மிளகாய் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு...
நாற்றங்காலில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என்று கவனியுங்கள். இலைப்பேன் தாக்குதலுக்கு உள்ளான மிளகாய் இலைகள் சிறுத்து மேடு பள்ளங்களுடன் காணப்படும். அப்படிப்பட்ட இலைகளின் பின்புறத்தினை உற்றுநோக்கினால் வைக்கோல் நிற மெல்லிய பேன் போன்ற பூச்சிகள் விரைந்து நகர்வதைக் காணலாம்.நாற்று பிடுங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக டைமீதோயேட் 0.03 சத கரைசலைக் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து நட்ட வயலில் இலைப்பேன் தாக்குதல் தொடர்வதைக் கட்டுப் படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி டைமீதோயேட் மருந்து வீதம் கலந்தால் 0.03 சத கரைசல் கிடைக்கும். மாலை நேரத்தில் தெளிப்பது நல்ல பலன் தரும். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு அரை மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.மேலும் மிளகாய் பயிரில் இலைப்பேன் தாக்குதலைக் குறைக்க, சிபாரிசுப்படி மக்கிய தொழு உரம் அல்லதுநன்கு மக்கிய தாவரக் கழிவுகளை இடவேண்டும். வைரஸ் நோய் பரப்பும் இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் பரவுதலைத் தடுக்க வயலினைச் சுற்றிலும் நாட்டுச் சோளம் நெருக்கமாக ஒரு அடி அகலத்திற்கு விதைத்து (தடுப்பு சுவர் போல) வளர்க்க வேண்டும்.வயலினைச் சுற்றிலும் ஆங்காங்கே ஆமணக்கு வளர்க்க வேண்டும். இதன் மூலம் புரொடீனியா காய்ப் புழுவின் அந்துகள் கவரப்படும். இதனால் புரொடீனியாப் புழுவின் முட்டைக்குவியல்கள் மற்றும் இளம் புழுக் கூட்டங்களை எளிதில் அழிக்க இயலும். மிளகாய்ப்பயிரில் மானோகுரோட்டோபாஸ் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை முறனைச்சிலந்தி மற்றும் வெள்ளை அசுவிணித் தாக்குதலை அதிகப்படுத்தும்.மேலும் உழவர்கள் தங்கள் பயிர்பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தக்க ஆலோசனை பெற, பாதித்த பயிர் மாதிரியுடன் அருகிலுள்ள வேளாண்மை அலுவலர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்திலுள்ள பயிர் மருத்துவ நிலையத்தினை நேரில் அணுகவும்.-சா.ஜெயராஜன்,பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் மருத்துவ நிலையம்,பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.