சவுடு கலந்த செம்மண்ணில் செழித்து வளரும் பலா மரம்
விதை இல்லாத பலா பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது: நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யலாம். விதை இல்லாத பலா பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் சவுடு கலந்த செம்மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. மூன்று ஆண்டுகளில், மகசூல் கொடுக்க துவங்கும். பலா மரத்தின் வயது கூடும்போது, பலா பழங்களின் மகசூலின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். பொதுவாக, பலா மரத்தை சாகுபடி செய்யும்போது, வளமான மண்ணை தேர்வு செய்து, மரக்கன்று நட வேண்டும். பலா மரத்தின் வேர் நன்றாக ஊடுருவும் அளவிற்கு, மண்ணின் தன்மை சரியாக இருக்க வேண்டும். தண்ணீர் தேங்குமிடங்களில், பலா மரக்கன்று நடவு செய்யக்கூடாது. இந்த நடைமுறையை கடைப்பிடித்து நடவு செய்தால் போதும். பலாவில் நல்ல மகசூல் எடுக்கலாம். விதை அறவே இருக்காது. பழத்தில் சதை பற்று அதிகமாக இருக்கும். இந்த பழம், சந்தையில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும்போது, கவர்ச்சியான நிறத்தில் இருப்பதால், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.