கோழிகளைத் தாக்கும் நோயும் குருணைத்தடுப்பு மருந்தும்
'வெள்ளைக் கழிச்சல்' என்பது கோழிகளைத் தாக்கும் ஒரு கொடிய தொற்று நோய். இந்நோயை பொதுவாக நம் நாட்டில் 'ரணிக்கெட்' நோய் என்றும், தமிழகத்தில் வெள்ளைக் கழிச்சல், கொக்கு நோய் என்று அழைப்பர். இந்நோய் வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படுகிறது.இந்நோயினை உருவாக்கும் நச்சுயிரியானது கோழிகளின் உடலில் இருந்து சளி மற்றும் எச்சங்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இந்நச்சுயிரி கலந்த சளி மற்றும் எச்சங்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனம், குடிநீர், உபகரணங்கள், படுக்கைப் பொருட்கள், காற்று ஆகியவற்றில் கலந்து ஒரு கோழியிலிருந்து மற்றொன்றுக்கும், ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு பண்ணைக்கும் இந்நோய் வேகமாக பரவுகிறது.இந்நோயின் நச்சுயிரியானது கோழிகளின் சுவாச, நரம்பு, உணவு, ஜீரண மண்டலங்களை தாக்குகின்றன. நோயுற்ற கோழிகளில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இது, நூறு சதவீதம் இறப்பினை ஏற்படுத்துகின்றது. நோயினால் இறந்த கோழிகளை ரத்தப் பரிசோதனை செய்தால், கோழிகளின் சுவாசக் குழல் சிவந்து காணப்படும். குடலின் உட்புறச் சவ்வு வீக்கமடைந்து புண்களுடனும், ரத்த கசிவுகளுடனும் இருக்கும். உணவு செரிமான இரைப்பையில் ரத்தப் புள்ளிகள் காணப்படும்.இந்நோய், கோழிகளின் முட்டை உற்பத்தியையும், முட்டையில் தரத்தையும் பெருமளவு பாதிக்கின்றது. இதனால், மிகுந்த பொருளாதார இழப்பீட்டினை கோழிப் பண்ணையாளர்கள் சந்திக்கின்றனர்.தடுப்பூசிகள்: இந்நோய் வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்காக பல்வேறு தடுப்பூசிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. லசோட்டா, ஆர்.டு.பி., ஆர்.டி.வி.கே., பி1 போன்ற தடுப்பூசிகள் கோழிகளுக்கு பல்வேறு கால கட்டங்களில் போடவேண்டும்.இத்தகைய தடுப்பு மருந்துகளை பயன்படுத்தும் போது கோழிகளை பிடிப்பதற்கு ஒருவரும், தடுப்பூசி அளிப்பதற்கு மற்றொருவரும் தேவைப்படுகின்றனர். மேலும், இவ்வாறு தடுப்பூசி அழிப்பதற்கு, கோழிகளை பிடிக்கும் பொழுதும், ஊசி குத்தும் பொழுதும் கோழிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றன. மேலும் ஊசி குத்தும்பொழுது ஊசியானது கோழியினை பிடிப்பவர் கைகளிலோ அல்லது ஊசி குத்துபவர் கைகளிலோ காயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தடுப்பு மருந்தும் வீணாகிறது. நேரமும் விரயமாகிறது.தடுப்பு மருந்துகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் போது நீண்ட நேரம் மின்வெட்டு ஏதேனும் ஏற்பட்டால் அவற்றின் வீரியம் குறைந்து பயனற்று போவதற்கும் வாய்ப்புள்ளது.குருணைத் தடுப்பு மருந்து: இத்தகைய குறைபாடுகளை களைந்தெடுத்து 'ஒரே நோய்; ஒரே மருந்து' என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உருவாக்கிய படைப்புதான் கோழிகளைக் காக்கும் குருணைத் தடுப்பு மருந்து.இது உருளை வடிவத்தில் இருக்கும். இம்மருந்தினை கோழிகளுக்கு அளிக்க ஊசி தேவையில்லை. இதனை மூன்று வழிகளில் கோழிகளுக்கு அளிக்கலாம். ஒரு குருணையை எடுத்து கோழிகளின் வாயில் வைத்து விட்டால் கோழிகள் அதனை விழுங்கி விடும். சுத்தமான காகிதத்தை விரித்து அதில் ஒரு கோழிக்கு ஒரு குருணை என்ற விகிதத்தில் பரப்பிவிட்டால், தாமாகவே வந்து குருணைகளை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது.இக்குருணை மருந்தை, கோழிகளுக்கு அளிப்பதற்கு ஊசிகள் தேவையில்லை. கோழிகளை அடிக்கடி பிடித்து சிரமப்படுத்த வேண்டியதில்லை. பத்து நாள் வயதிற்கு மேல் உள்ள அனைத்து கோழிகளுக்கும் இம்மருந்தினை அளிக்கலாம். பின்னர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இதனை அளித்தால் போதுமானது. குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும்போது, மின்வெட்டு ஏற்பட்டாலும் மருந்தின் வீரியத்தன்மை பாதிக்கப்படுவதில்லை. இத்தகைய அரிய தடுப்பு மருந்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயிலிருந்து பண்ணையாளர்கள் காப்பாற்றலாம்.-டாக்டர் மூ.சுதா மற்றும் முனைவர் வெ.பழனிச்சாமி,குன்றக்குடி.