உள்ளூர் செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

முருங்கை பழ ஈ: செடிமுருங்கைசாகுபடியில் முருங்கை காய்களைத் தாக்கும் முக்கிய பூச்சி இது. ட்ரோசொபிலா என்ற சிறிய வகையைச் சேர்ந்த இந்த பழ ஈக்கள் முருங்கை பிஞ்சுகளைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. பிஞ்சுகள் வளர ஆரம்பிக்கும்போது மெல்லிய தோல்களில் முட்டையிடுகின்றன. இரண்டு மூன்று நாட்களில் வெளிவரும் கால்கள் இல்லாத வெண்மை நிற புழுக்கள் திசுக்களைச் சாப்பிடும். பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும். தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும். பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்துவிடும்.காய்களில் பிளவுகளிலிருந்து துர்நாற்றம் வீசும்.7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும். கூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியைத் தொடங்கும்.கட்டுப்பாடு: பாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேக ரித்து மண்ணில் புதைத்தோ அல்லது நன்கு தீயிட்டோ எரித்துவிட வேண்டும். மண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர 2-3 முறை உழவு செய்து காயவிட வேண்டும்.காய்களின்மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதைத் தடுக்க 3 சதம் வேப்ப எண்ணெய்க் கரைசல் தெளிக்க வேண்டும். முருங்கை பூக்கும் தருணத்தில் மேங்க்ளர் (சாக் தயாரிப்பு) 30 மிலி / 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பிஞ்சு வளர ஆரம்பித்து 20 முதல் 30 நாட்களில் மறுமுறை 'மேங்க் ளர்' அதே அளவு தெளிக்க வேண்டும். அடுத்து 15 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் மேங்க்ளர் தெளிக்க வேண்டும்.50 சதவீதம் காய்கள் உருவான நிலையில் அதாவது இரண்டாவது முறை மேங்க்ளர் பயன்படுத்துவதற்கு பதில் நிம்பிசிடின் 0.03 சதம் அளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் நீம் சீட் கொணல் எக்ஸ்ட்ராக்ட் (என்எஸ்கேஇ) 2 லிட்டர்/மரம் ஊற்றினால், பழ ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம்.தூதுவளை: ஒரு கொடி இனத்தைச் சேர்ந்தது. செடி முழுவதும் கூரிய முட்கள் காணப்படும். சிறிதாக உடைந்த இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். பூக்கள் இலைக்கோணல்களில் தனியாக மலரும். பூக்கள் கருநீலத்திலும், பழங்கள் உருண்ட வடிவில் அடர்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.தூதுவளையின் இலை, பூ, பழங்கள், வேர்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பயன்படுகின்றன. இலைகள் சளி, இருமல், எலும்புருக்கி, ஆஸ்துமா ஆகிய நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறது. பூக்கள் உடல் உரமேற்றியும், ஞாபக சக்தியைத் தூண்டவும், இருமலைப் போக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இருதயக் கோளாறுகள், மலச்சிக்கல், சுவாசக்கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தவும், ஆஸ்துமாவை நீக்கவும் பயன்படுகிறது.தூதுவளை விதைகள் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகளை நாற்றங்காலில் விதைத்து, நல்ல வாளிப்பான நாற்றுக்களைப் பிடுங்கி நடவு செய்ய வேண்டும். விதைகள் விதைத்த ஒரு வாரத்தில் முளைக்கும். தூதுவளை அனைத்து வகையான மண்ணில் வளர்ந்தபோதிலும், நல்ல வளர்ச்சிக்கு மணற்பாங்கான செம்மண் நிலமே ஏற்றது. செடிகளை 1 மீ து 1மீ இடைவெளியில் நிலத்தில் நீர் பாய்ச்சி நடவு செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு 25 டன் தொழு உரம், தழை, மணி, சாம்பல் சத்துக்களை 70:40:20 கிலோ என்ற அளவில் உரமாக இடவேண்டும். நடவு செய்த 60 நாட்களுக்குப் பின்னர் இலைகளை அறுவடை செய்ய வேண்டும். (தகவல்: முனைவர் இல.நளினா, முனைவர் ஆர்.எம்.விஜயகுமார், மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்- 641003. போன்: 0422-661 1365)மொந்தன் ரக கறிவாழை - சாகுபடி பற்றி அனுபவங்களை திருவண்ணாமலை மாவட்டம் பண்ணைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை தெரிவிப்பது: அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். நிலத்தில் வடிகால் வசதி அவசியம். நிலத்தை நன்கு உழுது மண்ணைப் பொலபொலப்பாக மாற்றி, செடிக்கு செடி, வரிசைக்கு வரிசை ஏழரை அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், அகலம் குழிகள் எடுத்து 1 வாரம் வரை ஆறப்போட்டு 5 கிலோ தொழு உரத்துடன் மேல் மண்ணைக்கலந்து குழியை நிரப்ப வேண்டும். பின்னர் பாசனம் செய்து, 2 மாத வயதுள்ள கன்றுகளை குழிகளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3ம் நாள் உயிர்த்தண்ணீரும் பின் வாரம் ஒரு தண்ணீரும் கொடுத்தால் போதுமானது. 30ம் நாள் இடைஉழவு செய்து, களை நீக்கம் செய்து, 90ம் நாள் 1 டன் மண்புழு உரத்துடன் 50 கிலோ காம்ப்ளக்ஸ், 25 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து மரத்துக்கு ஐந்தரை கிலோ வீதம் வைத்து மண் அணைத்து விட வேண்டும். நடவு செய்த 7 மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். 9-12 மாதங்களில் அறுவடை செய்யலாம். 25 சென்டுக்கு செலவு போக நிகர லாபம் ரூ.18,000 கிடைத்துள்ளது. தொடர்புக்கு: அண்ணாமலை, 89730 93432)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !