சின்னச்சின்ன செய்திகள்
சோயா பீன்ஸ் ஜே.எஸ்.95-60: தமிழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள புதிய ரகம் இது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் விவசாய பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. சோயா ரகங்களான ஜேஎஸ்.335, 93-05, 97-52 ஆகியவை மிகவும் பிரபலமான ரகங்களாகும். இதில் ஜேஎஸ்.335 சோயாரகம் இப்போது மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜே.எஸ்.95-60ன் சிறப்பியல்புகள்: வயது 75-85 நாட்கள். நல்ல முளைப்புத்திறன், வெடிக்காத காய்கள், 4 மணிகள் கொண்ட காய்கள் அதிகம். சாயாத தன்மை, வேர் அழுகல் நோய்க்கு எதிர்ப்புசக்தி, மண்ணில் அதிக ஈரப்பதம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மஞ்சள்தேமல் நோய்க்கு எதிர்ப்புசக்தி கொண்டது. மானாவாரியாக பயிர் செய்யும்போது மழையளவு குறைவாக உள்ள பகுதிகளிலும் மேட்டுப்பகுதியான நிலங்க ளிலும் சாகுபடி செய்ய ஏற்றது. மகசூல்: ஏக்கருக்கு 1000 கிலோ முதல், 1400 கிலோ வரை. ஊடுபயிருக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக கரும்பு, மஞ்சள், வாழை, பருத்தி, மரவள்ளி, தென்னை, எண்ணெய் பனை, மல்பெரி ஆகியவற்றுடன். தற்சமயம் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு: ம.சேவியர் பால்ராஜ், உதவி பொது மேலாளர், சக்தி சுகர்ஸ் லிமிடெட், சோயா பிரிவு, 180, பந்தய குதிரை சாலை, கோவை-641 018. மொபைல்: 94431 37338.குமுள், குமிள், குமுளா - Gmelina arboreal குடும்பம் வெர்பனேசி. இம்மரம் வறட்சியையும், வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது. செம்பெறை முதல் சுண்ணாம்பு வரை பல்வேறு மண்ணிலும் வளரும். ஆழமான இரு மண்ணில் செழிப்பாக வளரும். ஈரச் செழிப்புள்ள பள்ளத்தாக்குகளில் MSL 1500 மீ. உயரம் வரை வளர்கிறது. ஆண்டு மழை 750 மி.மீ அவசியம். 10 ஆண்டுகள் வரை வேக வளர்ச்சி; தை, மாசியில் இலையுதிர்த்து சித்திரையில் புது இலைகள் உருவாகும்.வாய்க்கால் கரைகள், கண்மாய்களுக்கு மிக உகந்தது. நேரடி விதைப்பு, நாற்று நடவு, போத்து நடவு, கிளை ஒட்டு முனை ஒட்டு மூலம் நடவு செய்யலாம். விறகுக்கு 2 மீ x 2 மீ இடைவெளி, மரத்துக்கு 3 மீ x 3மீ இடைவெளி. துரித வளர்ச்சி, பாசனமுள்ள இடங்களில் 12-15 ஆண்டுகளில் வெட்டலாம். தனி மரமானால் அகன்ற தழையமைப்புடன் வளரும். தோப்பானால் 2 அடி விட்டத்தில் 30மீ உயரம் வரை வளரும். வெட்டியபின் அக்கட்டை துளிர்க்கும். ஒப்படர்த்தி 0.42 கனமீட்டர், எடை 480 கிலோ. நிறம் - பழுப்பு மஞ்சள்; நெருங்கிய ரேகைகள், மிருதுவானது, உழைக்கும். எளிதில் அறுத்து இழைக்கலாம். பாலிஷ் ஏறும். கனமில்லாத, அதே சமயத்தில் வலுவான சாமான்கள், மேஜை நாற்காலிகள், படகுகள், பலகைகள் செய்திட ஏற்றது. தீப்பெட்டி, தீக்குச்சி, பிளைவுட்டும் தயாரிக்கலாம். இலைகள் நல்ல கால்நடைத் தீவனம்.சூரியகாந்தியில் விதை கடினப்படுத்துதல்: சூரியகாந்தி ஒரு குறுகியகாலப் பயிர். இப்பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். தண்ணீர் தேவை குறைவு. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. எல்லாவகை மண்ணுக்கும் ஏற்றது. எண்ணெய் வித்துப் பயிர்களில் மிகச்சிறந்த ஓர் பயிராகும். சூரியகாந்தி எண்ணெய் இருதய நோய்க்கு மிகவும் சிறந்தது. வார்னிஷ், பெயின்ட் மற்றும் சோப்பு தயாரிக்க பயன்படுகிறது. சூரியகாந்தி புண்ணாக்கில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம். இதை ஊடுபயிராகவும் கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம். இத்தகைய நன்மைகள் நிறைந்த சூரியகாந்திப் பயிரில் மகசூல் இழப்பைத் தவிர்க்க விதையைக் கடினப் படுத்தி பயன்படுத்தலாம் என விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் (பொ) ப.ராமநாதன் தெரிவிக்கிறார். சூரியகாந்தி விதைகளைக் கடினப்படுத்துவதற்கு 2% துத்தநாக சல்பேட் கரைசலில் (ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரில் 20 கிராம் துத்தநாக சல்பேட்) 12 மணி நேரம் ஊறவைத்து அதன்பிறகு விதைத்தால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு வறட்சியைத் தாங்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் கரைசல் தேவைப்படும். -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.