுபடி செய்தாலும் நல்ல மகசூலினையே தருகின்றது. குண்டு நெல் நல்ல எடையுள்ளது. பழைய சோற்றுக்கு ஏற்றது. இட்லி செய்வதற்கு மிகவும் நல்லது. கடும் பூச்சி, வியாதிகள் பாதிப்பு கிடையாது. கணிசமான வைக்கோல் மகசூல். கதிர்கள் உஷ்ணக் காற்றினால் பாதிப்பு கிடையாது. ஆடுதுறை 37 ரகத்தில் விதைத் தூக்கம் (சீட் டார்மன்சி) உள்ளதால் விவசாயிகள் விதையை சற்று அதிகமாக உபயோகிக்க வேண்டும்.ஆடுதுறை 45: தற்போது விவசாயிகள் இந்த ரகத்தை சாகுபடி செய்யலாம். இந்த ரகத்தின் மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இந்த ரகம் ஆடுதுறை 43 ரகத்தைவிட கூடுதல் மகசூல் தருகின்றது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த ரகத்தை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்கிறார்கள். ஆடுதுறை 45 ரகத்தின் அரிசி பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. இந்த ரகத்தை வெண்புழுங்கலாக செய்யலாம். இந்த நெல்லின் புழுங்கல் அரிசி மற்ற நெல்லின் புழுங்கல் அரிசி விலையைவிட அதிக விலைக்கு போகின்றது. ஆடுதுறை 45 ரகத்தை விவசாயிகள் நெல்லாக விற்காமல் அரிசியாக விற்கின்றனர். இதனால் லாபம் கூடுதலாக கிடைப்பதாக சொல்கிறார்கள். ஏக்கரில் சுமார் 36 மூடை (மூடை 65 கிலோ) மகசூலாகக் கிடைக்கின்றது.மதுரை விவசாயிகள் நெல் விவசாயத்தில் நல்ல பேர் பெற்றவர்கள். நிச்சயமாக இவர்கள் தங்கள் முயற்சியில் அமோக மகசூலையும் கணிசமான லாபத்தையும் பெறப்போகின்றார்கள்.-எஸ்.எஸ்.நாகராஜன்.