நவீன தொழில்நுட்பம்
நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்: உழவியல் முறைகள், கைவினை முறைகள், ரசாயன முறைகள், உயிரியல் முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதே சிறந்த அணுகுமுறை.உழவியல் முறை:* முறையான நீர் மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை இதில் அடங்கும்.* மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து, சரியான விதையளவை (ஏக்கருக்கு 18 முதல் 20 கிலோ) பயன்படுத்துதல் அவசியம்.* விளக்கு கம்பங்களின் அருகில் நாற்றங்காலை அமைக்காதிருத்தல் (தத்துப்பூச்சி தாக்குதலை தவிர்க்க வேண்டும்).* நாற்றுவிட்ட 10ம் நாள் 8 சென்ட் நாற்றங்காலுக்கு 1400 கிராம் கார்போபியூரான் 3சத குருணை மருந்து இடுதல் அவசியம். (பச்சை தத்துப்பூச்சிகளால் பரப்பப்படும் துங்ரோ நோய்க்கு இலக்காகும் பகுதிகளில் மட்டும்)* வயலை சீராக சமன்படுத்துதல், இதனால் தேவைப்படும்போது பாசன நீரை எளிதில் வடிக்க இயலும். (இப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாவதைத் தடுத்திட)* குறிப்பாக பச்சை வண்ண அட்டை கொண்ட தழைச்சத்து மேலாண்மை செய்யும்பொழுது இலை சுருட்டுப்புழுவின் தாக்குதல் கணிசமாக குறைகிறது. மேலும் தழைச்சத்தை பிரித்து இடுவதன் மூலம் பூச்சிகளின் இனப்பெருக்கம், பயிரைத்தாக்கும் நோய்களின் வீரியம் ஆகியவை வெகுவாக குறைகின்றது.* நடவின்போது 8 அடிக்கு 1 அடி இடைவெளி விடுதல், இலைமடக்குப்புழு, புகையான் காணும் இடங்களில், பருவங்களில் நெருக்கமாக நடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.* வரப்புகளைச் செதுக்கி குறுகிய வரப்பாக (எலிகளைத் தடுக்க) சுத்தமாக வைத்தல், வரப்புகளில் தட்டைப்பயறு பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு போன்றவை பெருக வாய்ப்பளித்தல் வேண்டும்.* நீர் நிர்வாகத்தில் நிறைந்த கவனம் செலுத்துதல், காய்தல், பாய்தல் முறையைப் பின்பற்றுதல், புகையான் கூண்டுப்புழு, குருத்துப்பூச்சி, தண்டு அழுகல் நோய் ஆகியவற்றின் தாக்குதல் இருந்தால் நீரை வடிக்க வேண்டும்.கைவினை முறைகள்: நாற்றங்காலிலும் நடவு வயலிலும் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழித்தல் வேண்டும்.பூச்சி கண்காணிப்பு: விளக்குப் பொறிகள் மூலம் தண்டு துளைப்பான், இலை மடக்குப்புழு ஆகியவற்றின் தாய் அந்துப்பூச்சிகளையும், புகையான், பச்சை தத்துப்பூச்சி, கருநீல நாவாய்ப்பூச்சி, கதிர் நாவாய்ப்பூச்சிகளின் வளர்ந்த பருவங்களையும் கண்காணிக்கலாம். புகையான் காணும் பகுதிகளில் மஞ்சள் தட்டுப் பொறிகளை வரப்பில் வைத்து கண்காணிக்கலாம்.இனக்கவர்ச்சிப் பொறி மூலம் குருத்துப்பூச்சியின் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். கவர்ந்தழிக்கவும் செய்யலாம். மேலும் வயலில் இறங்கி பூச்சி தாக்குதலின் அறிகுறிகளைக் கண்டு களைக்கொல்லி பூச்சிகளின் சேத விகிதத்தை மதிப்பிட வேண்டும்.தேவைப்படும்பொழுது மட்டும் பரிந்துரை செய்யப்படும் அளவு மருந்தை சரியான அளவு நீரில் கலந்து சரியான நேரத்தில் முறைப்படி தெளிக்க வேண்டும்.உயிரியல் முறை: குருத்துப்பூச்சி, இலை மடக்குப் புழுக்களைக் கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா எனப்படும் முட்டை ஒட்டுண்ணி வயலில் நடவு செய்த 15 நாட்களுக்குப் பின் வாரம் ஒருமுறை என 5 வாரங்களுக்கு தொடர்ச்சியாக ஏக்கருக்கு ஒரு சி.சி. என்ற அளவில் விடவேண்டும். இந்தமுட்டை ஒட்டுண்ணி குளவிகள் வயலில் காணப்படும் குருத்துப்பூச்சி, இலைமடக்குப் பூச்சிகளின் முட்டைப் பருவத்திலேயே அழித்துவிடுவதால் சேதம் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற நன்மை செய்யும் பாக்டீரியாவைக்கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு டட்டி பாக்டீரியா கரைசலை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.ஆனைக்கொம்பன் ஈக்களை அழிக்க 'பிளாட்டிகேஸ்ட் ஒரைசே' எனப்படும் ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம்.நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீங்கு செய்யாத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும். இயற்கைவழி வேளாண்மையைக் கடைபிடிப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும். (தகவல்: முனைவர் வெ.கோ.மதிராஜன், முனைவர் ரா.ராஜேந்திரன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை-612101. போன்: 0435-247 2098)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.