துவரை நாற்று நடவு செய்யும் இயந்திரம் - மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் கண்டுபிடிப்பு
துவரை நாற்றுகளை துல்லியமாக நடவு செய்யும் கருவியை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.குழந்தைகளுக்கு தேவையான புரதசத்தில் முக்கிய பங்கு வகிப்பது துவரை. இந்திய சமையலில் முக்கிய உணவான துவரை, பல்வேறு மாநிலங்களிலும் பரவ லாக பயிரிடப்படுகிறது. துவரை சாகுபடியில் விதைப்புக்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட நாற்று நடவு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.அதிக மகசூல் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் நாற்றுநடவு சாகுபடியை பின்பற்றுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், துவரை நாற்று நடவு செய்யும் கருவியை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன முதன்மை விஞ்ஞானி முத்தமிழ்செல்வன் கண்டுபிடித்துள்ளார்.அவர் கூறியதாவது: நன்கு உழவு செய்து பண்படுத்தப்பட்ட விளைநிலத்தில், நாற்றங்காலில் நடவு செய்த மூன்று வார துவரை நாற்றுகளை இக்கருவியின் மூலம் நடலாம். இக்கருவி, 35 - 40 குதிரை திறன் கொண்ட டிராக்டரால் இயக்கப்படுகிறது. டிராக்டரின் வேகம் மணிக்கு 1.5 கிலோ மீட்டர்; சாலமைக்கும் கலப்பை அமைப்புகள் மூலம் ஒரே நேரத்தில், இரண்டு வரிசையில், மூன்று அடி பயிர் இடைவெளியில், தகுந்த ஆழத்தில் நாற்றுகளை நடவு செய்யலாம்.மூன்று முதல் ஆறு செ.மீ., வரை தேவைக்கேற்ப இரண்டு வரப்புகளுக்கு இடையேயான இடைவெளி மற்றும் நடவு ஆழத்தை மாற்றிக்கொள்ளலாம். நாற்றுகளை உட்செலுத்திய பின் கிடைமட்ட மற்றும் செங்குத்து ரப்பர் பட்டைகள் வாயிலாக சீரான வேகத்தில் நாற்றுகள் வரப்புகளில் நிலை நிறுத்தப்பட்டு, வரப்புகள் அணைக்கப்படுகிறது.இதனால், இயந்திர நடவில், அதிர்வுகளால் நாற்றுகளில் ஏற்படும் சேதாரம் தவிர்க்கப்படுகிறது. வழக்கமான ஆட்கள் நடவு முறையை காட்டிலும் அதிக செலவும்,நேரமும் மிச்சமாகிறது. இந்தக் கருவி மூலம், ஒரு நாளைக்கு, மூன்று ஏக்கரில் நாற்றுக்களை நடவு செய்யலாம். நேரடி கள சோதனைகளுக்கு பிறகு, கருவி மேம்படுத்தப்பட்டு விரைவில் வெளியிடப்படும், என்றார்.