உள்ளூர் செய்திகள்

செம்பழுப்பு நிற கல்லுருண்டை அரிசி

செம்பழுப்பு நிறத்தில் உருண்டை போல திரண்டிருந்த கல்லுருண்டை அரிசியை பார்த்ததும் இதை சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. எங்கள் ஊர் குறுமணல் கலந்த களிமண் பூமி என்பதால் கல்லுருண்டை நெல் சாகுபடிக்கு ஏற்றது என்றனர். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தபோது கை மேல் பலன் கிடைத்தது என்கிறார் மதுரை மேலுார் பெருமாள்பட்டியைச் சேர்ந்த விவசாயி சருவன். இயற்கை சாகுபடியும் கல்லுருண்டை நெல் அறுவடை குறித்தும் அவர் கூறியதாவது: நான்கரை ஏக்கரில் நெல், டிராகன் பழம், அத்திப்பழம், காய்கறிகள் பயிரிடுகிறேன். தேன் பெட்டிகள், மீன் பண்ணை உள்ளது. நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். கொடுக்காபுளி, நாவல், நெல்லி, சீத்தா பழமரங்களோடு டிம்பர் வகைக்காக குமிழ், தேக்கு, மலைவேம்பு மரங்கள் வளர்க்கிறேன். எல்லாமே இயற்கை முறையிலான ஒருங்கிணைந்த பண்ணையம் தான். விவசாய முன்னோடி ஆலங்குடி பெருமாள் என்பவர் ஒரு ஏக்கருக்கு கால் கிலோ கல்லுருண்டை நெல் விதை போதும் என்றார். அதேபோல குறுகிய கால பயிர்களுக்கு 45 செ.மீ., இடைவெளி, நீண்ட கால பயிர்களுக்கு ஒற்றை நாற்றுக்கு இடையே 60 செ.மீ., இடைவெளியும் போதும் என்று சொன்னதை பரீட்சார்த்தமாக செய்ய நினைத்தேன். ஏக்கருக்கு ஒரு கிலோ கல்லுருண்டை நெல் விதையை வாங்கினேன். கடந்த புரட்டாசி பட்டத்தில் விதைத்து 20 முதல் 24 நாட்கள் வரை நாற்றாக உருவாக்கினேன். இது 120 நாட்கள் பயிர் என்பதால் 45 செ.மீ., வீதம் இடைவெளி விட்டு ஒற்றை நாற்றாக நடவு செய்தேன். நோய் தாக்குதல் இல்லை. இடைவெளி விட்டு நடும் போது பயிர்களுக்கு சூரியவெளிச்சம், காற்று கிடைத்தது. மேலும் பாரம்பரிய ரகங்களான தில்லைநாயகம், துாயமல்லி நெல்சாகுபடி செய்தேன். நிலக்கடலை, ஆமணக்கு விதை நடவு செய்தேன். கடலையை விரைவில் அறுவடை செய்ய உள்ளேன். மீன் வளர்ப்புக்கு 40க்கு 30 அடி நீள அகலத்தில் ஐந்தடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்து கட்லா, சி.சி. மீன்குஞ்சுகளை விட்ட போது 10 கிலோ அளவு மீன்களை அறுவடை செய்தேன். பெரியளவில் மீன்கள் வளரவில்லை. தோட்டத்தில் உரத்தயாரிப்பு இயற்கை விவசாயம் என்றாலே எதையும் வெளியில் இருந்து வாங்கக்கூடாது என்பது தான். பஞ்சகாவ்யம், மீன்அமிலம், ஜீவாமிர்தம் தயாரிக்கிறேன். மாட்டு எரு, மாட்டுகோமியம், கடலை மாவு, சர்க்கரை, கைப்பிடி மண் இவ்வளவு தான் உரத்திற்கான மூலப்பொருட்கள். கரைத்து வைத்து ஒருநாள் வைத்திருந்தால் ஜீவாமிர்தம், 48 மணி நேரம் வைத்திருந்தால் அமிர்தகரைசல். தோட்டத்திலே யே 200 லிட்டருக்கு உரம் தயாரித்து செடிகளுக்கு தெளித்தேன். 120 நாட்களில் 20 மூடை அளவு கல்லுருண்டை நெல் கிடைத்தது. ஒரு மூடைக்கு 70 கிலோ நெல். இதை மற்ற விவசாயிகளுக்கும் விதையாக விற்றேன். அரிசி விற்பனை தற்போது நெல்லை அவித்து அரிசியாக்கி விற்கிறேன். இது பட்டை தீட்டாத பழுப்புநிற அரிசி. பட்டை தீட்டினால் சத்துகள் போய்விடும். கருப்பு கவுனி அரிசியை போல, சமைப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக ஊறவைக்க வேண்டும். இட்லிக்கு அரைக்கலாம். இதை விட சிறப்பு என்னவென்றால் சாதம் சமைத்து இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து மறு நாள் பழைய சோறாக நீராகாரத்துடன் சாப்பிடுவது தான். இதை சாப்பிட்டால் செரிமானம் தாமதமாகும் என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. இதை குறைந்தளவே சாப்பிட முடிவதால் எடை மேலாண்மைக்கும் இந்த அரிசி உதவுகிறது. அரிசி கேட்பவர்களுக்கு அவ்வப்போது மில்லில் அரைத்து கொடுக்கிறேன் என்றார் சருவன். இவரிடம் பேச 92813 43214. -எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !