மண்வளம் பெருக்கும் கழிவுகளின் மறுசுழற்சி
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பண்ணை முறையானது உலகம் முழுவதும் பழங்காலத்தில் இருந்தே சிறு விவசாயக் குடும்பங்களில் வழக்கத்தில் இருந்த ஒரு முறையாகும். ஆனால் காலப்போக்கில் வளர்ந்த நாடுகள் இம்முறையான பண்ணையத்தில் இருந்து விலகி ஒரே ஒரு பயிர் அல்லது கால்நடை சார்ந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக வருமானம் பெற ஆரம்பித்தனர். ஆனால் இந்த துறை பண்ணையத்தில் அதிக அளவு முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் பெருகி வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப, உற்பத்தி செய்வதும் மிகவும் கடினமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளை எதிர் கொண்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு சிறந்த வழிமுறையாகும். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது விவசாயம், கால்நடை வளர்ப்பு (கறவை மாடு, கோழி, வாத்து வளர்ப்பு) காய்கறிகள் பயிரிடுதல், மரம், பூச்செடி, காளான், மீன் வளர்ப்பு, மண் புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு ஆகிய வருமானம் தரக்கூடிய துறைகளை தனித்தனியாக பண்ணையமாக செய்வதற்கு பதிலாக ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து பண்ணையம் செய்வது ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இம்முறை பண்ணையத்தில் ஒரு துறையில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மற்றும் உட்பொருட்களை மற்றொரு துறைக்கான ஈடுபொருட்களாக பயன்படுத்தலாம்.அதாவது வேளாண்மை மற்றும் கால்நடை கழிவுகளை உபயோகிப்பதன் மூலம் இம்முறையான பண்ணையத்தில் வருவாய் பெருக்க முடியும். அது மட்டும் அல்லாமல் அதிகப்படியான விவசாய கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் மூலமாக இயற்கையான முறையில் விவசாயம் செய்வதோடு உரங்கள் வாங்குவதற்கான செலவும் குறையும்.காடுகளின் வருமானத்துடன், எதிர் காலத்தில் மரக்கட்டைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலும். மேலும் இத்தகைய பண்ணையத்தில் தீவன பயிர்களை ஊடு பயிர்களாகவோ அல்லது எல்லை பயிர்களாகவோ பயிரிடும்போது கால்நடைகளுக்கு சத்தான தீவனம் கிடைக்கிறது. விவசாயத்தின் மூலம் கால்நடைகளில் இருந்து கிடைக்கும் பால், முட்டை, இறைச்சி போன்றவற்றின் மூலமாகவும் விவசாயிகளுக்கு தேவையான புரதம், வைட்டமின், கார்போ ைஹட்ரேட், தாது உப்புக்கள் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவு கிடைக்கிறது. தொடர்புக்கு 95662 53929.- எம்.ஞானசேகர் விவசாய ஆலோசகர், சென்னை.