உள்ளூர் செய்திகள்

குட்டை வெட்டி மீன் வளர்க்கலாம்

சிவகங்கை அருகே கூலிப்பட்டியை சேர்ந்த விவசாயி பாண்டிக்குமார் 30, தனது வறண்ட தோட்டத்தில் பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்க்கிறார். இதன் மூலம் தினமும் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறார்.சிவகங்கையில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிக்கவே தண்ணீர் கிடைக்காத போது விவசாயம் செய்ய தண்ணீருக்கு எங்கே போவது, என்ற நிலையில் பெரும்பாலான விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு திரும்பியும், பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தும் வருகின்றனர்.'கடும் உழைப்பா, வறட்சியா ஒரு கை பார்த்து விடலாம்,' என கூலிப்பட்டியை சேர்ந்த விவசாயி பாண்டிக்குமார் களத்தில் குதித்தார். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கள்ளிச்செடிகள் மண்டிக்கிடக்கும் வனப்பகுதி அது. மான்கள், மயில்கள், காட்டு முயல்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூலிப்பட்டி குக்கிராமமும் ஒன்று.பண்ணைக்குட்டைதனது ஒரு ஏக்கர் வறண்ட நிலத்தில் தலா 6 அடி ஆழம், 40 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பண்ணைக்குட்டைகளை அமைத்தார். இவரது கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கைக்கு கை மேல் பலன் கிடைத்தது. கடந்த 2018 ல் பெய்த பருவமழைகள் கை கொடுத்தன. மழை நீர் பண்ணைக்குட்டைகளை நிரப்பியது. கடல் போல் காட்சியளித்த பண்ணைக்குட்டைகளில் கட்லா,ரோகு, கெண்டை, மிர்கால் போன்ற மீன் ரகங்களின் குஞ்சுகளை கடந்த ஆறு மாதத்துக்கு முன் விட்டார். தற்போது சதைப்பிடிப்புடன் மீன்கள் நன்கு வளர்ந்தது. பண்ணைக்கே நேரடியாக வந்து தினமும் மீன்களை வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் தினமும் கணிசமான லாபம் கிடைக்கிறது. பண்ணைக்குட்டை அமைக்க செலவான தொகையும் திரும்ப கிடைத்து வருகிறது.'ஆவி'யாகும் தண்ணீர்பாண்டிக்குமார் கூறியதாவது: பண்ணைக்குட்டை அமைக்க அரசு மானியம் உண்டு. எனினும், மானியம் பெறுவதற்காக வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் அலைந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எடுத்த காரியம் சித்தம் பெற வேண்டும், என தீர்க்கமான முடிவெடுத்து களத்தில் இறங்கினேன். தற்போது கோடை வெயில் நையப்புடைக்கிறது. பண்ணைக்குட்டை ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. மற்றொன்றில் நான்கு அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. எனினும், வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தினமும் ஒரு இஞ்ச் அளவுக்கு தண்ணீர் ஆவியாகி வருகிறது.தினமும் ரூ.500 லாபம்இதை சரிக்கட்ட ஆழ்துளை கிணற்று நீரை பண்ணைக்குட்டைக்கு திருப்பி விடுகிறேன். மதுரை சாத்தமங்கலம், ஒத்தக்கடை தனியார் மீன் பண்ணைகளில் இருந்து கட்லா, ரோகு, கெண்டை, மிர்கால் போன்ற மீன் குஞ்சுகளை கடந்த ஆறு மாதத்துக்கு முன் விட்டேன். தற்போது விலைக்கு விற்கும் அளவுக்கு நன்கு வளர்ந்துள்ளது. மீன்களுக்கு கோதுமை தவிடு, காய்கறி கழிவுகளை தருகிறேன்.மீன் விற்பனை மூலம் தினமும் 500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. பண்ணைக்குட்டை தண்ணீரை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தேவையான தீவனப்புற்கள் வளர்க்கிறேன். பண்ணைக்குட்டையில் தண்ணீர் வற்ற ஆறு மாதம் ஆகலாம். கோடை மழை, பருவ மழைகள் கைகொடுத்தால் போதும், என்றார். தொடர்புக்கு 99526 96201.- கா.சுப்பிரமணியன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !