பைக் மீது ஆட்டோ மோதல் 2 வாலிபர்கள் பலி
தொட்டபல்லாபூர்: சரக்கு ஆட்டோ மோதியதில், பைக்கில் வேலைக்கு சென்ற இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூர் துபகெரே கிராமத்தை சேர்ந்தவர்கள் நந்தன், 22, ரவிகுமார், 24. இவர்கள் இருவரும் தொட்டபல்லாபூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டனர். நந்தன் பைக்கை ஓட்டினார். தொட்டபல்லாபூர் அருகே ராமயனபாளையா பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென முதியவர் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க, நந்தன் பைக்கை திருப்பினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் சறுக்கியது. இருவரும் பைக்கில் இருந்து விழுந்தனர். பின்னாள் வந்த சரக்கு ஆட்டோ, நந்தன், ரவிகுமார் மீது ஏறியது. தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் பரிதாபமாக இறந்தனர். தொட்டபல்லாபூர் போலீசார் விசாரிக்கின்றனர்.