உள்ளூர் செய்திகள்

3 ஆண்டு மகசூல் தரும் நெய் மிளகாய்

நெய் மிளகாய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது: காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்கிறேன். மணல் கலந்த களிமண் பூமியில், பல வித மிளகாய் நட்டுள்ளேன். இதில், நெய் மிளகாய் ரகமும் நட்டுள்ளேன். இது, காய் காய்க்கும்போது, பச்சை நிறத்திலும், பழமாகும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த நெய் மிளகாய், சாம்பாரில் போட்டாலும், உடைத்து பார்த்தாலும் நெய் வாசம் வரும். ஆந்திரா மற்றும் பிற ரக மிளகாய்களின் காரத்தை காட்டிலும், நெய் மிளகாயில் சற்று காரம் குறைவு தான். இருப்பினும், இந்த செடியை ஒரு முறை நட்டு விட்டால், மூன்று ஆண்டுகள் வரையில் மகசூல் கொடுக்கும். குறிப்பாக, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் அதிக மகசூல் கொடுக்கும். கோடை காலத்தில் குறைந்த மகசூல் கொடுக்கும். இந்த நெய் மிளகாய் வீட்டு தேவைக்கு போக, சந்தையில் விற்று விடுகிறேன். நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.குகன், 94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !