உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

உயர் விளைச்சல் ரகங்கள்: டி.எம்.பி.1 - மானாவாரி யிலும் இறவையிலும், நெல் தரிசிலும் பயிரிடலாம். வயது 80-85 நாட்கள். ஆண்டு முழுவதும் பயிரிடலாம். டி.எம்.வி.4 - கோடை மற்றும் நெல் தரிசு சாகுபடிக்கு ஏற்றது. வயது 85-90 நாட்கள். டி.எம்.வி.6 - கோடை, நெல் தரிசுக்கு ஏற்றது. சம்பா அறுவடைக்குப் பிறகு உள்ள ஈரத்தைக்கொண்டு உழவு செய்து ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பயிரிடலாம். வயது 85-90 நாட்கள். ஏக்கருக்கு 280 முதல் 350 கிலோ மகசூல். எண்ணெய்ச்சத்து 54 சதம். கோ.1- மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது. வயது 85-90 நாட்கள். வி.ஆர்.ஐ.1 - பின்சம்பா நெல் அறுவடைக்கும் அடுத்த குறுவை நெல் அறுவடைக்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தில் பயிரிட்டு அதிக விளைச்சல் பெற ஏற்றது. வயது 75 நாட்கள். வி.ஆர்.ஐ.2 - வயது 80-85 நாட்கள். மானா வாரி மற்றும் இறவைக்கு ஏற்றது. முடிக்கொத்து நோய்க்கு மிதமான எதிர்ப்புசக்தி கொண்டது.சாகுபடி நுட்பங்கள்: எள் கரிசல் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்கு வளரும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் மருந்தை கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா பவுடரை ஈரவிதையுடன் கலந்து உலரவைத்து விதைக்கலாம். விதைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் கால் லிட்டர் ஆறிய அரிசிக் கஞ்சியில் ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லத்தை கலக்கி அதில் பூசண விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையினை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கி பின் ஒரு கோணிப்பையின் மீது பரப்பி நிழலில் உலர்த்தியபின் விதைக்கலாம்.மானாவாரி விதைப்பில் 25 து 25 செ.மீ. இடைவெளிக்கு ஒரு செடியும் இறவையில் 30 து 30 செ.மீ. இடைவெளிக்கு ஒரு செடியும் இருக்குமாறு செடிகளின் எண்ணிக்கையை குறையாமல் பராமரிக்க வேண்டும்.இறவை எள் சாகுபடிக்கு எக்டருக்கு முறையே 35, 23, 23 தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதில் பாதி அளவு உரங்களை அடியுரமாகவும் மீதியை விதைத்த 35 நாளில் மேலுரமாகவும் இடவேண்டும். ஜிப்சம் ஒரு எக்டருக்கு 200 கிலோ அடியுரமாக இடவேண்டும். தவிர ஒரு எக்டருக்கு 5 கிலோ மாங்கனீசு சல்பேட் சுமார் 50 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் மேலாக தூவிவிட வேண்டும்.உயிர் உரமான அசோஸ்பைரில்லத்தை விதைநேர்த்தி செய்தும் நிலத்தில் நேரடியாக இட்டும் பயன்பெறலாம். 10 பொட்டலம் (2 கிலோ) அசோஸ்பைரில்லத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நிலத்தில் இட்டு உழுதுவிடுவது நல்லது. எள் பயிர் வறட்சியைத் தாங்க வல்லது. ஆனாலும் செடிகள் நன்குவளர்ந்து பக்கக்கிளைகள் துளிர்விடும் வரை மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10-15 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பூக்கும், காய் பிடிக்கும் பருவங்களில் தண்ணீர் மிகவும் அவசியம். விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 3 நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் கட்டவேண்டும். விதைத்த 15 நாளில் ஒரு சதுர மீட்டருக்கு 11-16 செடிகள் இருக்குமாறு கலைத்துவிட வேண்டும். களைகளைக் கட்டுப்படுத்த புளூகுளோரலின் களைக்கொல்லியை 3 லிட்டர்/எக்டர் என்ற அளவில் விதைத்த 3ம் நாள் மண்ணில் தெளிக்க வேண்டும்.காய்கள் அதிகம் பிடிக்க 3 மில்லி பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கியை 4.5 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 30, 45 மற்றும் 60வது நாள் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 135 மில்லி பிளானோபிக்ஸ் மற்றும் 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மண்ணில் ஈரம் இருக்க வேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை மூலம் பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். மானோகுரோட்டோபாஸ், கார்பரில், குளோர்பைரிபாஸ், டைகுளோர்வாஸ் ஆகியவற்றுடன் ஏதேனும் ஒன்றை நட்ட 20, 35ம் நாட்களில் ஒரு எக்டருக்கு 500 முதல் 750 மில்லி என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்கலாம். மூன்றில் இரண்டு பாக காய்கள் முதிர்ந்தவுடன் செடிகளை அடிப்பகுதியில் அறுத்து வட்டமாக அமுக்கிவைத்து 3-5 நாள் காயவைத்து அடித்து விதைகளை பிரிக்க வேண்டும். (தகவல்: முனைவர் எம்.சண்முகவல்லி, முனைவர் தங்க ஹேமாவதி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்-625 252. போன்: 04630-261 226.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !