கரிசல்மண்ணில் முருங்கையா
நமது தமிழகத்தின் சில கரிசல் மண்பகுதியில் செடிமுருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முழுமையாக அதன் பலனைப் பெற அவசியம் நுண்ணீர்ப் பாசனம் மேற்கொள்ள வேண்டும். கரிசல் மண்ணிற்கு அதிக நீர்ப் பாய்ச்சுவது ஆபத்தாகும். இது மண்ணை சத்துக்களை பிடித்து வைத்துக் கொள்ள செய்வதுடன் உப்பு தன்மை அதிகமானால் செடியே மஞ்சள் நிறமாகி, அடி இலைகளைக் கடுமையாக பாதிக்கும்.மண்ணில் உப்புநிலை அறிந்து நீரின் உப்புநிலை அறிந்து தான் பயிரைத் தேர்வு செய்ய வேண்டும். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி மேட்டுப்பாத்திகள் அமைத்து பயிர் செய்தால் உப்பு நீர்ப்பாதிப்பைக் குறைக்கலாம். களர் உள்ள பகுதிகளில் அதிகம் ஜிப்சம் இட்டு நீரை வடித்தால் நல்லது. தக்கைப்பூண்டு செடிகள் நன்கு வளர்ந்ததும் மடக்கி உழுதால் கண்டிப்பாக உப்பு மண் தன்மை மாறும். 3அல்லது 4 முறை இத்தகைய பசுந்தழை உர பயன்பாடு மூலம் கணிசமாக உப்பைக் குறைக்கலாம். மேலும் இத்தகைய பகுதிகளில் பல மரங்கள் சாகுபடி செய்தும் சேதத்தைத் தவிர்க்கலாம். குறிப்பாக உப்புத்தன்மை ஓரளவு உள்ள மண்ணில் அகத்திக்கீரை, புளி மற்றும் சீதா ஓரளவு வளரும். கொடுக்காப்புளி, வெஸ்ட்இண்டிய செர்ரி மற்றும் இலவன் பஞ்சு முதலிய மரங்களை லாபகரமாக வளர்க்கலாம்.தீவனப்புற்கள், கம்பு நேப்பியர் மற்றும் கொழுக்கட்டைப்புல் வகைகளை நல்ல மகசூல் தரத்தக்க அளவு மேட்டுப்பாத்தி உத்திகள் மற்றும் அதிக மண்புழு இடல் மூலம் பெறலாம். கிளைரிசிடியா, வேலி மசால், குதிரை மசால் முதலிய பயிர்களையும் நாம் நட்டு நல்ல பலன் பெறலாம். தேவைப்படும் இடங்களில் நல்ல மண், மணல், தொழு உரம், செம்மண் மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா கலவைகளை குழிகளில் இட்டு மரக்கன்றுகள் வளர்த்து பலன் பெறலாம்.இரசாயன உரங்களை தொழுஉரம் அல்லது மண்புழு உரத்துடன் 3 நாட்கள் நன்கு கலக்கி வைத்து பின்னர் அவற்றை செடிக்கு அருகில் பாக்கெட் உரமிடல் உத்தி மூலம் வைத்து பலன் பெறலாம். நிலச்சீர்த்திருத்தம் தேவைப்படும் விவசாயிகள் மண் நீர் ஆய்வு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.- டாக்டர் பா.இளங்கோவன்உடுமலை, திருப்பூர் மாவட்டம்.