உள்ளூர் செய்திகள்

"இயற்கைக்கு வழிகாட்டும் பசுந்தாள் உரங்கள்

பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி ஆகியவை, காற்றில் உள்ள நைட்ரஜனை தன்னுள் நிலைநிறுத்தி, மண்ணின் வளத்தை மேம்படுத்தும். தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிர்கள், நிலத்தின் அமில, காரத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. இவை மற்ற பயிர்களைப் போல, சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதை உற்பத்தி குறித்த விழிப்புணர்வு அவசியம்.ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்வளம் கெடுகிறது. மேலும் யூரியா அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு போக, இருபோக நெல் சாகுபடிக்கு தழைச்சத்து அதிகம் தேவைப்படும். உழவுக்கு 40 நாட்களுக்கு முன், நிலத்தில் பசுந்தாள் உர விதைகளை விதைக்கலாம். 40 நாட்கள் கழித்து, அதாவது பூக்கும் பருவத்திற்கு முன், மண்ணோடு சேர்த்து உழுதபின், நெல் சாகுபடிக்கு தயார் செய்யலாம். ஒரு எக்டேருக்கு 60 -முதல் 70 கிலோ தழைச்சத்தின் பயன்பாட்டை, பசுந்தாள் உரம் ஈடுகட்டும். 20டன் வரை கிடைப்பதால் தழைச்சத்தோடு, சுண்ணாம்பு, நூண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.நிலத்தின் நீர் தேக்கத் தன்மை, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது. நிலத்தை உழும் போது, அடிப்பகுதி அடுக்கில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, மேல்மட்டத்திற்கு கொண்டு வருகிறது. இனி வரும் காலங்களில், இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டுவது, பசுந்தாள் உரங்கள் தான். பசுந்தாள் உர விதை உற்பத்தி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.கொ.பாலகிருஷ்ணன், துறைத் தலைவர், ப. மாசிலாமணி, பேராசிரியர், விதை நுட்ப அறிவியல் துறை, மதுரை விவசாயக் கல்லூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !