உள்ளூர் செய்திகள்

ஆடு தின்னாபாலை

ஆடுதின்னாபாலை மூலிகையானது அரிஸ்டோலோகியா பிராக்டியோலேட்டா என்ற தாவரவியல் பெயரில் அரிஸ்டோலோகியேசி என்ற குடும்பத்தில் காணப்படுகிறது. இது தமிழில் ஆடுதின்னாப் பாலை என்றும் மற்றும் வணிக ரீதியாக கிடாமர் என்றும், ஆங்கிலத்தில் வர்ம் கில்லர் என்றும் வழங்கப்படுகிறது. இதன் தாயகம் மேற்கு ஆப்பிரிக்காவாகும். அரிஸ்டோலோகியாவில் மொத்தம் 400 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இம்மூலிகையானது ஆப்பிரிக்கா, அரேபியா, பாகிஸ்தன் மற்றும் இலங்கையிலும் இந்தியாவில் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. இது பொதுவாக உலர்ந்த கரிசல் மண் பூமியில் காணப்படும் களையாகும். தமிழகத்தின் கரிசல் மண் பிரதேசங்களில் குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகிறது.இத்தாவரமானது 0.5மீ வரை வளரக்கூடிய கொடி வகையைச் சார்ந்தது. பூக்கள் குழல் வடிவில் பழுப்பு நிறத்தோடும் இலைகள் இதய வடிவிலும் காணப்படும். ஜுலை - நவம்பர் மாதங்கள் இதற்கு ஏற்ற கால சூழ்நிலையாகும்.மருத்துவப் பயன்கள்: ஆடுதின்னா பாலையின் இலை, தண்டு, வேர் எல்லாமே மருந்தாகப் பயன் படுகிறது. அதிகமான கசப்புத் தன்மையே இதன் சிறப்பாகும். இதில் அரிஸ்டோலோகின் என்ற மருந்துப்பொருள் உள்ளது.ஆடுகள் தின்னாத பாலை என்றபோதிலும் கால்நடைகளில் மலட்டுத் தன்மையை நீக்க முக்கிய மருந்தாக கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரியமாக பாம்பு கடி மற்றும் காயங்கள் ஆறவும் பயன்படுத்தப்பட்ட இம்மூலிகை சீன மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.அதிக கசப்பினைக் கொண்டுள்ளதால் மனிதன் மற்றும் விலங்குகளில் குடல்புழு பிரச்னையை நீக்கப் பயன்படுகிறது. மேலும் அறிவியல் மருத்துவத்தில் புற்றுநோய் மற்றும் நுரையீரல் வீக்க நோய்களுக்கு நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது. சோரியாஸிஸ் போன்ற தோல் நோய்களுக்கு இம்மூலிகையின் சமூலமானது தேங்காய் எண்ணெயில் காய்ச்சப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கால்நடை மருத்துவத்தில் பெரும்பங்காற்றுகிறது.சந்தைப்படுத்துதல்: தற்போது இம்மூலிகையானது மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மூலிகை சேகரிப்போரால் தரிசு நிலங்களில் இருந்து சேகரித்து நன்கு காயவைக்கப்பட்டு மூலிகை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப் படுகிறது.நன்கு காய்ந்த நிலை என்பது இதனுடைய இலை, தண்டு, காய் போன்றவை நன்கு உலர்தலாகும். மேலும் மூலிகை மருந்து கம்பெனிகளாலும் நிறைய அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனுடைய இனப்பெருக்கம் விதைகள் மூலமே நடைபெறுகிறது. இத்தாவரம் பாதுகாக்கப்பட வேண்டிய மூலிகை என்பதால் நிலைத்த அறுவடை பின்பற்றப்பட வேண்டும்.இதுவும் வருமானம் தரும் களையேயாகும்.-என்.கணபதிசாமி, மதுரை-625 706. 88700 12396.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !