இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள் பயன்பாடு ஹோட்டல்களில் சுகாதாரத்துறை சோதனை
பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இட்லி அவிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்தனர்.மக்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்காக, கர்நாடக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவுகளின் தரத்தை கண்காணிக்கிறது. இதற்கு முன்பு பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கேக், சிக்கன் கபாப், பிஷ் கபாப் உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்துவதை கண்டுபிடித்தது.இந்த செயற்கை நிறமூட்டி, மனிதனுக்கு தீங்கு விளைவிப்பவை. இத்தகைய செயற்கை நிறமூட்டிகளை உணவுகளில் பயன்படுத்த, சுகாதாரத்துறை தடை விதித்தது.சாலையோர தள்ளுவண்டிகள், உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் இருந்து மாதிரி சேகரித்த சுகாதாரத்துறை, ஆய்வகத்துக்கு அனுப்பியது.இவற்றில் இட்லியை பற்றி வந்துள்ள அறிக்கை, அதிர்ச்சி அளிக்கும்படி இருந்தது. இட்லியை வேக வைக்க பிளாஸ்டிக் பயன்படுத்துவதால், அவற்றில் அபாயமான அம்சங்கள் இருப்பது தெரிந்தது. இதை சாப்பிட்டால் புற்றுநோய் உட்பட, பல நோய்கள் ஏற்படும் என, அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.இதை தீவிமாக கருதிய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ஹோட்டல்கள், தர்ஷினிக்கள் உட்பட, எந்த இடத்திலும் இட்லி தயாரிக்க, பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என, தடை விதித்தார். அமைச்சரின் உத்தரவுபடி, சுகாதார அதிகாரிகள், அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.பெங்களூரின், பல இடங்களில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.எந்த முறையில் இட்லி தயாரிக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டனர். சில இடங்களில் இருந்த பிளாஸ்டிக் தாள்களை, பறிமுதல் செய்து எச்சரித்தனர். வரும் நாட்களில் இட்லி அவிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவோருக்கு, அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.