பயிர் சாகுபடிக்கு தேரி நில மேலாண்மை
நீடித்த நிலையான வேளாண்மைக்கு மண்வளம் மிகவும் இன்றியமையாததாகும். மண் சார்ந்த இடர்ப்பாடுகள் காரணமாக பயிரின் விளைதிறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு வளம் குன்றிய மண் வகைகளிலும் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தமிழகத்தில் தேரி நிலம் என்பது வளம் குன்றிய மண் வகையைக் கொண்டதாகும்.தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சார்ந்த பகுதிகளில் செம்மணல் குன்றுகளும் செம்மணல் பரப்புகளும் ஏறத்தாழ 20,000 எக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ளன. இம்மணல் பரப்பை தேரி நிலங்கள் என குறிப்பிடுகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேரி நிலங்கள் 11,000 எக்டர் நிலப்பரப்பில் உள்ளன. அவை குதிரைமொழி, திசையன் விளை, உவரி, உடன்குடி, சூரன்குடி, புதுக்கோட்டை மற்றும் நங்கைமொழி ஆகிய பகுதிகளில் உள்ளன. தேரிநிலத்தில் மண்ணின் ஆழம் ஏறத்தாழ 150 செ.மீ. வரை இருக்கும். ஜூன் - ஜூலை மாதங்களில் காற்று மணிக்கு50 முதல் 70 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசும். இந்த நிலங்கள் அதிக வடிகால் திறனும், மிதமான அமில நிலையும் கொண்டு மிதமான சரிவுகளில் காணப்படுகின்றன. இம்மண் வகைகளில் அங்ககக்கரிமம் மற்றும் களியின் அளவு மிகக் குறைவாக இருப்பதால் மண் துகள்கள் ஒருங்கிணைக்கப் படாமல் தனித்தனியாக காணப்படும். இந்நிலங்களில் பனை, முந்திரி, வேம்பு, கருவேல் ஆகிய மரங்கள் வளரும். நிலத்தடி நீர் அதிகமுள்ள இடங்களில் நிலக்கடலை, முருங்கை, மலர்கள் ஆகிய பயிர்களையும், வாழை, நெல் மற்றும் தென்னை ஆகிய பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர். மண் அரிமானம், குறைந்த நீர் பிடிப்புத்திறன், குறைந்த மண்வளம் காரணமாக இம்மண் வகைகளில் விளைதிறன் மிகக் குறைவாக இருக்கும்.தேரி நில மேலாண்மை: ஓ மக்கிய தென்னை நார்க்கழிவை எக்டருக்கு 25 டன்கள் என்ற அளவிலோ, வண்டல் மண்ணை எக்டருக்கு 10 டன்கள் என்ற அளவிலோ மண்ணில் இட்டு மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துதல் ஓ ஊட்டமேற்றிய மணிச்சத்து உரத்தை பயிருக்கு அளிக்க வேண்டும். ஓ மண் அரிமானத்தைத் தடுக்க உயிர் தடுப்புகளை அமைத்து காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஓ மண் மற்றும் நீர் பாதுகாப்பு உத்திகளைக் கையாள வேண்டும்.சி.சுதாலட்சுமி, ச.மகிமைராசா, வெ.வேலு மற்றும் அ.ர.முகமது ஹாரூன், மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை,வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,மதுரை-625 104.