நவீன தொழில்நுட்பங்கள்
தோட்டம் பராமரிப்பு: இடைவெளி உள்ள இடங்களில் ஏல நாற்று நடவு செய்வதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். போதிய நிழல் இல்லாத இடங்களில் நிழல் மரக்கன்றுகளை நடவேண்டும்.மண் பரிசோதனைப்படி கடந்த மாதம் இரண்டாவது தவணை உரமிடாத தோட்டங்களில் இம்மாதம் உரமிடலாம். நீர்ப்பாசன வசதியுள்ள தோட்டங்களில் பொதுவான பரிந்துரை எக்டருக்கு 61.5 கிலோ தழைச்சத்து, 41.5 கிலோ மணிச்சத்து மற்றும் 83 கிலோ சாம்பல்சத்து ஆகும். இச்சத்துக்களைக்கொடுக்க 90 கிலோ யூரியா, 200கிலோ முசோரிபால் மற்றும் 150 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இடலாம்.மானாவாரி தோட்டங்களில் கடந்த மாதம் கடைசி தவணையாக உரமிடாத தோட்டங்களில் இம்மாதம் உரமிடலாம். பொதுவான பரிந்துரையான எக்டருக்கு 37.5 கிலோ தழைச்சத்து, 37.5 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல்சத்து ஆகும். இச்சத்துக்களை கொடுக்க 81 கிலோ யூரியா, 187 கிலோ முசோரிபால், மற்றும் 125 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இடலாம்.இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் தோட்டங்களில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு செடிக்கு 5 கிலோ தொழு உரம் அல்லது 1-2 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 100 கிராம் எலும்புத்தூள் போன்றவற்றை இடவேண்டும். மேலும் இரண்டாவது முறையாக 1-2 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். நுண்ணூட்டச்சத்து குறைபாடு உள்ள தோட்டங்களில் குறிப்பாக துத்தநாகச்சத்து குறைபாடு உள்ள தோட்டங்களில் துத்தநாக சல்பேட்டை (ஜிங்க் சல்பேட்) 100 லிட்டர் தண்ணீருக்கு 250 கிராம் என்ற அளவில் கரைத்து வடிகட்டியபின் இலையில் மேல்புறம் மற்றும் கீழ்புறம் நனையுமாறு நன்கு தெளிக்க வேண்டும். போரான்சத்து குறைபாடு உள்ள தோட்டங்களில் எக்டருக்கு 375 கிராம் போராக்சை உரத்துடன் கலந்து இடவேண்டும்.ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்: காய்ந்த இலைதழைகளை கவாத்து செய்து அதன்பின் 100 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி. பெந்தோயேட் என்ற அளவில் கலந்து மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதியுள்ள தோட்டங்களில் தெளிக்க வேண்டும். தண்டு துளைப்பான், அந்துப்பூச்சி வெளிவரும் சமயத்தில் பூச்சிமருந்து தெளிக்க வேண்டும். தோட்டங்களில் காணப்படும் வேர்ப்புழு வண்டுகளை பூச்சி வலை கொண்டு பிடித்து அழித்துவிட வேண்டும். மண் இடுவதற்கு முன் காய்ந்த இலைகளை அகற்றி மண்ணை நன்றாகக் கிளறிவிட வேண்டும். செடிக்கு 25 கிராம் உயிரிகளான மெட்டாரைசிம் மற்றும் பேவேரியான் செடியின் தூர்ப்பகுதியில் கம்போஸ்டுடன் கலந்து இடவேண்டும். பூச்சிகளைத் தாக்கும் நூற்புழுக்களைக் கொண்ட கலேரியா இறந்த புழுக்களை (4 இறந்த புழுக்கள் ஒரு செடிக்கு) செடியின் தூர்ப்பகுதியில் 1.5 அங்குல ஆழத்தில் இடவேண்டும்.நோய் நிர்வாகம்: தண்ணீர் தேங்கும் பகுதிகளில் போதுமான வடிகால் வசதி அமைத்து வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நோய் தோன்றுவதைத் தவிர்க்கலாம். கட்டே (நச்சுயிரி) நோய் தாக்குதல் உள்ள செடிகள் காணப்பட்டால் அவற்றை உடனுக்குடன் அகற்றி அழித்துவிட வேண்டும். வட கிழக்கு பருவமழையின்போது பூசண நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அல்பினியா, குர்குமா மற்றும் அமோமம் போன்ற மாற்றுச்செடிகளை அகற்றிவிட வேண்டும். அழுகல் (பழ அழுகல்) மற்றும் கிழங்கு அழுகல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ள இடங்களில் ஒரு சத போர்டோ கலவை அல்லது 0.4 சதம் அகோமின் (பொட்டாசியம் பாஸ்போனேட்) (100 லிட்டர் தண்ணீரில் 400 மிலி) என்ற அளவில் இலைகளின் மீது தெளிப்பதுடன் 0.2 சதம் காப்பர் ஆக்சிகுளோரைடு (100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் என்ற அளவில் கலந்து) தூர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.உயிரி கட்டுப்பாட்டு முறையில் டிரைக்கோடெர்மா ஹேசியானத்தை ஊட்டமேற்றிய இயற்கை உரங்களுடன் கலந்து தூர்ப்பகுதியில் இடவேண்டும். 2 சத சூடோமோனசை (100 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ என்ற அளவில் கலந்து) தெளிக்க வேண்டும்.மிளகு:- தோட்ட பராமரிப்பு: மிளகு தண்டுப்பதியன்களை உற்பத்தி செய்வதற்கான ஓடு தண்டுகளை சேகரிப்பதற்காக நல்ல குணாதிசயங்கள் உள்ள மிளகு கொடிகளை அடையாளமிட்டு வைக்க வேண்டும். வளரும் கொடிகளைத் தாங்கு மரங்களுடன் சேர்த்து கட்டி ஏற்றிவிட வேண்டும். களை அதிகம் காணப்பட்டால் வீச்சுக்களை மேற்கொள்வதன் மூலம் கொடிகளின் இடையே வளரும் களைகளை கட்டுப்படுத்த முடியும். கொடியின் தூர்ப்பகுதியில் வேருக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் சுத்தமாகக் களை எடுத்து தூர்ப்பகுதியில் மூடாக்கு இடவேண்டும். முன்னமேயே இயற்கை உரம் இடாத தோட்டங்கள் இயற்கை உரத்தைக் கொடியின் தூர்ப்பகுதியில் இடவேண்டும்.பூச்சி நிர்வாகம்: அதிக நிழலுள்ள மிளகு தோட்டங்களில் பொல்லுவண்டு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. சரியான நிழல் சீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.நோய் நிர்வாகம்: அடி அழுகல் உள்ள தோட்டங்களில் ஒரு சத போர்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். அதிக தாக்குதல் உள்ள இடங்களில் ஒரு சத போர்டோ கலவையைத் தெளிப்பதுடன் 0.2சத காப்பர் ஆக்சி குளோரைடு (100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் என்ற அளவில் கலந்து) கொடிக்கு 5 லிட்டர் என்ற அளவில் தூர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.சிற்றிலை வைரஸ் நோய் அல்லது பில்லோடி (தண்டின் கணு இடைப்பகுதி குறைதல்) தாக்குதல் உள்ள செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.