உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை சாகுபடிக்கு பின்னும் சாதிக்கலாம்

உழவு முதல் அறுவடை வரை விவசாயிகள் ஓய்வில்லா உழைப்பை கொட்டுகின்றனர். அறுவடைக்கு பின் விளைபொருட்களை மதிப்பு கூட்டினாலோ நேரடியாக சந்தைப்படுத்தினாலோ தான் சாகுபடியின் உண்மையான லாபத்தை, பலனை அனுபவிக்க முடியும் என்கின்றனர் மதுரை வேளாண் அறிவியல் நிலைய உதவி பேரா சிரியை செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன்.நிலக்கடலை சாகுபடியோடு மதிப்பு கூட்டிய தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தினால் நல்லது. மானாவாரியில் தை, மார்கழி பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யலாம். மேட்டு நிலத்தில் இறவை பாசன சாகுபடி என்றால் அக்., முதல் டிச., தவிர்த்து மற்ற மாதங்களில் எப்போதும் சாகுபடியை தொடரலாம். மணற்சாரியான நிலத்தில் நிலக்கடலை நன்கு விளையும். ஜிப்சம் உரம் இதற்கு முக்கியம். ஜிப்சம் உரமிடும் போது நிலக்கடலை நன்கு திரட்சியாக உருவாகும். பதர் உருவாவதை குறைக்கலாம்.திண்டிவனம், விருத்தாச்சலம் போன்ற உயர்விளைச்சல் ரகங்கள் 110 முதல் 135 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். சொட்டுநீர் பாசனத்தை விட தெளிப்பு நீர் எனப்படும் மழைத்துாவான் முறையை பயன்படுத்தினால் தண்ணீரின் தேவையை 40 சதவீத அளவு குறைக்கலாம். நிலக்கடலையில் கொழுப்புச்சத்து குறைவு. இரும்புச்சத்து, புரதசத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் எல்லோருக்குமான எளிய உணவாக பயன்படுகிறது. ஊறவைத்த நிலக்கடலையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். அறுவடையான நிலக்கடலையை அப்படியே வியாபாரியிடம் கொடுப் பதை விட விவசாயிகளே மதிப்பு கூட்டிய பொருளாக தயாரித்து விற்கலாம். வழக்கமான கடலைமிட்டாயை தவிர கடலை மிட்டாய் லட்டு, சுவைமிகு பானம், வெண்ணெய் தயாரிக்கலாம். நிலக்கடலையிலிருந்து எடுக்கும் வெண்ணெய்க்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி மகளிர் குழுக்கள், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இன்று (டிச. 28) காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மதுரை ஒத்தகடை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நடக்கும் பயிற்சியில் இலவசமாக பங்கேற்கலாம். மதிய உணவு வழங்கப்படும் என்றனர். தொடர்புக்கு: 95241 19710.-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !