உள்ளூர் செய்திகள்

கரும்பில் இடைக்கணுப்புழு கட்டுப்பாடு

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: தமிழகத்தில் கரும்பு பயிரிடப்படும் அனைத்து இடங்களிலும் காணப்படும் இந்தப்பூச்சி பெரும்பாலும் கரும்பின் பின் வளர்ச்சிப் பருவத்தில் தோன்றி, அறுவடை வரை காணப்படும். குறைந்த வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும்போது இதன் தாக்குதல் தீவிரமாகக் காணப்படும். முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள் முதலில் விரிவடையாத இளம் இலைகளை உண்கின்றன. பின் அவை கரும்பின் இடைக்கணுப் பாகத்தை துளைத்து, தண்டிற்குள் சென்று உட்திசுக்களை குடைந்து உண்டு, நீண்ட சுரங்கங்களை உண்டுபண்ணுகின்றன. தாக்கப்பட்ட கரும்பில் பெரும்பாலும் குருத்தழிவு அறிகுறி தென்படும். பூச்சி தாக்குதல் தீவிரமாக இருக்கும்போது சுமார் 25 சதம் வரை கரும்புகள் சேதப்படுத்தப்படுவதோடு அவற்றின் சர்க்கரைச் சத்தும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.பூச்சியின் வாழ்க்கைச் சரிதம்: பெண் அந்துப்பூச்சி, நீள் வட்ட வடிவ, வெண்மை நிற செதிள்களைப் போன்ற தட்டையான முட்டைகளை இரு வரிசைகளில் இளம் இலைகளின் மேற்பரப்பில் இடும். ஒவ்வொரு வரிசையிலும் 10-15 முட்டைகள் வரை காணப்படும். முட்டைகளிலிருந்து 3-4 நாட்களில் இளம்புழுக்கள் வெளிவரும். அவை முதலில் விரிவடையாத குருத்து இலைகளைசுரண்டிஉண்டு,பின்இடைக் கணுப்பாகத்தை துளைத்து தண்டிற்குள் செல்லும். புழுக்கள் துளைத்து உட்சென்ற துவாரத்தின் வழியாக கழிவுப் பொருட்கள் வெளித்தள்ளப் பட்டிருக்கும். அவை 30-40 நாட்களில் முழு வளர்ச்சிஅடையும். வளர்ந்த புழு கூண்டுப் புழுவாக மாறும் முன்னர் தண்டில் ஒரு துவாரம் உண்டுபண்ணி அதை பட்டுபோன்ற மெல்லிய இலைகளால் பின்னி மூடிவிட்டு பின் தண்டின் உள்ளேயே கூண்டுப்புழுவாக மாறி 10-15 நாட்களில் அந்துப்பூச்சியாக வெளிவரும்.பூச்சி கட்டுப்பாடு: * இடைக்கணுப் புழு தாக்காத விதைக்கரணைகளை தேர்ந்தெடுத்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். * நட்ட 150 மற்றும் 210ம் நாட்களில் தோகை உரித்து பயிரை நன்கு பராமரிப்பதன்மூலம் முட்டைகளை அழிப்பதோடு தண்டைத் துளைப்பதையும் தடுக்கலாம். * தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும். * முட்டைக் குவியல்களை சேகரித்து அழிக்கலாம். * டிரைக்கோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 20,000 வீதம் வாரத்திற்கு ஒருமுறை நட்ட 4வது முதல் 10வது மாதம் வரை விடவேண்டும். * டெலினாமஸ் இனத்தைச் சேர்ந்த சில ஒட்டுண்ணிகளும் முட்டைகளைத் தாக்கி அழிக்கக்கூடியவை. * கோ.975, கோ.62175, கோ.6506 போன்ற ரகங்கள் இப்பூச்சியின் தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியவை.முனைவர் கோ.பி.வனிதா,வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,மதுரை-625 104.முனைவர். ரா.கோபாலகிருஷ்ணன்,ரோவர் வேளாண்மைக்கல்லூரி, பெரம்பலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !