உள்ளூர் செய்திகள்

நவீன தொழில் நுட்பத்துடன் கரும்பு நாற்றுகள்

பசுமைக்குடில் அமைத்து தண்ணீர் சிக்கனத்துடன் நவீன தொழில் நுட்பத்தில் கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியில், மதுரை பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் முருகானந்தம் ஈடுபட்டுள்ளார். கரும்பு நாற்றில் நவீன தொழில் நுட்பம்: சாதாரணமாக கரும்பு நடவுக்காக கரும்பின் பகுதியில் இரண்டு கணு அல்லது மூன்று கணு உள்ளவாறு வெட்டி ஏக்கருக்கு (இருபரு கரணை, முப்பரு கரணை) 30 முதல் 35 ஆயிரம் கரணைகள் நடவு செய்ய வேண்டும். நடவு செய்து ஒரு மாதம் கழித்துதான் எந்தந்த பகுதியில் கரணை வளரவில்லை என்பது தெரியவரும். அந்த இடத்தில் வேறு கரணை நடவு செய்ய வேண்டும். தற்போது கரும்பில் கணுவின் சிறு பகுதியை மட்டும் செதுக்கி எடுத்து நாற்றுகள் வளர்த்து பின்னர் நடவு செய்யும் நவீன தொழில் நுட்பம் வந்துள்ளது. அலங்காநல்லூருக்கு உட்பட்ட 12 பகுதிகளில் ஒரு லட்ச ரூபாய் மானிய உதவியுடன் இந்த கரும்பு நாற்றுகள் வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன முறை கரும்பு நாற்று உற்பத்தி செய்யும் பணியில் பாப்பாபட்டி ஊராட்சித் தலைவரான முருகானந்தம் ஈடுபட்டுள்ளார்.முருகானந்தம் கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., அரசியல் விஞ்ஞானம் படித்து விட்டு 2001 முதல் எனது தந்தை பார்த்த விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறேன். அன்று முதல் ஆண்டு தோறும் சுமார் பத்து முதல் 12 ஏக்கர் வரையில் கரும்பு பயிரிட்டு வருகிறேன். 2011ல் அலங்காநல்லூர் கூட்டுறவு கரும்பு ஆலையில் இருந்து, நவீன தொழில் நுட்பமாக கரும்பு நாற்று உற்பத்தி செய்யும்படி ஆலோனை வழங்கினர். மேலும், இந்த திட்டத்திற்கு ஒரு லட்சம் வரை மானிய உதவி கிடைக்கும் என்றும் கூறினர். அதைத் தொடர்ந்து பசுமைக்குடில் அமைத்து கரும்பு நாற்று உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், எனது சொந்த நிலத்திற்கும் பயன்படுத்தி வருகிறேன். சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 30 ஆயிரம் இருபரு கரணை தேவைப்படுகிறது. இதற்கு பதினைந்தாயிரம் ரூபாய் மற்றும் போக்குவரத்துச் செலவும் ஏற்படும். நவீன தொழில் நுட்பத்தில் கரும்பின் ஒரு கணுவில் உள்ள பரு பகுதியில் சிறிய அளவில் வெட்டி எடுத்து பிளாஸ்டிக் டிரேக்களில் தென்னை நார் கம்போஸ்ட் மற்றும் உரங்கள் கலந்து வளர்க்கப்படுகிறது. நாற்று நடவின் மூலம் ஏக்கருக்கு ஐந்தாயிரத்து 500 நாற்றுகள் மட்டும் தேவைப்படுகிறது. இதற்கு ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். எட்டு முதல் ஒன்பது மாதம் வயதான கரும்பின் கணுவில், சிறு பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதால் சுமார் நான்கு முதல் ஐந்துடன் கரும்பு மிச்சமாகிறது. ஒருமாதம் வரை நாற்றுகள் பசுமைக்குடிலில் பராமரிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கரும்பு பயிரிட ஒருமாதம் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டியதும் மிச்சமாகிறது.தற்போதுள்ள பசுமைக்குடிலின் மூலம், ஒரு லட்சம் கரும்பு நாற்றுகள் தயாரிக்க முடியும். நாற்று ஒன்று உற்பத்தி செய்ய ஒரு ரூபாய் வரை செலவாகிறது. விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் முப்பது காசுகளுக்கு விற்பனை செய்கி றோம். இதுதவிர காய்கறி, பயறு வகை நாற்றுகளும் இங்கு உற்பத்தி செய்து தருகிறோம். அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான மழைக்காலத்தில் கரும்பு நாற்றுகள் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்து தருகிறோம் என்றார். தண்ணீர் பற்றாக்குறை, நேரப்பற்றாக் குறை என வேகமாக செல்லும் காலத்திற்கேற்ப நவீன முறையில் விவசாயத்தில் ஈடுபடும் இவரை பாராட்டவும், ஆலோசனைகள் கேட்கவும் 89409 29289 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !