உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பகுதியில் மா விவசாயிகளின் தவிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவட்டங்களில் நமது நாட்டில் உற்பத்தியாகும் ஆல்போன்சா மாம்பழங்களின் அளவு சுமார் 50 சதவீத அளவாகும். தமிழ்நாட்டின் உற்பத்தி அளவு 25 சதவீதம்தான். மீதமுள்ள உற்பத்தி கர்நாடகா, ஆந்திராவிலிருந்து கிடைக்கிறது. ஆல்போன்சாவில் காய்ப்பு சீசன் துவங்கும்போது மழை, பனி காரணங்களால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆல்போன்சா சாகுபடியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிமை மா மாவட்டம் என்கிறார்கள். இங்கு 36 ஆயிரம் எக்டேர் பரப்பில் சுமார் 3 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்திஆகின்றது. இங்கு தோத்தாபுரி, ஆல்போன்சா, செந்தூரா, நீலம், பங்கனபள்ளி போன்ற வியாபார ரகங்கள் சாகுபடியில் உள்ளன. இவைகளில் தோத்தாபுரியில் கிடைக்கும் உற்பத்தி மட்டும் 80 சதவீத உற்பத்தியாகும். இந்த வருடம் கிருஷ்ணகிரி பகுதியில் சீசன் சரியில்லாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கிருஷ்ணகிரியில் வியாபார மா ரகங்களை விட தோத்தாபுரி ரகம் இதுவரை நல்ல பலனைக் கொடுத்துவந்தது. ஏனெனில் தோத்தாபுரி ஒரு சிறந்த பழக்கூழ் ரகம். இது ஏற்றுமதி செய்வதற்கு மிக ஏற்றது. இதனால்தான் கிருஷ்ணகிரி மற்றும் சித்தூர் போன்ற பகுதிகளில் பழக்கூழ் தொழிற்சாலைகள் அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மா பழக்கூழ் சவுதி அரேபியா, பர்ஷியன் கல்ப், ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. விற்பனையில் நூறு கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணி கிடைத்துவந்தது. எகிப்து, லிபியா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள துன்பங்களால் இந்நாடுகளுக்கு பழக்கூழ் அனுப்ப இயலாத நிலையில் கிருஷ்ணகிரி விவசாயிகள் உள்ளனர். தயாரிக்கப்பட்ட பழக்கூழ்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டிலுள்ள பழக்கூழ் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பழக்கூழ் கையிருப்பில் உள்ளது. விற்க இயலவில்லை. இதனால் தொழிற்சாலைகளை இயக்க இயலாத சூழ்நிலையில் சிரமம் தோன்றியுள்ளது. பழக்கூழ் தயாரிப்பவர்கள் கடும் நஷ்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். சென்ற வருடம் மா உற்பத்தி குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் தொழிற்சாலைகள் கஷ்டப்படுகின்றன.கிருஷ்ணகிரி பகுதியில் மா ரகங்களில் வியாபார ரகங்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது. ஓரளவு பழங்கள் காய்ப்பில் உள்ளன. தற்போது நல்ல விலையில்லை. மேலும் இந்த பழங்கள் கைக்கு வருமாவென்று தெரியவில்லை. ஆலங்கட்டி மழை வந்தால் என்னவாகும் என்று தெரியவில்லை. கிருஷ்ணகிரி விவசாயிகள் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் மாம்பழ விலை நிதானமாக உள்ளது. ஒரு வேளை மழை இல்லாவிடில் உற்பத்தி பாதிக்காது. உடனே மாம்பழ விலை கிடுகிடுவென்று ஏறிவிடும். மா விவசாயம் அடிக்கடி பருவக் கோளாறினால் பாதிக்கப் படுகிறது. இதோடு விற்பனை பிரச்னையும் ஏற்படுகின்றது.-எஸ்.எஸ்.நாகராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !