வெண்டைச் செடியை தாக்கும் மஞ்சள் நரம்பு தேமல் நோய்
வெண்டை பயிரை தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள் நரம்பு தேமல் நோயாகும். இந்நோய் வெண்டை பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்நோய் ஒருவித நச்சுயிரி நோயாகும்.நோயின் அறிகுறிகள்: ஆரம்பத்தில் இலை ஓரங்களிலிருந்து நரம்பு வெளுத்து காணப்படும். நாளடைவில் இலைப் பாகத்திலுள்ள நரம்புகள் கிளை நரம்புகள் யாவும் வெளுத்து தோன்றும். புதிதாக தோன்றும் இலைகளிலும் கிளை நரம்புகள் வெளுத்து காணப்பட்டு இடைப்பாகம் மட்டும் பசுமையாக இருப்பதால் வலை பின்னப்பட்டிருப்பதை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். நாளடைவில் இலைப்பாகம் முழுவதுமே வெளுத்து தோன்றும். இலையின் அடிப்பாகத்திலுள்ள நரம்புகள் பெரியதாயிருக்கும். எனினும் இலைகளிலிருந்து வெளி வளர்ச்சி தோன்றாது. வெண்டைக்காய்கள் ஒழுங்கற்ற வடிவத்தை பெறுவதுடன் குட்டையாகி வெளுத்து காணப்படும். வெள்ளை ஈக்கள் இந்நோயை பரப்புகின்றன. இதே நச்சுயிரி களைகளையும் தாக்குகின்றன. எனவே களைகளிலிருந்து இந்நச்சுயிரி வெண்டை செடிகளுக்கும் பரவும் வாய்ப்புண்டு.கட்டுப்பாடு: இந்நோய் தோன்றும் களைச் செடிகளை அழித்து விடுதல், பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்கும். நோய்க்கண்ட செடிகளை அப்போதைக்கப்போது களைந்தெறிதல் அவசியம். ஒரு லிட்டருக்கு 'இமிடாகுளோபிரிட்' 5 மில்லி வீதம் கலந்து விதைத்த 25, 35, 45 வது நாட்களில் தெளித்தால் நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலந்து தெளிக்கலாம்.- முனைவர். ரா.விமலா, தலைவர்பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்துார்