நவீனதொழில்நுட்பம்
பட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள்மல்பெரி இலைகளின் உற்பத்தியில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மண் பரிசோதனை பரிந்துரையின்படி நுண்ணூட்டச்சத்து குறைபாடு இருப்பின் நுண்ணூட்டச்சத்து கலவையை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடவேண்டும். இலைமேல் தெளித்து தரமான இலைகளைப் பெற முடியும். இரும்பு சல்பேட் 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம், போரான் 2.5 கிராம், காப்பர் சல்பேட் 2.5 கிராம், மாங்கனீசு சல்பேட் 2.5 கிராம் மற்றும் சோடியம் மாலிப்டேட் 100 கிராம் என்ற அளவில் கலந்து தயாரிக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 250 லிட்டர் நீரில் கலந்து இலைமேல் தெளித்து தரமான இலைமகசூல் பெறலாம். இளம்புழு வளர்ப்பிற்கு இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஊட்டச்சத்து சேதம் ஆகாமல் உணவளிக்க வேண்டும். இலைகளை தரமான சாக்குப்பையினால் மூடி சரியான ஈரப்பதத்துடன் பாதுகாக்க வேண்டும். இளம்புழு வளர்ப்பிற்கு 4 முறையும் வளர்ந்த புழு வளர்ப்பிற்கு 3 முறையும் இலையினைப் பங்கிட்டு அளிப்பதால் பட்டுக்கூடு மகசூலை அதிகரிக்கமுடியும்.புதிய தொழில்நுட்பங்கள்: மல்பெரி இலைகளின் மூலம் புரதச்சத்தை சரியான அளவில் கொடுப்பதன் மூலம் தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்ய முடியும். பூச்சி, நோய் அல்லது நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் உள்ள இலைகளை புழுக்களுக்கு உணவாக அளிக்க நேரிடும்பொழுது இணை உணவாக புரதச்சத்தை இலைவழி மூலம் கொடுப்பதன்மூலம் தரமான பட்டுக்கூடுகளைப் பெறமுடியும். முதிர்ப்புழு வளர்ப்பில் 100 முட்டைத் தொகுதிக்கு சுமார் 8 கிலோ சோயா மாவினைத் தேவையான இலைகளின்மீது தூவி கொடுப்பதால் 5 கிலோ முதல் 7 கிலோ வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பட்டுப்புழுக்களுக்கு 5ம் பருவத்தில் பட்டு சுரப்பிகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஊக்கமருந்துகளை அளிப்பதன் மூலம் தரமான பட்டுக்கூடுகளைப் பெறமுடியும். அதாவது 5 மில்லி இளமதி என்னும் ஊக்கி மருந்தினை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து 100 முட்டைத் தொகுதிகளுக்கு தேவையான இலைகளில் தெளித்து புழுவின் 5ம் பருவத்தில் இரண்டாம் நாளில் உணவாகக் கொடுப்பதன்மூலம் 15 சதம் கூடுதல் பட்டுக்கூடுகளைப் பெறலாம். சம்பூர்ணா என்ற தாவர ஊக்கியை 4 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி அளவில் கலந்து 3 முதல் 5 சதவீத புழுக்கள் முதிர்ச்சி அடையும் பருவத்தில் இலைகளில் தெளித்து உணவாகக் கொடுப்பதால் ஒரே சமயத்தில் புழுக்கள் முதிர்ச்சியடைந்து தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்யலாம். (தகவல்: எஸ்.சுப்பிரமணியன், ஏ.தங்கமலர், ஆர்.பாலகுருநாதன், பட்டுப்புழுவியல் துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. 94437 68027)